Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தக் கோமாளிகளிடம் குழந்தைகள் பயப்படுமாம்... ஏன்?

இந்தியாவில் தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய "சர்வதேச கோமாளிகள் திருவிழா" நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து கோமாளிகள் இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். ஆனால், செய்தி இது அல்ல... இந்தியக் குழந்தைகளை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் இதே சமயத்தில், அமெரிக்க குழந்தைகளை அழ வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கோமாளிக் கூட்டம். அவர்களின் அட்டகாசங்களினால், தென் கிழக்கு அமெரிக்காவின் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்த பிரச்னை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது... என்ன நடக்கிறது ???

ஜியார்ஜியாவின் ஒரு பள்ளிக் கூடத்தில், ஒரு சிறுமியிடம் கத்தி இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியை அவரிடம் விசாரிக்க, "நான் நடந்து வரும் பாதையில் பயமுறுத்தும் கோமாளிகள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்ளவே இதைக் கொண்டு வந்தேன்" என்று அதிர்ச்சி பதிலளித்தார். முதன் முதலில், கடந்த ஆகஸ்ட் மாதம்   கோமாளிகள் தங்களை பயமுறுத்தி அருகில் இருந்த காட்டுக்கு இழுத்துப் போனதாக இரண்டு சிறுவர்கள் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து இங்கு பார்த்தேன்... அங்கு பார்த்தேன்... பயமுறுத்தினார்கள்... மிரட்டினார்கள்... என  இருபதுக்கும் அதிகமான புகார்கள் வந்திருக்கின்றன.

அமெரிக்காவில் இது விழாக்காலம். இம் மாத இறுதியில் ஹாலோவின் (HALO WEEN) திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு பலரும் ரத்தக் காட்டேரி, பிசாசு, கோமாளி உட்பட பலவித வேடங்களை அணிந்துக் கொண்டாடுவார்கள். இந்தியாவில் நாம் கோமாளிகளைப் பார்ப்பதற்கும், அமெரிக்காவில் கோமாளிகளைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 

கிரேக்கர்கள் காலத்தில்... இறுதி ஊர்வலங்களின்போது, இறந்தவரைப் போல வேடமணிந்து... அவரைப் போல், நடப்பது, பேசுவது, நடிப்பது என ஒருவர் இருப்பார். இதுதான் கோமாளிகளின் தொடக்க வரலாறு என்று ஒரு பதிவு இருக்கிறது. கலர் கலரான சட்டை, பலூன் பேன்ட், வித்தியாசமான ஷு, கலரான தலைமுடி ... என இருக்கும் இன்றைய கோமாளி வடிவத்துக்கு வித்திட்டவர் அமெரிக்காவின் ஜோசப் க்ரிமால்டி (JOSEPH GRIMALDI). 1800 களில் வாழ்ந்த ஜோசப், மேடை நாடகங்களில் கோமாளி வேடம் அணிந்து நடித்து வந்தார். உருள்வது, புரள்வது, விழுவது என மக்களை சிரிக்க வைக்க பெரும் சிரமம் மேற்கொள்வார். இதன் காரணமாக, அவரின் உடலில் நிறைய காயங்கள் ஏற்பட்டு, தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. பின்னர், இறுதி நாட்களில் பணமில்லாமல், குடிக்கு அடிமையாகி தன்னுடைய 58-வது வயதில் உயிரிழந்தார். நவீன யுகத்தின் முதல் கோமாளி முதல், இன்று இருக்கும் கோமாளிகள் வரை ... வாழ்க்கை அவர்களுக்கு கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. 

பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலும் கூட கோமாளிகள் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, வில்லன்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். பேட்மேன் பட "ஜோக்கர்"யில் தொடங்கி, "இட்" நாவலில் வரும் பென்னிவைஸ், ஷேக்ஸ் படத்தில் வரும் ஷேக்ஸ் என கோமாளி வில்லன்களின் பட்டியல் நீளம். அதேபோன்று, நம் ஊரில் குழந்தைகள் சாப்பிடாவிட்டால் "பூச்சிக்காரனிடம்" பிடித்துக் கொடுத்திடுவேன் என்று தான் குழந்தைகளை மிரட்டுவோம், அமெரிக்காவிலோ அதற்கும் கோமாளிகள் தான். 1980 களில் ஒரு கோமாளிக் கூட்டம் குழந்தைகளைக் கடத்துவதாக நிறைய புரளிகள் வந்தன. இப்படியாக, அமெரிக்காவில் கோமாளிகள் குழந்தைகளுக்கு நெருக்கமானவர்களாக அதிகம் இருந்ததில்லை. 

பள்ளிக் குழந்தைகளை பயமுறுத்துவது, பெண்களை மிரட்டுவது என இருக்கும் இந்தக் கோமாளிகளைப் பிடிக்க போலீசார் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சிலரை கைது செய்தாலும், பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சமூக வலைதளங்கள் இப்பிரச்னையை அதிகரிக்க ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது. இவர்கள் நிஜ கோமாளிகள் அல்ல. கோமாளி வேடத்தில் இருக்கும் திருடர்கள் என கொந்தளிக்கிறார்கள் அமெரிக்காவின் பிற மாகாணங்களில் இருக்கும் நிஜக் கோமாளிகள். 

ஹாலோவினில் கோமாளி வேடம் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல கடைகளில் கோமாளி முகமூடிகளின் விற்பனையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 

1800களின் தொடக்கத்தில் ஜோசப் க்ரிமால்டி பெரும் சிரமத்துக்குப் பிறகு தான் கோமாளி வடிவத்தை உருவாக்கினார். 

"முகம் முழுக்க க்ரீஸை தடவி, அதில் வெள்ளை பெளடரைப் பூசி, ஜாமைக் கொண்டு உதட்டை சிகப்பாகி, கண் இமைகளையும், புருவங்களையும் சீர்படுத்தி...இதை அனுதினமும் செய்து... அந்த நீண்ட புன்னகை... மன வலிகளை மறைக்கும் அந்த புன்னகை முகத்தில் நிலைத்து இருக்கும் வரை போராடி... தன் உருவத்தை உருவாக்கினார் ஜோசப்..." என்று சொல்கிறார் ஜோசப் க்ரிமால்டி குறித்த புத்தகத்தை எழுதிய ஆண்ட்ரு ஸ்டாட். 

குழந்தைகளின் தோழர்களான கோமாளிகள்...அவர்களின் எதிரிகளாகிப் போனது பெரும் சோகம். இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது என்னவோ குழந்தைகளும் குழந்தைகளை நேசிக்கும் உண்மையான கோமாளிகளும் தான்...!!! 

-இரா.கலைச்செல்வன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ