Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

90 சதவீத மக்கள் நச்சுக் காற்றையே சுவாசிக்கின்றனர்! - WHO கவலை

ஜெனிவா: உலக மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் மாசடைந்த காற்றையே சுவாசித்து வாழ்கின்றனர். இதில், பெருநகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

உலக அளவில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான பகுதிகளில் காற்றின் மாசுபாட்டை பரிசோதித்த உலக சுகாதார அமைப்பு, இது குறித்து விரிவான புள்ளிவிவர அறிக்கையை தயாரித்து உள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், அந்த அறிக்கையில் உள்ள முக்கிய கண்டுபிடிப்புகளை உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரிவின் தலைவரான மரியா நீரா சுட்டிக்காட்டினார்.

மேலும் அப்பொது அவர், ''மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். அதில் 90 சதவீதம் மரணங்கள் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் நிகழ்வதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 92 சதவீதம் பேர், உலக சுகாதார அமைப்பால் அனுமதிக்கப்பட்ட 2.5 மைக்ரோ மீட்டருக்கும் அதிகமான மாசுகலந்த கெட்ட காற்றையே சுவாசித்து வருகின்றனர். பொது இடத்தில் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள காற்றுமாசைவிட, வீடுகளுக்குள் நிலக்கரி போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்துவதால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, வடகிழக்கு ஆசியாவின் சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளும் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.

இந்த பாதிப்பை மக்களின் சுகாதாரம் சார்ந்த அவசர நிலையாக கருதி, விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கை பரிந்துரைத்து உள்ளது. அதனால், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த, உடனடி நடவடிக்கையை உலக நாடுகள் தொடங்க வேண்டியது அவசியத்தில் உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ