Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டாம் உலகப் போரின் 'ஹீரோ' மரணம்..?!

கடந்த 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகக் போர் தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்றது. ஜெர்மனியின் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு சில நாடுகளும் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும் இரு தரப்பாக போரிட்டன. கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் போரில் பங்கேற்றனர். இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் நிகழ்வுகளை சந்தித்த போர் இது.

கடந்த 1939-ம் ஆண்டு நாஜி ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியதே இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் தொடங்கிய 2 ஆண்டுகளில் ஜெர்மனி தன்னை சுற்றியிருந்த பல நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஹிட்லரோ  தன் வீரர்கள் மீது அக்கறை காட்டுவதை விட, யூதர்களை தேடி தேடி கொல்வதையும் கொடுமைப்படுத்துவதையும்தான் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தார். ஜெர்மனியால் ஹங்கேரி நாடும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில்தான் ரவுல் வால்லன்பெர்க் என்ற மனிதநேயமிக்க மனிதரை ஸ்வீடன் ஹங்கேரி நாட்டு சிறப்பு தூதுவராக அனுப்பியிருந்தது. இவருக்கு என்ஜினீயர், பிசினேஸ்மேன் என பலமுகங்கள் உண்டு. இரண்டாம் உலகப் போரின் உக்கிரமான காலக்கட்டத்தில் 1944-ம் ஆண்டு ஹங்கேரித் தலைநகர் புடாபெஸ்டுக்கு வல்லான்பெர்க் வந்து சேர்ந்திருந்தார். ஹங்கேரியில் ஏற்கனவே 4 லட்சத்து 40 ஆயிரம் யூதர்களை நாஜிக்கள் பிடித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனியில் இருந்த சித்திரவதைக் களமான ஆஸ்விட்ஸ் கொலை களத்துக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான யூதர்கள் பிடிபட்டவுடனே கொல்லப்பட்டனர்.

புடாபெஸ்டுக்கு வந்த வல்லான்பெர்க் இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன்னால் முடிந்த வரை யூதர்களை நாஜிக்களிடம் இருந்து காப்பாற்ற முடிவெடுத்தார். ஆயிரக்கணக்கான யூத மக்களுக்கு ஸ்வீடன் நாட்டு பாஸ்போர்ட் விநியோகித்தார். பலர் ஹங்கேரியை விட்டுத் தப்பிச் செல்ல இது உதவியாக இருந்தது. ஸ்வீடன் நாட்டு கலாசார வடிவமைப்பில் சில கட்டடங்களை மாற்றி அமைத்து, அதற்குள் தங்கவைத்தும் ஆயிரக்கணக்கான யூதர்களின் உயிரைக் காப்பாற்றினார் வல்லான்பெர்க். 1944-ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை ஆயிரக்கணக்கான யூதர்கள் வல்லான்பெர்க்கால் காப்பாற்றப்பட்டனர்.

வால்லான்பெர்க்கின் சேவையை பாராட்டி, பல நாடுகளும் அவருக்கு விருதுகள் அறிவித்தன. அமெரிக்க அரசு அவருக்கு 'கவுரவ குடிமகன்' விருது அளித்தது. பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சிலுக்கு பிறகு அமெரிக்காவின் இந்த விருதை பெற்ற இரண்டாவது மனிதர் வால்லான்பர்க்.  அமெரிக்கா மட்டுமல்ல கனடா, ஹங்கேரி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் அவரை தங்கள் நாட்டின் கவுரவ குடிமகனாக அறிவித்தன. உலகம் முழுக்க சிலைகளும் வல்லான் பெர்க்கின் பெயர்களும் தாங்கிய சாலைகளும் கூட இப்போதும் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பற்றிய, வல்லன்பெர்க்கின்  நிலை என்ன ஆனது என்பதுதான் இன்று வரைத் தெரியவில்லை. கடந்த 1945-ம் ஆண்டு ரஷ்யப் படைகள் புடாபெஸ்ட் நகரைப் பிடித்ததில் இருந்து ராவுல் வல்லான்பெர்க் காணாமல் போய்விட்டார். ரஷ்யப் படைகள் அவரைப் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்திய தேசிய ராணுவத் தலைவர் சுபாஷ் சந்திரபோசின் மரணம் போலவே வால்லான்பெர்க் மரணத்திலும் பெரும் மர்மம் நிலவியது. கடந்த 1947-ம் ஆண்டு ரஷ்ய ராணுவத்தால் வால்லான்பெர்க் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. சோவியத் யூனியனின் கேஜிபி உளவு நிறுவன முன்னாள் தலைவர் இவான் செராவின் டைரிக் குறிப்பு இதனை உறுதிப்படுத்துகிறது.

அதே வேளையில், மாஸ்கோ சிறையில் 1947-ம் ஆண்டு ஜுலை 17-ம் தேதி மாரடைப்பு காரணமாக வால்லன்பெர்க் இறந்துபோனதாக மற்றொரு தகவலும் இருக்கிறது. வல்லான்பெர்க் மாரடைப்பால் இறந்து போனதற்கு ஆதாரமாக ஸ்மால்ட்சோவ்  என்பவர் அறிக்கையை காரணம் காட்டுகிறார்கள். அதாவது விக்டர் அலெசான்ரோவிச் ஸ்மால்ட்சோவ் என்பவர் வல்லான்பெர்க் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போது, சிகிச்சை அளித்த டாக்டரரின் மகன். 1947-ம் ஆண்டு ஜுலை மாதம் 17-ம் தேதி மாலையில் தனது தந்தையை அவசரம் அவசரமாக மாஸ்கோ சிறை நிர்வாகம் அழைத்துச் சென்றதாகவும் காலைவரை தந்தை வீட்டுக்கு வரவில்லை. வீடு திரும்பிய பின்னர், 'அந்த ஸ்வீடன் நாட்டுக்காரர் இறந்து விட்டார்' என தன் தந்தை தன்னிடம் கூறியதாக ஸ்மால்ட்சோவ் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பல உயிர்களை வாழ காரணமாக இருந்த வல்லான்பெர்க்கின் தாய் கூட தற்கொலை செய்து கொண்டார். 'எனது மகன் உயிருடன் இருக்கிறானா...இல்லையா ' என பலமுறை வல்லான்பெர்க்கின் தாய் ஃபிரெட்ரிக் வான் ட்ரேடெல் ரஷ்ய அரசிடம் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு ரஷ்யத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பதில் கிடைக்காத நிலையில் விரக்தியடைந்த ஃபிரெட்ரிக் வான் ட்ரேடெல் கடந்த 1979-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 71 ஆண்டுகாளக வல்லான்பெர்க்கிற்கு என்ன நேர்ந்தது என்ற குழப்பம் நிலவியது. இந்த நிலையில் வல்லான்பெர்க்கின் குடும்பத்தினர், அவரது இறப்புச் சான்றிதழ் அளிக்குமாறு ஸ்வீடன் அரசைக் கேட்டிருந்தனர். இதையடுத்து, தற்போது வல்லான்பெர்க் இறந்துவிட்டதாக ஸ்வீடன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 1952-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வல்லான்பெர்க் இறந்து போனதாக அதில் கூறப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டுக்கு பிறகு வல்லான்பெர்க் பற்றி எந்த தகவலும் இல்லாதததால், 1952-ம் ஆண்டு அவர் இறந்து போனதாக ஸ்வீடன் நாட்டு பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.

- எம்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close