Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு! - ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் (70) கடும் போட்டியில் உள்ளனர். இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் ஹிலாரிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. ஆனாலும் டிரம்ப் சோர்ந்துவிடாமல், ஹிலாரி மீது எதிர்ப்பு கணைகளை வீசி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு விமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். அதற்கு அவர், 'டிரம்ப் ஃபோர்ஸ் ஒன்' என்று பெயரிட்டுள்ளார். மேலும், தனது பிரசாரக் கூட்டங்களுக்கு அந்த விமானத்தைப் பயன்படுத்தும் அவர், மற்றொரு தனி விமானத்தில் செய்தியாளர்களை பிரசார இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.

இதைப் போலவே தற்போது ஹிலாரியும் நாடு முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்வதற்காக புதிய போயிங் 737 விமானத்தை பயன்படுத்துகிறார். அந்த விமானத்திற்கு, 'ஹிலாரி ஃபோர்ஸ் ஒன்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதில், 40 செய்தியாளர்களை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சில பிரசாரக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், தனது புதிய பிரசார விமானத்தில் பயணம் செய்தபடி ஹிலாரி, செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி அளிக்கும்போது, ''அமெரிக்க அதிபர் தேர்தல் நடவடிக்கையில் எதிரி நாடு தலையிடுகிறது. மிகத் தீவிரமான பிரச்னையை நாம் எதிர்நோக்கி உள்ளோம். ஜனநாயகக் கட்சி இணையதளத்தில் அந்த நாடு ஊடுருவியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா மேலும் ஊடுருவலில் ஈடுபட வேண்டும் என்கிற தொனியில் நம் நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றின் வேட்பாளர் கூறி வருகிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.

அப்போது ஒரு செய்தியாளர், ''அப்படியென்றால், அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்பை தேர்ந்தெடுப்பதற்கு ரஷ்யர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஹிலாரி, ''அமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த ஊடுருவல் நடவடிக்கை செயல்கள் நடக்க ஆரம்பித்ததாக நான் கருதுகிறேன். இது, கவனிக்க வேண்டிய விஷயம். ரஷ்ய அதிபர் புதினின் கொள்கைகளுக்குத் தனது ஆதரவை டிரம்ப் வெளியிட்டார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடுகிறது என்கிற புகார், உளவுத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. நமது ஜனநாயக முறையிலான தேர்தலில் ரஷ்யத் தலையீட்டுக்கான வாய்ப்பு உள்ளது என்பது கவலையளிப்பதாக உள்ளது" என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட முயன்று வருவதாக கூறப்படுவது குறித்து அமெரிக்கப் புலனாய்வு மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. மேலும், அமெரிக்க தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர் இந்த விசாரணையை ஒருங்கிணைத்து வருகிறார் என்றும் அந்த நாளிதழ் தெரிவித்திருந்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹிலாரி பதில் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக ஹிலாரி சுட்டிக்காட்டி இருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ