Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இங்கே அடிச்சா எங்கெல்லாம் வலிக்கும்?' - அமெரிக்க அதிபர் தேர்தலும். உலகப் பொருளாதாரமும்! #USElections2016

நாளை, நவம்பர் 8, 2016. அமெரிக்க அதிபர் தேர்தல். அரசியல் பின்னணி எதுவும் இல்லாத பிசினஸ்மேன் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாகவும், பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வெள்ளைமாளிகையின் நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்து அனுபவம் பெற்ற ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பாகவும் மோதுகின்றனர். 

இவர்களுக்கிடையேயான பிரச்சாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் என்றும் இல்லாத அளவுக்கு மிக மோசமான விவாதங்களாலும், வார்த்தைகளாலும் இருப்பது அரசியல் நோக்கர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவின், அந்நாட்டு மக்களின் நலன் என்பதைத் தாண்டி அமெரிக்க அதிபர் எனும் பதவிக்காகப் போட்டிபோடும் மிகச் சாதாரண அரசியலாக அதிபர் தேர்தல் மாறிவிட்டது.

அக்டோபர் மாதத்தின் இறுதிநாள் வரை ஹிலரிக்கு ஆதரவாகவே இருந்த கருத்து கணிப்புகள், நவம்பர் முதல் வாரத்தில் ட்ரம்ப் பக்கம் சாய்ந்தது. ஏ.பி.சி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இரண்டும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய வாக்கெடுப்பில் டொனால்டு டிரம்புக்கு 46 சதவிகிமும், ஹிலரி கிளின்டனுக்கு 45 சதவிகிதமும் வாக்குகள் கிடைத்துள்ளன. ஒரு சதவீதம் தான் வித்தியாசம் என்றாலும் இது திடீர் திருப்பமாக அமெரிக்க அரசியலில் பார்க்கப்படுகிறது.

காரணம். ஹிலரியின் பிரச்சார உத்திகள் அனைத்தும் உலக நாடுகளின் நன்மதிப்பையும் ஆதரவையும் அமெரிக்கா நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தொனியிலேயே ஒலிக்கிறது. ஆனால் டிரம்பின் பிரச்சார உத்திகள் அனைத்தும் அமெரிக்க மக்களின் நலனை மையமாக வைத்தே இருக்கிறது. அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதை உலக நாடுகள் எதிர்நோக்கி இருந்தாலும், அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போவது என்னவோ அந்நாட்டு மக்கள்தான். அந்த வகையில், டிரம்ப் தான் அமெரிக்கர்கள் மனதில் உள்ளார் என்கிறது சமீபத்திய கருத்துக் கணிப்புகள். டிரம்ப் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அமெரிக்க மக்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டவராகவே அவரைப் பார்க்கிறார்கள். 

அமெரிக்கா முற்றிலும் அமெரிக்கர்களுக்கான நாடாகவே மாற்றப்படும் என்பதுதான் அவரது பிரச்சாரத்தின் அடிநாதம். எந்தநாட்டு மக்களும் தங்களது நாடும் மற்றும் அதன் வளங்கள் வாய்ப்புகளும் தங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏற்கெனவே ஹெச்-ஒன் பி விசா விவகாரமும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பிற நாட்டவர்கள் தட்டிப் பறிப்பதும் அங்கு பெரும் பிரச்னையாகப் பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகளாலும், குற்றங்களாலும் விமர்சிக்கப்படும் டிரம்ப் மக்களை கவர்வதில் ஹிலரியை முந்தி நிற்கிறார். அதேசமயம் புத்திசாலி என்றும், அரசியல் தெரிந்தவர் என்பதிலும் ஹிலரி முன்னணியில் இருக்கிறார். தற்போது ஹிலரிக்கு எதிராக இருந்த இ-மெயில் விவகாரத்திலும் அவர் குற்றமிழைக்கவில்லை என்று எஃப்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இது ஹிலரிக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளது. 

அமெரிக்க பொருளாதாரமும் உலக நாடுகளூம்! 

உலக நாடுகளின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் ராணுவ வலிமையைத் தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் கொண்டது அமெரிக்க அதிபர் பதவி. டாலர் தேசம் என்று அழைக்கப்படும் அமெரிக்காதான் அனைத்து நாடுகளின் நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யும் இடத்தில் உள்ளது. அமெரிக்க டாலர்தான் உலக கரன்சிகளுக்கெல்லாம் கிங். அந்த டாலரில் சிறு ஆட்டம் ஏற்பட்டாலும் அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். டாலரின் மதிப்பு என்பது அந்நாட்டின் பல பொருளாதார காரணிகளைச் சார்ந்து இருக்கிறது. அமெரிக்க மக்களின் வாங்கும் திறன், வேலை வாய்ப்பு, வட்டிவிகிதம், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் உள்ளிட்ட கமாடிட்டிகளின் வர்த்தகப் போக்கு ஆகியவைதான் அந்தக் காரணிகள். அமெரிக்க பொருளாதார நிலை உலகப் பொருளாதாரத்தை நீண்டகாலத்திற்குத் தாங்கிப் பிடிக்கும் நிலையில் இல்லை. சற்று அப்படி, இப்படி ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. 2008-ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அமெரிக்கா தனது பொருளாதார நிலையை வளர்த்திருப்பதற்கான வலுவான காரணிகள் எதுவும் இதுவரை உருவாகவில்லை. 

அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் சதவீதம் 5 ஆக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊதிய உயர்வு கடந்த நான்கு ஆண்டுகளில் 2 சதவீதமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போதுதான் 2.5 சதவீதத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும் அமெரிக்கர்களில் 60 லட்சத்துக்கும் மேலானோர் பகுதிநேர வேலைதான் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் 7 மில்லியன் மக்கள், வறுமையில் வாழ்கிறார்கள். வறுமை விகிதம் 2009-ல் 13.2 சதவீதமாக இருந்தது, 2015-ல் 14.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஜே.பி மோர்கன் ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி, முக்கிய துறைகளில் முதலீடுகள் பற்றாக்குறையாக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் வளரவில்லை எனில், உலக நாடுகளின் பொருளாதாரமும் வளரவில்லை என்பதே அர்த்தம். 

ஒபாமா முன்வைக்கும் மூன்று கேள்விகள்!

அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்த பராக் ஒபாமா, உலக நாடுகளின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் அவரால் பெரிதாக அமெரிக்கா எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. அதற்கான ஆதாரங்கள் இங்கே படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தன்னளவில் அமெரிக்காவை தூக்கி நிறுத்தி விட்டதாகவே ஒபாமா பெருமையுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரால் தற்போதுள்ள பிரச்னையை வருங்கால பிரச்னையாகக் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. கற்பனை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அதுகுறித்து கேள்விகளையும் அவர் எழுப்புகிறார். அமெரிக்கா தனது வருங்கால பொருளாதாரத்தை எந்த வகையில் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் வளர்ச்சி இருக்கும் என்று குறிப்பிடும் ஒபாமா, நடுத்தர மக்களுக்கான வாய்ப்புகள் மிகவும் அவசியம் என்று கூறுகிறார்.

இரண்டாவதாக உலகம் சந்தித்து வரும் மிக சிக்கலான பிரச்னை பருவநிலை மாற்றம். இப்பிரச்னை பல வகைகளிலும் உலக நாடுகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விஞ்ஞானத்தையும், தொழில்நுட்ப சக்தியையும் எந்த வகையில் கையாளப் போகிறோம் என்று கேட்கிறார்.  

மூன்றாவது, ராணுவம். உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவமாக அமெரிக்கா தான் இருக்கிறது என்பது போன்ற பிம்பத்தை அந்நாடு உருவாக்கி வைத்திருக்கிறது. உலகின் பிற நாடுகளுக்கிடையில் ஏதேனும் பிரச்னை என்றால், அவை என்ன செய்ய வேண்டும்? போர் செய்ய வேண்டுமா? கூடாதா? என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்க வேண்டும் என்ற வகையில் உலகின் 'பவர்சென்டராக' அமெரிக்காதான் உள்ளது. "அதேநேரம் வளர்ந்து வரும் நாடுகள் தங்களை ஆயுத ரீதியாக அமைதியாக வளர்த்துக்கொண்டே இருக்கின்றன. எனவே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ராணுவ ரீதியான சிக்கல்களை அமெரிக்கா சந்திக்க வேண்டி வரலாம். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுமட்டுமல்லாமல் சுகாதாரத் துறை, எரிசக்தித் துறை, வேலைவாய்ப்பு போன்ற சவால்களையும் அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கிறது" என்கிறார் ஒபாமா.  

யார் அடுத்த அதிபர்?

இத்தகைய சவால்களை எல்லாம் கடந்து, அமெரிக்காவோடு சேர்த்து பிற நாடுகளையும் அரவணைத்துக் கொண்டு, அமெரிக்காவை வளர்ச்சியில் கொண்டு செல்லும் அடுத்த அதிபரைத்தான் உலகம் விரும்புகிறது. ஆனால், தற்போது களத்தில் இருக்கும் அதிபர் வேட்பாளர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான். ஆனால் யாரோ ஒருவரைத் தேர்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் அமெரிக்க மக்களுக்கு இருக்கிறது.

இந்த நிலையில், இதுவரையான பிரச்சாரம், இருவரின் அரசியல், பொருளாதார நிலைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தங்களின் அதிபரைத் தேர்தெடுப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடித்திருப்பார்கள். அது நாளை அரங்கேற்றப்படும். அமெரிக்க அதிபராக ஹிலரி ஜெயித்தால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையைப் படைப்பார். அதேநேரம் டிரம்ப் வெற்றி பெற்றால், எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபரானார் என்ற பெருமையைப் பெறுவார். யார் அதிபர் என்பது இன்னும் இரண்டு நாளில் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருப்போம் ! 

-ஜெ. சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ