Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்பின் வெற்றிக்கு 'ரமணா' விஜயகாந்த் பாணியில் உதவிய இந்தியர்!

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிமிடம் வரை ட்ரம்பின் ஒரு முகத்தை மட்டுமே ஊடகங்களும், உலக நாடுகளும் பார்த்து வந்தன. பெண்கள் வெறுப்பு,  சிறுபான்மையினர் எதிர்ப்பு, வெறுப்பு மிக்க கருத்துகள்,  கருத்தடை சட்டப்படி குற்றம் என்ற பேச்சு, கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்பு என 100 சதவீத வெறுப்பான அருவருப்பான முகத்தையே பார்க்க முடிந்தது. 

ஆனால் ட்ரம்ப் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் படைத்து விட்ட இந்தத் தருணத்தில் அவருடைய வேறு ஒரு முகமும் அமெரிக்காவின் உண்மையான முகமும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை தலைப்புச் செய்தியாக தயாராக அச்சிட்டு வைத்திருந்த தாள்கள் குப்பையில் போட்டுவிட்டு, ட்ரம்பின் வெற்றியை வரவேற்க ஆரம்பித்து விட்டார்கள்.

டிரம்ப்-ன் இந்த வெற்றி முழுக்க முழுக்க வெள்ளை இனத்தவர்களின் ஆதரவாலும், பாரம்பரிய அமெரிக்கர்களின் ஆதரவாலும் மட்டுமே கிடைத்துள்ளது. அமெரிக்கர்கள் தங்களுக்கான அமெரிக்காவை அடைய தனக்கான அதிபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஹிலரியை விட ட்ரம்ப் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருக்கிறார்.  ஹிலரி 59,923,027 வாக்குகளையும், ட்ரம்ப் 59,692,974 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எலக்டோரல் காலேஜ் என்று சொல்லப்படும் மாகாண வேட்பாளர்களின் வாக்குகளில் 279 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ட்ரம்பால் கைப்பற்றப்பட்டதால், அவரது வெற்றி உறுதியானது

ட்ரம்ப் பிரசாரத்தை செயல்படுத்திய இந்தியர்!

ட்ரம்பின் வெற்றியை அவருக்கு எளிதாக்கிய முக்கிய மாகாணங்களில் ஒன்று அரிசோனா. அந்த அரிசோனா மாகாணத்தில் ட்ரம்பின் பிரசார செயல்பாடுகளைத் திட்டமிட்டவர் அவினாஷ் இரகவரப்பு. ட்ரம்ப் மீதான ஒரு வெறுப்புணர்வு நாடு முழுவதும் பரவலாக இருந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய ஒருவார பிரசாரம் மிகவும் வித்தியாசமாக மாற்றப்பட்டதே அவரது வெற்றிக்குக் காரணம் என்கிறார் இவர். 

"கடைசி இரண்டு மாதங்கள் ட்ரம்புக்கு எதிராக வலம் வந்த விடியோக்களும் குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்தது. அதுமட்டுமல்லாமல் ஹிலரிதான் அடுத்த அதிபர் என்று வெளியான கருத்துக் கணிப்புகள் ஒருபக்கம். ஆனால், நாங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குப் புரிந்தது. பிரசாரத்தின்போது, ஒவ்வொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் கடைசி கட்ட ஆக்‌ஷன் பிளான் ஒன்றை திட்டமிட்டிருந்தோம். எங்களுடைய உத்திகளை நாங்கள் மாற்றினோம். மிகவும் கவனமாக எங்கள் ஆதாரவாளர்களைத் திரட்டினோம். அது எங்களுக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது. 

இதுமட்டுமல்லாமல் இன்னொரு காரணமும் ட்ரம்ப் வெற்றியைத் தேடித் தந்தது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்கா பெரிய வளர்ச்சியையோ, மாற்றத்தையோ அடையவில்லை. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஹிலரி, இன்னொரு ஒபாமாகவே பார்க்கப்பட்டார். ஒபாமாவின் செயல்பாடுகளிலிருந்து, இவர் எந்த வகையிலும் வேறுபட்டவராக இருக்க மாட்டார் என்பது அமெரிக்க மக்களுக்கு உறுதியாகவே தெரிந்திருந்தது. ஆனால், அவர் தான்தான் அடுத்த அதிபர் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தார். அது பொய்யாகி விட்டது.

ஹிலரி செலவு செய்ததில் பாதியைக் கூட நாங்கள் செலவு செய்யவில்லை. ஹிலரி 2 டாலர் செலவிட்டால் நாங்கள் 1 டாலர் மட்டுமே செலவு செய்திருக்கிறோம். அரிசோனா மாகாணத்தில் அவரது வெற்றியை உறுதி செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது ட்ரம்ப் மகிழ்ச்சியில் உள்ளார். அவருக்குத் தெரியும் மிகக் கடினமான வேலை என்று, ஆனால் உறுதியளித்தபடி அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தில் மோடிக்கும், ட்ரம்புக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன. ஊடகங்கள் மோடிக்கு எதிராக எப்படி செயல்பட்டனவோ அதேபோல் தான் ட்ரம்புக்கு எதிராகவும் செயல்பட்டன" என்று கூறியுள்ளார் அவினாஷ்.

யார் இவர்? எப்படி இது சாத்தியமானது?

இந்தியரான இவருக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமைகூட இல்லை. இது எப்படி சாத்தியமானது? ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ராஜமுந்திரி தான் இவரது பூர்வகுடி. இரண்டு வருடத்திற்கு முன் லக்னோ ஐ.ஐ.எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர். தில்லியில் உள்ள ஹெச்.சி.எல் நிறுவனத்தில், தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் செயலாற்றினார். 

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே குழுக்களை ஒருங்கிணைப்பது, மேலாண்மை செய்வது, துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விளம்பர உத்திகளைப் பிரசாரத்துக்கு எப்படி பயன்படுத்துவது? போன்றவற்றில் இவருக்குத் தீவிர ஆர்வமும் திறமையும் இருந்தது. கடந்த வருடம்தான் இவர், அரிசோனா மாகாணத்தில் குடியரசு கட்சியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

இவருடைய மனைவி அரிசோனாவில் உள்ள இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் சமயத்தில் மனைவியுடன் விடுமுறையைக் கழிக்க, அரிசோனா போயிருக்கிறார். அப்போது அங்கு தேர்தல் விரைவில் நெருங்குகிறது என்று விளம்பர வாசகங்களை சாலைகளில் பார்த்திருக்கிறார். நாம் ஏன் இதில் இறங்கி செயல்படக் கூடாது? என்று தோன்றியதும், அங்கு கவர்னர் வேட்பாளர் பட்டியலில் இருந்து ஒரு நபரை தேர்ந்தெடுத்தார். 

டோக் டூஸி, அவினாஷ் தேர்த்தெடுத்த வேட்பாளர். அவருக்கு பிரசாரங்களைப் பற்றி ஒரு மெயிலை தட்டியிருக்கிறார். முதலில் இவரது மெயிலை அவர் கண்டுகொள்ளவில்லை. இவர், விடாமல் தொடர்ந்து இ-மெயில், ட்விட்டர் என அவருக்கு ஆலோசனைகளைச் சொல்ல, அவர் உடனே அவினாஷை அழைத்துப் பேசினார். அதற்கு முன்பே அரிசோனா மாகாணத்தில் புவியயல் மற்றும் மக்கள் மனநிலையை இதற்குமுன் நடந்த தேர்தல்களை வைத்து ஒரு டேட்டா அனாலிசிஸ் செய்து வைத்திருந்தார் அவினாஷ்.

அமெரிக்க அரசியலில் 'சிவப்பு மாகாணம்' என்று சொல்லப்படும் அரிசோனாவில் 100 ஓட்டுகளில் 36 குடியரசு கட்சிக்கும், 29 ஜனநாயகக் கட்சிக்கும் பொதுவாக இருக்கிறது. இவர்களை நாம் கவனத்தில் செலுத்தினாலேயே நம்மால் ஜெயித்து விட முடியும் என்று கூறியிருக்கிறார். திட்டமிட்டபடியே டூஸி ஜெயித்தார். அரிசோனா மாகாண குடியரசு கட்சியின் தலைவர் ராபர்ட் கிரஹாம், அவினாஷின் பிரசார செயல்பாடுகளைப் பாராட்டினார்.   

பின்னர் முதலில் கட்சியின் டேட்டா இயக்குனராகப் பொறுப்பேற்ற அவினாஷ் பின்னர் கட்சி நிர்வாக இயக்குனரானார். அரிசோனாவின் முழு பிரசாரத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினார். வெற்றி ட்ரம்ப் பக்கம் உறுதியாயிற்று. இந்தியர்கள், வெளிநாட்டு தேர்தலையும் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்பது இதன்மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

- ஜெ. சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ