Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50 கோடி பயனர்களின் தகவல்களை திருட்டுக் கொடுத்தது யாஹு..!?

 

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய ப்ரைவசி அமைப்பை  வாடிக்கையாளர்களின் விவரங்களை முகநூலுடன் இணைக்கும் விதமாக மாற்றியதற்கு உலகளவில் பெறும் கண்டனத்தை பெற்றது. இதனை மிஞ்சும் வகையில் வாட்ஸபை விட டெக் உலகில் மூத்த நிறுவனமான Yahoo செய்துள்ள காரியம் மக்களிடையே கண்டனத்தோடு மட்டுமல்லாமல் பெறும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய அனைத்து பயன்பாட்டாளர்களின் இன்பாக்ஸிற்கு வரும் மெயில்களை ஒன்று விடாமல் அமெரிக்காவின் உளவுத்துறையான FBI மற்றும் NSA கண்காணிக்க ஏற்ற வகையில் FBIன் வேண்டுகோளுக்கிணங்க ஒரு மென்பொருளை Yahoo நிறுவனமே சென்ற வருடம்  உருவாக்கி தந்துள்ளது. 


தன்னுடைய 280 மில்லியன் வாடிக்கையாளர்களின் இமெயில் டேட்டா அனைத்தையும் FBIயிடம் ஒப்படைத்து விட்டது Yahoo. இந்த மென்பொருளை Yahooவின் மூன்று முன்னாள் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் அரசானையை ஏற்று Yahooவின் தலைமை நிர்வாக அதிகாரி மரிசா மேயர் Yahooவின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமஸிடம் கூட கலந்தாலோசிக்காமல் இந்த மென்பொருளை தயாரிக்க உத்தரவிட்டார், இது Yahooவின் பல மூத்த அதிகாரிகளை வெறுப்படையச் செய்தது.இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் ஸ்டாமஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார், தற்பொழுது இவர் முகநூலின் தகவல் பாதுகாப்புத் துறை அதிகாரியாக உள்ளார்.

இதில் கேலிக்கூத்தான விஷயம்  என்னவென்றால் Yahooவின் தகவல் பாதுகாப்புத் துறையிடம் கலந்தாலோசிக்காமல் தங்கள் நிறுவனம் தயாரித்த மென்பொருளை FBI பயன்படுத்தி Yahooவின் டேட்டாக்களை படிக்க ஆரம்பித்தவுடன் Yahooவின் தகவல் பாதுகாப்புத் துறையினர் தங்கள் சர்வருள் Hacker யாரோ நுழைந்துவிட்டதாக பதறிவிட்டனர். பின்புதான் அவர்களுக்கு புதிய கண்காணிப்பு மென்பொருளைப் பற்றி நிறுவனத்தின் மேலிடத்தால் விளக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே அலெக்ஸ் ஸ்டாமஸ் பதவி விலகினார். பதவி விலகையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் தன்னால் பணியாற்ற இயலாது என்று தன் சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார் ஸ்டாமஸ்.

அமெரிக்க உளவுத்துறை தரப்பில் இது தீவிரவாதத்துக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சமாதானம் கூறப்பட்டாலும் இதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்த விஷயம் வெளியான நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் இதுபோல் வாடிக்கையாளர்களின் இமெயில் டேட்டாக்களை கண்காணிப்பதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால் Yahoo விடம் வைத்த கோரிக்கையைப் போல் FBI வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கேட்டுள்ளதா என்று தெரியவில்லை, எதிர்காலத்தில் அதுவும் நடக்க வாய்ப்புள்ளது.இதுபோல் மென்பொருள்கள் நம் வீட்டின் கதவை திறந்துவிடுவது போல்.உளவுத்துறை  மட்டுமல்லாமல் hackerகளும் நம் தகவல்களை அறிந்து கொள்ள இது வழிவகுக்கும்.இதனை அவர்கள் எந்த நாச காரணத்திற்காகவும் பயன்படுத்தும் அபாயமுள்ளது.

நான் Yahoo பயன்படுத்தவில்லை,Gmail பயன்படுத்தும் நான் ஏன் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றீர்களா? இந்த மெய்நிகர் உலகில் உங்களுடைய தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு இங்கில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நாம் அன்றாடம் மொபைலில் பயன்படுத்தும் பல மென்பொருள்கள் நமக்கு தெரியாமலே நம் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு Google Allo, Amazonன் Echo ஸ்மார்ட் ஸ்பீக்கர் நம் உள்ளிடும் தகவல்களை அதன் சர்வரில் சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கான ஒரே தீர்வு End to End Encryption முறையில் உள்ள மென்பொருளை பயன்படுத்துவதே என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.End to End Encryption (E2EE) என்பது நாம் அனுப்பும் தகவல் எதிர் முனையில் யாருக்கு தகவல் அனுப்பப்பட்டதோ அவரால் மட்டுமே படிக்க முடியும் வகையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பான வழிமுறையாகும்.

இன்று Yahoo எடுத்த முடிவைப் போல் நாளை மற்ற நிறுவனங்களான Google, Microsoft எடுக்க வாய்ப்புள்ளது. Google அமெரிக்க உளவுத்துறையின் உத்தரவை எதிர்த்து போராடும் என்று நாம் நம்ப விரும்பினாலும் Yahooவும் இதற்கு முன் இதைப் போல சட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளது என்பதை மறக்க  முடியாது.
இந்த இணைய உலகில் நம் செயல்களை திரைக்கு பின்னிருந்து பல ஜோடி கண்கள் கண்காணித்துக் கொண்டுள்ளன. இங்கே நம்முடைய தனியுரிமையை பாதுகாக்கும் பொறுப்பு நம்மையே சாரும்.

- க.விக்னேஸ்வரன்
மாணவப் பத்திரிகையாளர்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ