Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"உரி" தாக்குதலை குறிவைக்கும் ராகுல்... வீடியோ-ஆதாரத்துக்கு ரெடியாகும் மோடி !

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, ஈராக், சிரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எதிர்க்குரல் கொடுக்கும் நாடுகளை சேர்ந்த, பொது மக்கள் இந்த தீவிரவாத கும்பலின் கைகளில் பணயக் கைதிகளாக அவ்வப்போது சிக்கிக் கொள்கின்றனர். 

பணயக் கைதிகளின் உயிரை கொடூரமாக பறிக்கும் வீடியோ காட்சிகளை ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் வெளியுலகப் பார்வைக்கு அனுப்பி வைத்து ' எங்களிடம் வாலாட்டினால் இதுதான் கதி' என்று எச்சரித்தும் வருகின்றனர். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் அண்மைய மிரட்டலாக ஈராக்கின் மோசூல் நகர் அவர்கள் கையில் சிக்கியிருப்பதைச் சொல்லலாம். 'மோசூல் நகரை மீட்பதற்காக முழு வீச்சில் தாக்குதல் நடத்துவோம்' என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்துள்ளது இப்போதுள்ள நிலை. 

இந்தியாவிலும் இவர்களின் ஆதிக்கம் நிலைபெறும் வேலைகள் நடந்து வருவதாக தேசிய புலனாய்வு முகமை அவ்வப்போது 'ரெட்-அலெர்ட்' போட்டுக் காட்டுகிறது. காஷ்மீரில் 'உரி' ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலால்தான் (18. 9.2016) அண்மையில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் " என்கிற இந்தியாவின் உறுதியான குற்றச் சாட்டும் அதன் தொடர்ச்சியே.

பாகிஸ்தானுக்கு பதிலடியாக அடுத்த 10-வது நாள் (செப்டம்பர் 28–) நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்த இந்தியா, அங்கிருந்த 7- தீவிரவாத இயக்க முகாம்களை மொத்தமாக அழித்தது. இந்த ஆபரேசனில் 40–பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

'இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது, நிஜமா?, நாடகமா?' என்ற கேள்வியை, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற சில எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன.

தாக்குதல் நடத்தியதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிடவேண்டும் என்று, அவை மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. "ராணுவ வீரர்களின் ரத்தத்துக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொள்கிறார். அவர்களது தியாகத்துக்கு தரகு வேலை பார்த்து மோடி பயன்அடைகிறார் " என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன் வைத்த விமர்சனமும் கடுமையானது.

பா.ஜனதா எம்.பி. கந்தூரி தலைமையிலான ராணுவத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், ராணுவ துணைத் தளபதி பிபின் ரவாத், பாகிஸ்தான் எல்லைக்குள் ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றிய விரிவான விளக்கத்தை கொடுத்த போதும் எதிர்க்கட்சிகள், தங்களுடைய விமர்சனத்தை நிறுத்திக் கொள்ள வில்லை.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டைக் தாண்டிச் சென்றுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழைந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது...என்று  எதிர்க் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்படலாம் என்கிறது டெல்லித் தகவல் !

வெளி விவகார ங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு, (இதில் ராகுல் காந்தி, சசிதரூர் எம்.பி (காங்) உள்ளனர்) வெளியுறவு செயலாளர், உள்துறை செயலாளர், ராணுவத் துறை செயலாளர், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ஆகியோர் கொண்ட உயர் அதிகாரிகள் இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றனர், ஆனால் கூட்டத்தின் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாக வில்லை.

இந்த விளக்கத்தின்போது, தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் எம்.பி.க்களுக்கு போட்டுக் காட்டும் திட்டமும் இருந்தது இங்கே கவனிக்கத் தக்கது.ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்த தாக்குதல் குறித்த விளக்கத்துக்கு முன்னதாகவே, 'கோவா' வின் 'பிரிக்ஸ்' மாநாட்டின், நிறைவு நாளன்று (ஞாயிறு) பிரதமர் மோடி ஓப்பனாக உடைத்திருக்கிறார்.

"இந்தியாவின் அருகில் உள்ள ஒரு நாடு (பாகிஸ்தான்) தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி தனது அரசியல் லாபங்களுக்காக பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியும் வருகிறது. இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் பயங்கரவாதத்தை இணைக்கும் தாயகமாகவும் அந்த நாடு திகழ்கிறது" என்று பேசியுள்ளார் மோடி.

நெல்லையில் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்ட, சுபுஹானி காஜா மைதீன், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முக்கியப் பொறுப்பிலுள்ள நபர் என்கிறது தேசிய புலனாய்வு முகமை.

"தமிழ்நாடு, கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் எங்கள் இயக்கத்திற்கு தலா ஒன்று என்ற அளவில், தலைமை பயிற்சி மையம் உள்ளது, இதன் கட்டுப் பாட்டில் இந்த 3 மாநிலங்களிலும், 20 பயிற்சி மையங்கள் இருக்கிறது" என்று சொல்லி விசாரணையின் போது சுபுஹானி காஜா மைதீன் அதிர வைத்திருக்கிறார். 

இந்தியாவிலுள்ள பயிற்சி மையங்களை சுபுஹானி காஜா மைதீன்தான் தலைமை தாங்கி நடத்தி வந்துள்ளார். இந்தியாவில் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டங்கள் அழகாக 'மேப்' வடிவில், தீவிரவாதக் குழுக்களிடம் இருக்கவும் இவர்தான் திட்டமிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்துவதற்கான தயார் நிலைக்கு, கடந்த சில மாதங்களாகவே ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை சேர்த்து வைக்கும் பணிகளை ஐ.எஸ். ஐ.எஸ் ஆதரவாளர்கள் செய்து வந்துள்ளனர்.

ஆயுத சேமிப்பு மற்றும் பயிற்சி மையங்களுக்கு வளைகுடா நாடுகள் மற்றும் சிரியாவிலிருந்து இதற்கான பண உதவி கிடைத்துள்ளதும் இந்த பயிற்சி மையங்களுக்கான ஆட்களை, சுபுஹானி காஜா மைதீன் தான் நேர்காணல் மூலம் தேர்வு செய்துள்ளார் என்ற தகவலும், உறுதியாகியுள்ளது... 'நேர்காணலில் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பலமில்லாத ஆட்களை தேர்வு செய்வதில்லை. ஆனாலும் அவர்களை 'போர் முனை' யில் இருக்கும் படை வீரர்களுக்கு மருத்துவம், உணவு, ஆடை பராமரிப்பு போன்றவற்றுக்கு பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்' என்று சுபுஹானி காஜா மைதீன் விசாரணையில் சொல்லியிருக்கிறார் என்கிறது காவல் துறை வட்டாரம்.

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) தலைமையகம், டில்லியில் இருந்து இயங்கி வருகிறது. தென் மாநிலங்கள் என்ற அளவில் தெலங்கானா, கேரளாவில் மட்டுமே இதன் கிளை அலுவலகங்கள் உள்ளன. சென்னையில், தற்காலிக அலுவலகம் மட்டுமே உள்ளது.

கோவை குண்டு வெடிப்பு, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதி களுக்கு உளவு பார்த்ததாக இலங்கையின் அருண் செல்வராஜ் கைது போன்றவை மட்டுமே சென்னை, பூந்தமல்லி, தடா கோர்ட்டில் நடந்து வருகிறது. வேறு முக்கிய வழக்குகள் ஏதும் தமிழகத்தில் இல்லாமல் இருந்தன. 

தமிழகத்திலும் தற்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது உறுதியாகியுள்ளதால் தமிழகத்திலும் என்.ஐ.ஏ. வுக்கான கிளை அலுவலகம் அமைக்கும் முடிவில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. சிரியாவில் சில மாத காலம் தங்கியிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சுபுஹானி காஜா மைதீன் போர்ச் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளதை அதற்கான காரணமாகச் சொல்லி, தமிழகத்தில் கிளை அமையப் போவதை என்.ஐ.ஏ.உறுதிப் படுத்தியுள்ளது.

என்.ஐ.ஏ. வட்டாரங்களில் பேசிய போது, "ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிலிருந்து போர்முனை வாழ்க்கை பிடிக்காமல் தப்பித்து வந்தவர், சுபுஹானி காஜா மைதீன், இடையில் ஒருமுறை அவர் அதே ஐ.எஸ். ஐ.எஸ். ஆட்களிடம் சிக்கிக் கொண்ட போது, அவர்கள் (ஐ.எஸ்.ஐ.எஸ். ராணுவ கோர்ட்) கோர்ட்டில்  சுபுஹானி காஜா மைதீனை ஆஜர் படுத்தியுள்ளனர். "மீண்டும், சுபுஹானி காஜா மைதீனை போர் முனைக்கு அனுப்புவதே அவர் தப்பித்துப் போக முயற்சி செய்ததற்கு நாம் அளிக்கும் தண்டனை " என்று தீர்ப்பு வந்துள்ளது. சுபுஹானி காஜா மைதீனுக்கு இவ்வளவும் நடந்த பின்னர் யாராலோ அவர் காப்பாற்றப் பட்டு, இந்தியாவிற்கு திரும்பி விட்டார். நாங்களும் (என்.ஐ.ஏ) அவருடைய சூழலை புரிந்து கொண்டு சுதந்திரமாக இங்கே வாழ அனுமதித்தோம். 

எங்களுடைய கண்காணிப்பில்தான் வைத்திருந்தோம். சராசரி மனிதனாக மாறிய பின்னர்தான் அவர் மீதான கண்காணிப்பைக் குறைத்தோம். அதை சுபுஹானி காஜா மைதீன், தவறாக பயன்படுத்திக் கொண்டதோடு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய ஐ.எஸ். ஐ.எஸ். தொடர்புகளை விரிவு படுத்திக் கொண்டு விட்டார்.

சுபுஹானி காஜா மைதீன் மூலம் பல ரகசியங்கள் வெளியில் போயிருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இவரோடு சேர்த்து இதுவரை 8 பேர் சிக்கியுள்ளனர்." என்கின்றது என்.ஐ.ஏ. வட்டாரங்கள். 

 - ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ