Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு பெண்ணை அதிபராக்க ஏன் தயங்குகிறது அமெரிக்கா?

மெரிக்க தேர்தல் முடிவுகளை உலகமே மிகுந்த ஆவலோடு கவனித்தது. குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலரி கிளின்டன் இருவரும் போட்டியில் இருந்தனர்.  அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அதிபராவார் என்று கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவித்து வந்தன.  இது உலகம் முழுக்கவே பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

காரணம்... பெண்கள் சுதந்திரமாக பல பணிகளில் ஈடுபடுவது, பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக போட்டிப் போடுவது என்று பலவற்றிலும் அமெரிக்கா முன்னோடியாக இருந்தாலும்... ஒரு பெண் அந்நாட்டின் அதிபராக முடியாத சூழலே நிலவி வந்ததுதான். இத்தகைய சூழலில்தான், உலகம் முழுவதும் நன்கு பரிட்சயமானவரும், முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவியுமான ஹிலரி கிளின்டன், ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். இதையடுத்து, பெண் அதிபர் எனும் கனவு நிச்சயம் நிறைவேறும் என எதிர்பார்ப்பு கூடியது. மூடிஸ் அனாலிடிக்ஸ், எலெக்டோரல் கல்லூரி உள்ளிட்ட பல கருத்துக் கணிப்புகளும் ஹிலரியே வெற்றி பெறுவார் எனச் சொல்லி வந்தன. ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவுகள்... அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டன.

காலையிலிருந்து வெளியான தேர்தல் முடிவுகளில் ஹிலரி, ட்ரம்ப் இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. யார் வெல்வார் என்பது உறுதியாக கணிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பு கூடிக்கொண்டே போனது. இறுதியில், பெரும்பான்மை உலகம் எதிர்பாராத வகையில் டிரம்ப் வெற்றி வாகை சூடிவிட்டார். ஒரு பெண் அதிபராவது இந்த முறையும் இல்லை என்றாகி விட்டது. 

இந்த நிலைக்கு என்ன காரணம்... பெண் என்பதாலேயே அமெரிக்கர்கள் ஒதுக்கித் தள்ளுகிறார்களா? என்ற கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் வாஸந்தியிடம் வைத்தபோது, 

“இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் பிரதமராக முடிந்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் இப்போது வரை அது நடக்கவில்லை. இந்தியாவில் பெண்ணுக்கு தெய்விக குணங்களைச் சூட்டி விடுவார்கள். பின் அதையே முன்மொழிந்து தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்துவிடுவார்கள். வாக்குகளைச் சேகரிக்கும் வசீகரம்தான் இங்கு முக்கியம். ஆனால், அமெரிக்காவில் பெண்களுக்கு தெய்விக குணங்களை எல்லாம் சொல்வதில்லை. அதிகாரத்தை கைப்பற்றுவதே ஒரே நோக்கம். அந்த நோக்கத்துக்கு ஒரு பெண் தகுதியானவரா என்பதே அங்கு பார்க்க படுகிறது. 

அமெரிக்க மக்களின் மனநிலையே ஒரு பெண்ணுக்கு உட்சபட்ச அதிகாரத்தை அளிப்பதில் பெரும் தயக்கமிருக்கிறது. அமெரிக்கா அதிபர் என்பது உலகம் தழுவிய அளவில் பெரிய அதிகாரம் கொண்ட பொறுப்பு என்கிற அளவில் அங்கு பார்க்கப்படுவதால், அந்தப் பொறுப்பை ஒரு பெண் ஏற்று திறம்பட செய்ய முடியும் எனும் நம்பிக்கை அமெரிக்கர்களுக்கு இல்லை. ஆண் மனநிலையோடுதான் பெண் சமூகமும் இயங்கி வருகிறது.

தெற்கு அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் டிரம்ப்க்கு கிடைத்திருக்கும் வெற்றி ஆச்சர்யத்தைத் தருகிறது. கறுப்பின மக்கள் வாழும் பகுதியிலும் டிரம்ப் பெற்ற வாக்குகள் எதிர்பாராத ஒன்று. ட்ரம்ப் வெற்றிக்கு இன்னும் சில காரணங்களைப் பார்க்க முடியும். ஜனநாயக கட்சி தொடர்ந்து இரண்டு முறைகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதனால் இந்த முறை ட்ரம்ப்பை முன்னிறுத்திய குடியரசுக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். மேலும், அமெரிக்காவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பல தொழிற்சாலைகள் மூடல் உள்ளிட்ட பலவும் அமெரிக்க மக்களிடையே ஜனநாயகக் கட்சிக்கு எதிரான கோபத்தை உருவாக்கியிருந்தது. 

ஹிலரி கிளின்டனின் தோல்வியில், மின்னஞ்சல் விவகாரமும் ஒரு காரணம். என்னதான் ஹிலரி கிளின்டன் ஒரு பெண் என்றாலும், பெண்ணியவாதிகள் பலரும் அவரை பெண்களுக்கு ஆதரவான செயல்பாடுகள் கொண்டவராகப் பார்க்கவில்லை. கிளின்டன் அதிபராக இருந்தபோது, மோனிகா என்ற பெண் தொடர்பான பாலியல் ரீதியிலான புகாரில் அவர் சிக்கினார். இந்த விவகாரத்தில் ஹிலரியின் மௌனமான செயல்பாடுகள் பல பெண்ணியவாதிகளுக்கு அதிருப்தியை தந்தது. அதிகாரத்தின் ருசியை அனுபவிப்பவராகவே ஹிலரியைப் பார்த்தனர்” என்று சொல்கிறார் வாஸந்தி. 

பெண் என்பதால் மட்டுமே ஹிலரி தோற்கடிப்பட்டார் எனும் பொதுவான கருத்து பற்றி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான உ.வாசுகியிடம் கேட்டபோது, 

அமெரிக்க அதிபர் தேர்தல்... ஆண், பெண் என்று பார்க்கப்படுவது இல்லை. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்றுதான் பார்க்கப்பட்டது. ஹிலரி, ட்ரம்ப் இருவரும் முன்வைத்த கொள்கைகளுமே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அமெரிக்காவில் இருக்கும் பெரும் முதலாளிகள், தொழில் அதிபர்களுக்கு ஆதரவான கொள்கைகளைத்தான் இருவரும் முன்வைத்து பிரசாரம் செய்தார்கள்.

பெண் என்றால் போர் புரிய மாட்டார், ஊழல் செய்யமாட்டார்... அதனால்தான் ஹிலரி வெற்றிபெறவில்லை என்று பேசுவது அர்த்தமற்றது. காரணம் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் கைதாகியது ஒரு பெண்தான். மேலும் ஹிலரியும், அமெரிக்காவில் இருக்கும் சாதாரண பெண்களின் முன்னேற்றத்துக்கான கொள்கை எதையும் முன் வைக்கவில்லையே. அதனால் பெண்கள் என்றால் இப்படித்தான் எனப் பொதுமைப்படுத்திப் பார்க்க முடியாது.

ஹிலரி ஒரு பெண்ணாக இருந்தாலும், ஜனநாயக கட்சியின் கொள்கையின் பிரதிநிதிதான். ஜனநாயக கட்சி நிலைப்பாடு கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ, அதே நிலைப்பாடுதான் இவரிடமும் இருக்கும். மேலும் பெண்கள் குறித்த ட்ரம்பின் மோசமான சிந்தனை போக்கும் அனைவரும் அறிந்ததே. பெண்களை வெறும் போக பொருளாக பார்க்கும் ஓர் ஆணாதிக்க மனநிலையும், பிற்போக்கும் கண்ணோட்டமும் கொண்டவர்தான் ட்ரம்ப்.  இதைப் பற்றி எல்லாம் அமெரிக்க மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இருவரையும் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஹிலரியைவிட பெரிய அபாயம் ட்ரம்ப் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அமெரிக்காவில் முக்கியமான பொருளாதார பங்கு ஆயுதத் தொழில்தான். அதனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகின் மற்ற நாடுகளில் போரை உருவாக்குவது அல்லது போருக்கான சூழலை உருவாக்குவது. இதை முன்னெடுப்பது யார் என்பதைத்தான் பெரும்பான்மை அமெரிக்க மக்கள் எப்போதுமே பார்ப்பார்கள். இந்தத் தேர்தலிலும் அப்படியொரு நம்பிக்கையோடு ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது அந்த பெரும்பான்மை சமூகம்” என்றார் வாசுகி. 

- வி.எஸ்.சரவணன், கே. அபிநயா

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ