Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைபடத்தில் இடமில்லை! - சுஷ்மா

நியூயார்க்: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைபடத்தில் இடமில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு பதிலடி தந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71-வது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், காஷ்மீரில் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பர்ஹான் வானியை இளம் தலைவர் என்று புகழ்ந்து பேசினார். மேலும், காஷ்மீரில் இந்தியா நிகழ்த்தி வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினைதான் உரி தாக்குதல் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசி உள்ளார். கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, ''காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யாராலும் மாற்ற முடியாது. காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. காஷ்மீரை அபகரித்துவிடலாம் என்ற கனவை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.

காஷ்மீர் குறித்து இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் கூறும் குற்றச்சாட்டுகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. உரிமை மீறல்களை நிகழ்த்துவதாக மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன் பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண மக்கள் மீது அந்நாட்டு அரசு மிகவும் மோசமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. இதுதான் அரசே நடத்தும் ஒடுக்குமுறைகளில் மிகவும் மோசமானது.

பேச்சுவார்த்தைக்கு இந்தியா நிபந்தனைகளை விதிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசி உள்ளார். என்ன நிபந்தனைகளை நாங்கள் விதித்தோம் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு பதவியேற்றபோது நிபந்தனை விதித்தா? அவரை வரவேற்றோம். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு செல்லும் முன் நிபந்தனை எதுவும் விதிக்கப்பட்டதா? சமீபத்தில் பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த பல முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. ஆனால் அதற்கு பதிலாக பதான்கோட்டிலும், உரியிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கு எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன.

ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் ஒருநாட்டில் (பாகிஸ்தான்) மட்டுமே சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இதுபோன்ற நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும். ஐ.நா. போன்ற அமைப்புகளில் இருந்து அந்த நாடுகளை நீக்க வேண்டும். இந்த நாடுகள் பயங்கரவாதிகளைப் பாதுகாத்து வளர்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. அவர்களை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தத்தை ஐ.நா.வில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதம் தான் உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில் இடமில்லை" என்று கூறினார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ