Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு எலெக்‌ஷனுக்கு இவ்ளோ அக்கப்போரா ? - இது அமெரிக்க கலகல!

தினம் ஒரு சர்ச்சையெனத் தொடர்ந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒருவழியாக இதோ முடிவுக்கு வரப்போகிறது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக ஹிலரி க்ளின்டனும் , குடியசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு சர்ச்சைகளும் வரிசையாக நிகழ்வது வாடிக்கையாகிவிட்டன. 

நம் ஊர்த் தேர்தல்களைப் போலக் குறிப்பிட்ட ஒருநாளில் அல்லாமல், வாக்காளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு நிலைகளில் ரிலே ரேஸ் போலத் தொடர்ந்து ஒருவழியாக இறுதி நிலையை எட்டும். மக்கள் கூடும் அவைகளில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளுக்கு நல்ல தீர்வுகளைச் சொல்லி வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும். அதற்குள்தான் இத்தனைக் களேபரங்களும்.

ஹிலரியும், ட்ரம்ப்பும் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது இதுவரை நடந்த அனைத்துக் கருத்துக்கணிப்புகளின் மூலமும் தெரியவந்துள்ளது. அட... சர்ச்சைகளிலும் கூடத்தான். இருவருமே முன்னே பின்னே சறுக்கி விளையாடுவதால் தேர்தல் முடிவு வெளிவரும்போதுதான் தெளிவான விடை கிடைக்கும். ட்ரம்ப் என்றாலே சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி மாட்டிக்கொள்வார் எனப் பலருக்கும் தெரிந்திருந்த வேளையில் நாட்கள் கடக்கக் கடக்க ஹிலரியும் சேர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். அப்படி சில சர்ச்சைக்குரிய தருணங்களைப் பார்க்கலாம். 

 

* நவடா மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றபோது, கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் புகுந்ததாகப் பீதி ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ரகசியப் போலீசார் உடனடியாக, டிரம்ப்பை சுற்றி வளைத்துப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால், கூட்டத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது. இது ஹிலரியின் ஆதரவாளர்களின் சதித்திட்டம் என ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஒருபக்கம் குற்றச்சாட்டை வீச, எதிர்த்தரப்பில் இந்தச் சம்பவம், 'டிரம்ப் நடத்திய நாடகம்' என ஜனநாயக கட்சியினர் விமர்சித்துள்ளனர். #இவிங்களுக்கு நாமளே பரவாயில்லையோ?

 

* ரஷ்ய அதிபர் புதினின் கைப்பாவையாக ட்ரம்ப் செயல்படுவதாகவும், அவர் அதிபரானால் அமெரிக்காவுக்கே தீங்கு விளையும் என ஹிலரி க்ளிண்டன் குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ட்ரம்ப், 'ஒபாமாவும், ஹிலாரியும் என்னை மதிப்பதை விட புதின் என் மீது அதிகமாகவே மதிப்பு வைத்திருக்கிறார்' என எக்ஸ்ட்ராவாக சந்தேகம் கிளப்பும் வெடியையும் வீசி ஆதரவாளர்களையே நிலைகுலையச் செய்தார். 

 

* ஹிலரி கிளின்டன்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் எனக் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது மேலும் சர்ச்சையை உண்டாக்கியது. 

* ஹிலரி கிளின்டனின் பிரசாரத்துக்கு உதவிவந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர், ட்ரம்ப்பின் பிரசாரத்தில் வன்முறையைத் தூண்டுவதற்குத் திட்டமிடுவது போன்ற வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், ட்ரம்ப்பின் பிரசாரக் கூட்டங்களில் வன்முறையை ஏற்படுத்துவது சுலபம் எனவும், ட்ரம்ப் எதிர்க்கும் சுகாதார சேவை நிறுவனமான பிளான்ட் பேரன்ஹூட் நிறுவனத்தின் டி-சர்ட்டை அணிந்திருந்தால் அல்லது 'ட்ரம்ப் ஒரு நாஸி' எனத் தெரிவித்தால், மக்கள் முகத்தில் குத்துவார்கள் என அவர் தெரிவிப்பது போன்றும் காட்டப்படுகிறது. #தேர்தல்னாலே வீடியோதானா?

 

* வடக்கு கரோலினாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலரி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைகள் பறிபோகும். எனவே, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும் இணைந்து ஹிலரி அதிபராவதைத் தடுக்க வேண்டும் எனக் கூறினார். அப்போது அவர் தெரிவித்த சில கருத்துகள் ஹிலரிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தன. இதனால் சமூக வலைதளங்களில் ட்ரம்ப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

* தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய குன்னூர் எம்.எல்.ஏ ராமு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்த ஹிலரி கிளின்டன் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்ததாகவும், அதன் எதிரொலியாகவே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறினார். 

#இதுக்கு மேலேயுமா ஒரு சர்ச்சை வேணும்? போங்கப்பு..!

 

- விக்கி 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ