Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தகங்கள் சுமக்கும் குதிரையும் படகும்! ஆச்சரிய நூலகங்கள்

குட புஸ்தகா ( KUDA PUSTAKA ) :

வெள்ளை குறைந்த பழுப்பு நிறம். பிடரி மயிருக்கும், வாலுக்கும் இடையே அழகிப் போட்டி நடக்கிறது, நெற்றியில் சின்ன கிரீடம் அழகாக சூட்டப்பட்டிருக்கிறது. கடலும், காடுகளும் சூழ்ந்த அந்தக் காட்டுப் பாதையில்... முதுகில் இருபக்கமும் மரப்பெட்டிகளோடு, கற்களில் நடந்து வருகிறது. அதன் குளம்படிச் சத்தம் கேட்டதும் குழந்தைகள் குதூகலமாகிறார்கள்."லூனா...லூனா..." என்று கத்தியபடியே ஓடி வருகிறார்கள். தன் எஜமானன் ரித்வான் சுரூரியோடு அங்கு வந்து சேர்கிறது லூனா. அதன் முதுகில் இருக்கும் சுமையைக் கழற்றி அதிலிருக்கும் புத்தகங்களை, வரிசையாக நிற்கும் குழந்தைகளிடம் கொடுக்கிறார் ரித்வான்.


உலகளவில் கல்வியறிவில் பின் தங்கிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. அதுவும் மத்திய ஜாவாவில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

முழு நேரமாக குதிரைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த ரித்வானுக்கு தம் மக்களுக்கு எப்படியாவது கல்வி புகட்ட வேண்டும் என்ற ஆசை. தனிமனிதனாக தன்னால் என்ன செய்ய முடியும் என்ற நீண்ட நாள் யோசனை, அவருக்கு ஒரு வழியைக் காட்டியது. ஒரு பெரிய பணக்காரரின் மூன்று குதிரைகளைப் பராமரித்து வந்த ரித்வான், அதிலிருந்து தனக்குப் பிடித்த லூனாவை எடுத்துக் கொண்டு, தன்னிடமிருந்த சொற்ப காசைக் கொண்டு சில புத்தகங்களை வாங்கினார். ஒரு "குதிரை நூலகத்தை " (KUDA PUSTAKA)  உருவாக்கினார்.

 
குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டுமல்லாமல் நாவல்கள், பத்திரிகைகள், விவசாயம், குடும்ப நலன், சமையல் குறிப்பு உட்பட பல விதமான புத்தகங்களை, இந்த குதிரை நூலகத்தில் வைத்துள்ளார். இந்த சேவைக்கு அவர் ஏதொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. வார இறுதிகளில் சுற்றுலாத் தளங்களில் குதிரையை சவாரிக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தைக் கொண்டே குடும்பம் நடத்துகிறார். இவரின் புத்தகங்களின் உதவியால் பலரும் புதுவிதமான விவசாய முறைகளை கற்றறிந்து செயல்படுத்துகிறார்கள்.

"நான் ஒரு ஏழை. எனக்கு இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை... ஆனால் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. அதனால் தான், என் உழைப்பைக் கொடுக்கிறேன். ஒரு குதிரையை சொந்தமாக வாங்க வேண்டும், வீட்டில் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற என் கனவு பலிக்குமா, பலிக்காதா என்று தெரியவில்லை... ஆனால், இந்தோனேசியாவின் அடுத்த தலைமுறை நன்கு படித்து, ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும். அந்தக் கனவை நோக்கிய பயணத்தின் முதலடி தான் இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பது." என்று "லூனாவை" தட்டிக் கொடுத்தபடியே சொல்கிறார் ரித்வான். லூனா மீண்டும் அந்த மரப்பெட்டியை தூக்கி நடக்கத் தொடங்குகிறது.


பெரஹு புஸ்தகா ( PERAHU PUSTAKA) :

இந்தோனேசிய பத்திரிகையாளரான முகமது ரித்வான் அலிமுதினுக்கு கடல், கப்பல், புத்தகம், பயணம் எல்லாம் அதிகம் பிடித்தவை. இந்தோனேசியாவின் தென் சுலவேசி ( SOUTH SULAWESI ) காடுகள் நிறைந்த ஒரு தீவுப் பகுதி. அங்கு சில பள்ளிக் கூடங்கள் இருந்தாலும், ஆசிரியர்கள் யாரும்  கடினமான பாதைகளைக் கடந்து, அடிப்படை வசதிகளற்ற அந்தப் பகுதிகளுக்கு வரத் தயாராக இல்லை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற முடிவில், ஒரு படகை தயார் செய்யத் தொடங்குகிறார்.


"கையிலிருந்த காசைக் கொண்டு, பக்கோ ( BAQGO) வகையிலான சிறு படகைக் கட்டினேன். படகு தயாரானவுடன், என் வேலையை ராஜினாமா செய்தேன். பலரிடம் நன்கொடையாக பெற்ற புத்தகங்களைக் கொண்டு இந்த படகு நூலகத்தை ( PERAHU PUSTAKA ) உருவாக்கினேன்" என சொல்லும் அலிமுதின் கடற் சார்ந்த கலாசாரத்தை மையப்படுத்தி 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், பல கடற்பயணங்களை மேற்கொண்டு, இந்தோனேசிய கடல் பகுதியில் வாழும் "மாண்டர்" ( MANDAR ) இன மக்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். 


17-ம் நூற்றாண்டில் தெற்கு சுலவேசி பகுதியில் வாழ்ந்து, உலகப் புகழ்பெற்ற "பட்டிங்கலோயங்" ( PATTINGALLOANG ) என்பவரின் பெயரையே தன் படகுக்கு சூட்டியிருக்கிறார் அலிமுதின். படகில் இருந்து இறங்கி, கடுமையான காட்டுப் பாதையில் பல கடினங்களைக் கடந்து புத்தகங்களை வழங்கி வருகிறார் அலிமுதின்.


"கஷ்டம் தான்... ஆனால், நான் கொண்டு போகும் புத்தகத்தை ஒரு குழந்தை வாங்கி அதை மகிழ்ச்சியோடு படித்து, சிரிக்கும்போது... என் அத்தனை கடினங்களும் காணாமல் போய்விடும்" என்று சொல்லியவாறு தன் படகின் பாய்களை விரிக்கிறார். அது காற்றடிக்கும் திசை நோக்கி நகரத் தொடங்குகிறது. 

- இரா.கலைச்செல்வன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close