Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை இல்லை! ட்ரம்பின் விசா அரசியல்

 

 

குறைவான ஊதியம், வேலையின்மை போன்ற காரணங்களால் இந்தியாவிலிருந்து மக்கள் பல நாடுகளுக்கும் பணி புரிவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதற்காக அந்தந்த நாடுகள் பணி உரிமை ஒப்பந்த விசாக்கள் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் அமெரிக்கா வழங்கும் விசாதான், ஹெச் 1 பி. இது தவிர, எல் 1 ஏ மற்றும் பி விசாக்களும் வழங்கப்படுகின்றன.

மனிதவள அரசியல்!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மனிதவளம் என்பது மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. இவர்களுக்குத் தேவையான, திறமையான ஆட்களை எந்த நாட்டிலிருந்தும் அவர்களால் எடுத்துக்கொள்ள முடியும். உள்நாட்டில் இருப்பவர்கள் திறமை குறைவாக இருந்தாலும் அவர்களை வேலைக்கு எடுத்தால் அதிக ஊதியம் வழங்க வேண்டியிருக்கும். இதனால், செலாவணி மதிப்பு அடிப்படையில் குறைவான ஊதியம் கொடுத்து திறமையான நபர்களை இந்தியா போன்ற மனிதவளமும் திறமையும் மிக்க நாடுகளில் இருந்து வேலைக்கு எடுத்துக்கொள்கிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இங்கு கிடைப்பதைக் காட்டிலும் அங்கு அதிக ஊதியம் கிடைக்கிறது. இதுதான் அதிக அளவிலான நபர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்குக் காரணம்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் விசாக்கள்!

அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு 65,000 விசாக்களையும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 விசாக்களையும் வழங்குவதற்கு அந்த நாட்டு இமிக்ரேஷன் சட்டம் வழி செய்கிறது. பல்கலைக்கழகங்களிலும், லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை செய்வதற்கான விசாக்களுக்கு வரம்பு எதுவும் இல்லை என்பதால், ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஹெச் 1 பி விசா சட்டம் 1990-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த ஹெச் 1 பி விசா திட்டம் மூலம் வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு வரும் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் கொடுத்து நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகரித்துக்கொண்டன.

பிற நாடுகளை ஒப்பிடுகையில், அமெரிக்காவுக்கு இந்த விசாவின் கீழ் வேலைக்குச் செல்கிறவர்களின் எண்ணிக்கையில் இந்தியாதான் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் இந்த விசாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் இரண்டு லட்சத்துக்கும் மேலானோர் விண்ணப்பிக்கின்றனர். அவற்றில்,அதிகபட்சமாக 1.25 லட்சம் விசாக்கள் வரை அனுமதிக்கப்படுகின்றன. 2010-ல் 1.17 லட்சம் விசாக்களும், 2011-ல் 1.29 லட்சம் விசாக்களும் வழங்கப்பட்டன. இவற்றில், 80 சதவிகிதம் ஐ.டி துறை நிறுவனங்களுக்கானவை. டி.சி.எஸ்., விப்ரோ, மைக்ரோசாஃப்ட், இன்டெல், ஐ.பி.எம்., காக்னிசன்ட் உள்ளிட்ட பல ஐ.டி துறை நிறுவனங்கள் இந்த விசாக்களைப் பெற்றுத் தங்கள் பணியாளர்களை அமெரிக்கா அனுப்புவதில் முன்னிலை வகிக்கின்றன. 2 லட்சத்துக்கும் மேலான விசாக்களில் இருந்து 85,000 விசாக்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் இருப்பதால் குலுக்கல் முறையில் எடுக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலும், ட்ரம்பின் அதிரடியும்!

அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப், ஹெச் 1 பி விசாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மேலும், ''அமெரிக்காவில் குடியேற்றத்தை அனுமதிக்கக் கூடாது... அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கான நாடாக இருக்க வேண்டும்'' என்று முழங்கி வருகிறார்.

மேலும் தொழிலதிபரான அவர், தனது நிறுவனங்களிலேயே இந்த விசாவின் கீழ் ஏராளமானோரைp பணியில் அமர்த்தி லாபம் பார்த்து வருவது அமெரிக்காவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் எதிரானது என்பதையும் ஒப்புக்கொண்டு, இதனை முற்றிலும் ஒழிப்பேன் என்று தனது வாதத்தை முன்வைத்தார். ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தின் தலைமையாளராக ஸ்டீபன் பேனன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹெச் 1 பி விசாவுக்கு, ட்ரம்ப்க்கு நிகரான தீவிர எதிர்ப்பாளர் இவர். எனவே, இவருடைய இனிவரும் பிரசார யுக்திகள் ஹெச் 1 பி விசாவை முன்வைத்து காய் நகர்த்த வாய்ப்புள்ளது.

தற்போது குடியேற்றம் என்பது பல நாடுகளுக்கு முக்கியப் பிரச்னைகளாக மாறியுள்ள நிலையில், அமெரிக்காவிலும் குடியேற்றம் என்பது அரசியல் மற்றும் தேர்தல் களங்களில் முக்கிய விவகாரமாக இதன் மூலம் மாறியுள்ளது. ஏற்கெனவே விசாவுக்கான கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால், விசா பிரச்னை இந்திய ஐடி துறைக்குப் பாதகமாக மாறலாம். ஏனெனில், இந்த விசா அடிப்படையில் இந்திய ஐடி துறைக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் வருகிறது.

ட்ரம்புக்கு எதிர் போட்டியாளரான ஹிலாரி கிளின்டன், ஹெச் 1 பி விசாவுக்கு ஆதரவாகவே உள்ளார். இவருக்கு ஏற்கெனவே பல முன்னணித் தலைவர்களின் ஆதரவு உள்ள நிலையில், இவரது பிரசார யுக்திகளால் மக்களிடமும் கார்ப்பரேட்களிடமும்கூட நல்ல செல்வாக்கைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுகிறாரோ, இல்லையோ அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை தங்களின் உரிமை பறிபோகிறதோ என்று நினைக்கத் தொடங்கிவிட்டால் நிச்சயம் ஹெச் 1 பி விசா விவகாரம் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. அப்படி எடுத்தால் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படவும், ஏற்கெனவே பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

- ஜெ.சரவணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close