Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சே’ என்னும் மந்திரச் சொல்!

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுதினம் இன்று.

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.

1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.

கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.

‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.

‘சே’வின் கடைசி நிமிடங்கள்!

1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரர்களுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.

குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.

‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.

‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.

“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.

எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.

கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”

“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த!

- ஜெ.அன்பரசன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close