Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வாய்ப்பு ஒரு தமிழருக்காம்!

சென்னையைச் சேர்ந்த கமலா ஹாரீசுக்குதான் அமெரிக்காவின் முதல் பெண் அமெரிக்க அதிபராக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அமெரிக்க மீடியாக்கள் கணித்துள்ளன. 

உலகின் மிகப் பெரிய நாடுகளுல் ஒன்றான அமெரிக்காவில் இதுவரை பெண் ஒருவர் அதிபராக பொறுப்பேற்றதில்லை. பதவிக்கு வந்த அனைவரும் ஆண்கள்தான். முதன் முதலில் அமெரிக்க அதிபர் பதவியை நெருங்கி வந்த பெண் வேட்பாளர்  ஹிலாளி கிளின்டன்தான். ஆனாலும் மக்களிடையே ஹிலாரிக்கு செல்வாக்கு இருந்தாலும், அதிக வாக்குகள் பெற்றாலும் பிரதிநிதித்துவ வாக்குகள் கிடைக்காததால் ஹிலாரி தோல்வியைத் தழுவ நேரிட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகியுள்ளார். இதனால், அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

ஹிலாரியால் இத்தகைய இமாலய சாதனையை நிகழ்த்த முடியாமல் போய் விட்டது. இதே தேர்தலில் கமலா ஹாரீஸ் என்ற தமிழச்சியும் போட்டியிட்டு செனட்டராக ஆகியுள்ளார்.  கலிபோர்னியாவில் உள்ள ஓக்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கமலா ஹாரீஸ். இவரது தாயார் ஷியமாளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். மருத்துவ நிபுணர். தந்தை டொனால்ட் ஹாரீஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். ஸ்டேன்போர்ட்டு பல்கலைக்ழகத்தில் பொருளாதார நிபுணராக பணியாற்றியவர். மாயா என்ற சகோதரியும் உண்டு. 

கலிபோர்னியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரீஸ்தான் அமெரிக்காவின் முதல் கறுப்பு மற்றும் ஆசிய செனட்டர் ஆவார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா, தற்போது 51 வயதானவர். வக்கீலுக்கு படித்தவர். கலீபோர்னியாவின் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். கடந்த 2010ம் ஆண்டு கலீபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார். 

டிரம்ப் வெற்றி பெற்றதும் அவரை எதிர்த்து உடனடியாக தனது அரசியலைத் தொடங்கியுள்ளார் கமலா. குடியேற்ற உரிமைக்கு எதிரான டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் கமலா பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதையடுத்து அமெரிக்க மீடியாக்கள் அடுத்த அமெரிக்க அதிபர் ஆகும் வாய்ப்பு கமலாவுக்குதான் இருப்பதாக கணித்துள்ளன. அதற்காக மட்டுமல்ல கமலாவின் அரசியல் செயப்ல்பாடுகள் அவரை அடுத்த அதிபர் ஆக்கும் எனவும் ஹாஃபிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

''மீட் கமலா ஹாரீஸ், இவர்தான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆக வாய்ப்பு கொண்டவர். கலிபோர்னியாவின் மிகவும் புகழ்பெற்ற இந்த  அட்டர்னி ஜெனரல்தான் வெள்ளை மாளிகையின் அடுத்த தலைவர் ஆவார் '' என ஹாஃபிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.  

''சிறந்த அட்டர்னி ஜெனரலாகவும் ஜனநாயகக் கட்சி தலைவராகவும் வலம் வந்த கமலா ஹாரீசின் செயல்பாடு மிகவும் சிறப்புக்குரியது. பதவி விலகவுள்ள பாரக் ஓபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோரிடம் கமலாவுக்கு நற்பெயர் இருக்கிறது.  இந்த இருவரின் ஆதரவும் இருப்பதால் 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. கமலா நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்' எனவும் அந்த பத்திரிகை கணித்துள்ளது. 

-எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்