Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரமேஷ் ராஸ்கர்: அமெரிக்காவின் உயர்ந்த பரிசை வென்ற இந்திய விஞ்ஞானி!

  

 “லெமெல்சன் – எம்.ஐ.டி பரிசு” எனப்படும் அமெரிக்காவின் உயர்ந்த பரிசுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ரமேஷ் ராஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் பரிசுகளில் அதிக மதிப்புடைய  பரிசு இதுதான். 500,000 அமெரிக்க டாலர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கு வழங்குவார்கள். யார் தன்னுடைய எண்ணங்களை கண்டுபிடிப்புகளாக மாற்றி, இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு இது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிசை பெற்றுள்ளார் ரமேஷ் ராஸ்கர். இவர் பல புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்ததோடு பல இளம் கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்கியுள்ளார். 

    எம்.ஐ.டி-யில் மீடியா கலை மற்றும் அறிவியல் துறையில் துணைப்பேராசிரியாராக பணியாற்றும் இவர் தான் எம்.ஐ.டி-யில் கேமரா கலாச்சார ஆராய்ச்சிக் குழுவை தோற்றுவித்தவர். இவர் தன் பெயரில் 75 மேற்பட்ட காப்புரிமைகளை வைத்துள்ளார். ஃபெம்டோ போட்டோகிராபி முறை, ஒளியின் பாதையை பார்க்க உதவும் கேமரா, குறைந்த செலவில் கண் பார்வை பிரச்சனைகளுக்கு தீர்வு பெற உதவும் ஐ-நெட்ரா கருவி, புத்தகத்தை திறக்காமலே உள்ளே என்ன உள்ளது எனப் படிக்க உதவும் கருவி ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் சில.

    இவர் 1970-ம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்ற இடத்தில் பிறந்தார். இவர் புனே பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்தார். சபெல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார். பின் 2007-ம் ஆண்டு எம்.ஐ.டி-யில் தன் பணியை துவங்கினார். தற்போது 46 வயதாகும் இவர் எம்.ஐ.டி-யில் மீடியா கலை மற்றும் அறிவியல் துறையில் துணைப்பேராசிரியாராக பணியாற்றி வருகிறார்.

    லெமெல்சன் - எம்.ஐ.டி-யின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் கௌச் ராஸ்கர் குறித்துக் கூறுகையில், "ராஸ்கர் பல முகங்கள் கொண்ட மனிதர், ஒரு கண்டுபிடிப்பாளார், ஒரு கல்வியாளர், மாற்றத்தை உருவாக்குபவர், சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி இந்த உலகத்தில் உள்ள மாணவர்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் இணைத்து ஆக்கப் பூர்வமான மாற்றத்திற்கு வழி வகுக்கிறார்” என்று கூறியுள்ளார்.

இவரின் சில கண்டுபிடிப்புகள் இங்கே..

 ஐ-நெட்ரா: 

    ஐ-நெட்ரா, இது ஒரு குறைந்த செலவில் கண் பார்வை பிரச்சனைகளைக் கண்டறிய உதவும் கருவி. இந்த கருவி கண்ணில் உள்ள குறைபாடுகள் என்னவென்று கண்டறிந்து அதன் தாக்கத்தையும் அளக்கும் ஒரு சிறிய சாதனம். தற்போது இது இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் கண் பிரிச்சனைகளை அறிய பயன்படுத்தப்படுகின்றது.

எல்.வி.பி - மித்ரா:

    2013-ல் ராஸ்கர், தன்னுடன் பணிபுரிபவர்களுடன் இணைந்து உருவாக்கியதுதான் இந்த எல்.வி.பி – மித்ரா. இது எம்.ஐ.டி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள எல்.வி பிரசாத் கண் மருத்துவமனை இணைந்து செயல்படுத்தும் ஒரு திட்டம். இந்த திட்டத்தின் நோக்கம் கண் குறைபாடுகளை கண்டறியவும், கண் குறைபாடுகளுக்கு தீர்வு காணவும் புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான். 

ஃபெம்டோ போட்டோகிராபி:

    இது ரமேஷ் ராஸ்கரின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பு. ஒரே ஒரு வினாடியில் ஒரு ட்ரில்லியன் புகைப்படங்கள் எடுப்பதுதான் இது. இதுவரை ஒளியின் நகர்தலை நம் கண்களால் பார்த்திருக்க மாட்டோம். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் அது சாத்தியமானது. 2 பிகோ வினாடிகளுக்கு ஒரு முறை ஒரு புகைப்படம். அதவது ஒளி பயணிக்கும் ஒவ்வொரு 0.6 மிமீ துரத்திற்கு ஒரு புகைப்படம். 
    இது மட்டுமின்றி இன்னும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கிறார் இவர்.  தான் பெற்ற பரிசுத்தொகையின் ஒரு பகுதி இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கப் பயன்படுத்தவேண்டும் என்பதே அவரின் ஆசை.

- முரளி.சு
மாணவப் பத்திரிகையாளர்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close