Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

850 டன் கற்கள்...35 ஆண்டுகள்... ஒரு முதியவர் - " தி கிரேட் வால் ஆஃப் அலபாமா"

டைம் மிஷினில் கொஞ்சம் ஏறுங்கள்... இது நடப்பது 1830 களில்...

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் இருக்கும் டென்னஸ்ஸி ஆற்றங்கரையோரம். அது நீளமாகவும் அகலமாகவும் இருக்கும். இரு பக்கங்களிலும் அடர்ந்த காடு...பறவைகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அதனாலேயே இதைப் "பாடும் ஆறு" என்று சொல்வார்கள். அந்தக் காடுகளையும், ஆற்றையும் சுதந்திரமாக சுற்றி வருகிறாள் தே - லே - நே என்ற அவள். " நீ பிறந்த போது அறுத்த தொப்புள் கொடியை இந்த ஆற்றில் தான் வீசினேன்... இந்த ஆறு உன் சகோதரி..." என்று அவள் அம்மா சொன்னதை மனதில் திடமாக நிறுத்திக் கொண்டாள்.

 அமெரிக்காவின் பூர்வகுடி இனங்களை அழித்தொழிக்கும் பெரும் திட்டத்தை தீட்டுகிறார்கள் வெள்ளையர்கள். "இயூச்சி" இனத்தைச் சேர்ந்த இவர்களும்... அலபாமாவில் இருந்து துரத்தி அடிக்கப்படுகிறார்கள். ஓக்லஹாமாவை வந்தடைகிறார்கள். ஆனால், அவளுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன் சகோதரியான ஆற்றை பார்க்க வேண்டும் என்ற ஆவல்... துணைக்கு யாரும் வரத் தயாராக இல்லை... தனியாக நடக்கிறாள். பல போராட்டங்கள், பல பிரச்சினைகளைக் கடந்து,  5 ஆண்டுகள் கழித்து கடற்கரையை அடைகிறாள். அங்கேயே வாழ்ந்து செத்து மடிகிறாள். 

நிகழ் காலத்திற்கு வாருங்கள்... இது தான் நம் மூதாதையரின் கதை என்று டாம் ஹெண்ட்ரிங்ஸிற்கு சொல்கிறார் அவரின் பாட்டி. அன்றிலிருந்து தன் மூதாதையப் பாட்டிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதன் பொருட்டு இயூச்சி இனத்தைச் சேர்ந்த பலரையும் சந்திக்கிறார். அப்போது ஒரு முதியவர் " இந்த உலகில் எல்லாம் அழிந்துவிடும்... கற்கள் மட்டுமே நிலைத்திருக்கும்..." என்று சொல்கிறார். 1980 யில் இதைக் கேட்ட டாம், அன்றிலிருந்து இன்று வரை கற்களைக் கொண்டு ஒரு நினைவிடம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். 

" இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும், என் பாட்டியின் பயணத்தின் ஒவ்வொரு அடியைக் குறிக்கிறது. சீராக இல்லாமல், உயரமும், குட்டையுமுமாய் இருக்கும் இந்த சுவர் அவர் பயணத்தின் போது சந்தித்த இன்னல்களைக் குறிக்கும்..."

என்று சொல்கிறார்  87 வயதாகும் டாம் ஹெண்ட்ரிக்ஸ்.1980களில் இருந்தே இதை செய்ய ஆரம்பித்தாலும், கடந்த பத்தாண்டுகளாகத் தான் இதைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளார் டாம். இது குறித்த விளம்பரங்களையும் அவர் செய்ததில்லை. ஒருவர் மூலம் ஒருவர் சொல்லி, இன்று உலகளவு புகழ் பெற்றுள்ளது இந்த " தி கிரேட் வால் ஆஃப் அலபாமா".

தன் பாட்டி குறித்த வரலாறையும், "இயூச்சி" இனத்தின் வரலாறையும் இணைத்து " இஃப் தி லெஜெண்ட்ஸ் ஃபேட்" (If The Legends Fade ) என்ற நாவலை எழுதியுள்ளார் டாம். அன்றைய அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் உத்தரவின் பேரில், பூர்வகுடிகளை அவர்களின் நிலத்தை விட்டு அப்புறப்படுத்துகிறார்கள். இதை வரலாற்றில் " கண்ணீர்ப் பாதை" (TRAIL OF TEARS) நிகழ்வாகக் குறிப்பிடுகிறார்கள். கடும் குளிர் காலத்தில் கால்நடையாக பல நூறு மைல்களைக் கடக்க வற்புறுத்தப்பட்டார்கள். இந்த இடப்பெயர்வு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 4000 பூர்வகுடிகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 

ஒக்லஹோமா நகருக்கு அகதிகளாய் வந்தடையும் அந்த பூர்வகுடிகளுக்கு கழுத்தில் எண் பொறித்த சங்கிலிகள் மாட்டப்படுகின்றன. தே - லே - நே விற்கு எண் 59 கொடுக்கப்படுகிறது. இன்றும் அரசின் ஆவணங்களில், "அலபாமா பெண்மணி - 18 வயது - இறந்துவிட்டார்" என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.  பல போராட்டங்களைக் கடந்து தன் நிலத்திற்கு வந்து சேரும் தே - லே - நே அங்கு ஜோனதன் என்பவருடன் காதல்வயப்பட்டு, அவரோடு வாழ்ந்து ... அகதியாய் அல்லாமல் அமைதியாய், சுதந்திரத்தோடு இறந்து போகிறார் . இது போன்ற வரலாறுகளைப் படித்துவிட்டு வருபவர்களுக்கு இந்த சுவர் வெறும் கற்களாக மட்டும் தெரிவதில்லை. 

" இங்கிருக்கும் போது எனக்கும், என் மூதாதையருக்குமான ஏதோ ஓர் நெருக்கத்தை உணர முடிகிறது. இதில் ஒரு புனிதத் தன்மை இருக்கிறது..." என்கிறார் ஜெனிஃபர். அமெரிக்க பூர்வகுடியான இவர், அடிக்கடி இந்த சுவரைக் காண வருகிறார். 

" இதுவரை 850 டன் கற்களை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளில் 3 ட்ரக்குகளை மாற்றியுள்ளேன். அவைகளுக்கு 22 வீல்களை மாற்றியுள்ளேன். இதுவரை 2,700 ஜோடி கையுறைகளை இதற்காக பயன் படுத்தியுள்ளேன். மூன்று நாய்களை வளர்த்துள்ளேன். எல்லாம் மாறிவிட்டன... மாறாதது நான் மட்டும் தான். ஆனால், இனி கற்கள் எடுப்பதை நிறுத்தப் போகிறேன். வயசாகிவிட்டது ஒன்று. மேலும், உலகம் முழுவதிலுமிருந்து பலர் இதைக் காண வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரிக்க வேண்டும்..." என்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் பேசுபவரிடம்...

" நீங்கள் யார்? ஒரு கலைஞர்? ஒரு பொறியாளர்?"...என்று கேட்டால்.

" நான் ஒரு வயசான, பைத்தியக்கார கிழவன்..." என்று சொல்லி, சின்ன சிரிப்போடும், பெரும் காதலோடும் அந்த கற்களைத் தடவியபடியே அங்கிருந்து நடக்கிறார்...

கற்கள் சிலிர்த்துக் கொள்கின்றன.

-இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close