Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படியொரு கால்பந்து போட்டி நடந்திருப்பது உங்களுக்கு தெரியுமா …?

கால்பந்து

இன்று டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா தேர்தலில் வென்றதும் ஒன்றல்ல. இன்று நடந்திருப்பது சம்பவம். அன்று நடந்தது வரலாறு. ஒரு வழக்கமான தேர்தலை வரலாறாக மாற்றியது எது? ஒபாமா தோலின் நிறம். அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெயரோடு அமர்ந்தார் ஒபாமா. வெறும் நிறம் தான் அங்கு வரலாறு படைத்தது. ஆனால் அந்த நிறத்திற்கென்று மிகப்பெரிய வரலாறு உண்டு. உலகின் ஒவ்வொரு மூளையிலும் முடக்கப்பட்டதால்தான் என்னவோ, லிங்கன், லூதர் கிங், ஒபாமா என்று அது எழும்போதெல்லாம் பெரும் ஓசை கேட்டது. அதற்கெல்லாம் காரணம் அந்நிறம் அடைந்த அவமானங்கள். 

வீதிகளிலும், வீடுகளிலும் மட்டும் கருப்பின மக்கள் அவமானங்களைச் சந்திக்கவில்லை. விளையாட்டு, கலை, கல்வி என அனைத்துத் துறைகளிலும் தான். காலம் மாறிவிட்டது. செல்லுலாய்டில் இவ்வுலக மூழ்கியிருந்தாலும், இன்னும் இனப்பாகுபாடு என்னும் மிருகம் மட்டும் இங்கு உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. ஆஸ்கர் விழாவை வில் ஸ்மித் புறக்கணித்தது முதல் கடந்த வாரம் பெர்த் டெஸ்ட் போட்டியில் அம்லா சாடப்பட்டதுவரை இன்னும் இனவெறி எங்கும் பரவிக்கிடக்கிறது. 

அதனை அடக்கத்தான் எத்தனை போராட்டங்கள். ஆனால் முழு வெற்றி தான் கிடைக்கவேயில்லை. இனவெறியின் சீண்டல்களுக்கு கால்பந்து விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் பிற விளையாட்டுகளை விடவும் அதிகம் இனவெறி தாக்குதல்களைச் சந்தித்தது கால்பந்தாகத் தான் இருக்கும். வீரர்களுக்கு இடையே, ரசிகர்களுக்கு இடையே கால்பந்து அரங்குகளில் அரங்கேறிய இனவெறிச் சண்டைகள் ஏராளம். பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் சுவாரஸ் கூட சில வருடங்களுக்கு முன்னர் மான்செஸ்டர் யுனைடட் வீரர் பேட்ரிஸ் எவ்ராவை இனவாத வார்த்தைகளால் திட்டியதற்காகத் தண்டிக்கப்பட்டார்.

1970களில் கால்பந்து மைதானங்களில் இனவேறிப் பிரச்சனை மிகவும் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக ரசிகர்கள் வீரர்களை மிகவும் அசிங்கமாகத் திட்டவே செய்தனர். இந்நிலையில் தான் ஒரு விநோதமான கால்பந்துப் போட்டி 1979ம் ஆண்டு இங்கிலாந்தில் அரங்கேறியது. இங்கிலாந்தின் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் அணியான வெஸ்ட் புரோம்விச் ஆல்பியான் அணி வீரர் லென் கன்டெல்லோ வேறு அணிக்கு மாறும் சூழல். உலக அரங்கில் சாதனைகள் செய்தவரல்ல அவர். ஆனால் வெஸ்ட் புரோம் அணிக்காக 11 ஆண்டுகள் (301 போட்டிகள்) விளையாடியவர். அதனால் அவருக்கு சிறந்த ‘செண்ட்-ஆஃப்’ கொடுக்க நினைத்த்து அணி நிர்வாகம். 

என்ன செய்யலாம் என்று யோசித்த நிலையில் யாரோ ஒரு மகானுக்குத் தோன்றிய சிந்தனை தான் கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் எதிரான ஒரு கால்பந்துப் போட்டி. அப்பொழுது வெஸ்ட் புரோம் அணியில் சிரில் ரெஜிஸ், லூரி கன்னிங்ஹம், பிரண்டன் பேட்சன் என்று 3 கருப்பு வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் ஒரு இங்கிலாந்து அணியில் 3 கருப்பின வீரர்கள் இருந்தது வெஸ்ட் புரோமிலாகத்தான் இருந்திருக்கும். இப்படியொரு யோசனை சொல்லப்பட்டதும் அவ்வீரர்கள் தயங்கவில்லை. உடனே சரியென்று கூறிவிட்டனராம். வோல்வராம்ப்டன் போன்ற பிற அணிகளிலிருந்து சில கருப்பின வீரர்கள் அழைக்கப்பட்டு முழுதும் கருப்பின வீரர்களைக் கொண்டிருந்த ‘சிரில் ரீஜிஸ் XI’ உருவாக்கப்பட்டு 1979 மார்ச் 15ம் நாள் அப்போட்டி விளையாடப்பட்டது.

சரி 27 வருஷம் கழிச்சு இப்போ எதுக்கு இந்த விஷயத்த கிளர்றோம்னு யோசிக்கிறீங்களா? வரும் 27ம் தேதி பிபிசி 2 சேனலில் இந்தப் போட்டியைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. அந்தப் போட்டியில் பங்கேற்ற இரு அணி வீரர்களும் அந்த ஆவணப்படத்தில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். வெஸ்ட் புரோம் அணியின் தீவிர ரசிகரான ஆட்ரியன் சிலிஸ் என்பவர் தான் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அந்தப் போட்டியில் கருப்பின அணியில் ஆடியவரான பாப் ஹசெல் பேசுகையில், “மைதானத்தில் இருக்கும்போது உங்கள் செவிகளில் அனைத்தும் விழும். நம்புங்கள். அனைத்துமே. ஒவ்வொரு இனவெறி வார்த்தைகளும் எங்கள் செவிகளில் விழுந்த வண்ணம் இருந்தது. அதையெல்லாம் காதுகளில் போட்டுக்கொண்டால் செயல்படவே முடியாது. அதைக் கட்டுப்படுத்தத் தெரிந்துவிட்டால் நம் திறன் மேம்படும். காற்றோடு காற்றாக அதை விட்டுவிட வேண்டும்” என்று ஸ்போர்டிவாகப் பேசுகிறார்.

அந்தப் போட்டியில் பங்கேற்ற வோல்வர்ஹாம்ப்டன் அணி வீர்ர் ஜார்ஜ் பெர்ரி கூறுவதுதான் நமக்குப் பேரதிர்ச்சியான விஷயம். ஒருமுறை வெஸ்ட் புரோம் அணிக்கெதிரான போட்டியில், ஒரு கார்னர் கிக்கின் போது அவ்வணி வீர்ர் சிரில் ரெஜிசை ‘மார்க்’ செய்துள்ளார் பெர்ரி. அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் தகாத வார்த்தைகளில் கருப்பு நிறத்தைக் குறிப்பிட்டு பச்சை பச்சையாகத் திட்டியுள்ளனர். திட்டிக்கொண்டிருந்த கும்பலிடம் ‘யாரைத் திட்டுகிறீர்கள்’ என்று பெர்ரி கேட்கையில், ‘என்னைத்தான்’ என்று தலையசைத்துள்ளார் ரெஜிஸ். ஆம், தங்கள் சொந்த அணி வீரரையே திட்டுமளவிற்கு இனவெறி அவர்களிடம் ஊரிப்போயிருந்தது.

அதே ஜார்ஜ் பெர்ரியும் ஒருமுறை இனவேறி சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் அவர் எதிர்கொண்ட விதமே வேறு. “வாட்ஃபோர்டு அணியுடனான போட்டியில் எங்களணி 3-0 என தோற்றிருந்தது. அப்போது ரசிகர்களில் ஒரு கூட்டத்தினர் என்னை வார்த்தைகளால் தாக்கத் தொடங்கினார்கள். பொறுமையிழந்த நான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து அவர்களைத் தாக்கிவிட்டேன். அப்போது கைது செய்யப்பட்டாலும், பின்னர் தண்டனையின்றி தப்பித்தது ஆச்சரியம் தான்” என்று தன்மீதான இனவெறித் தாக்குதலை நினைவு கூர்ந்துள்ளார் பெர்ரி.

இப்படியாக அப்போட்டியில் விளையாடிய ஒவ்வொருவரும் அந்த ஆவணப் படத்தில், தங்களின் அந்த நினைவுகளையும், இனவெறி அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி கால்பந்து வரலாற்றில் அந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகவும் கருதுகின்றனர். ஆம், அதுவரை ஒரு மைதானத்தில் வெறும் பத்து இருபது கருப்பர்கள் மட்டுமே போட்டியைக் காண வருவார்கள். வீரர்கள் ஒருபுறம் சீண்டப்பட, ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் அந்த பத்து கருப்பு ரசிகர்களையும் விட்டுவைக்க மாட்டார்கள். அப்படியும் மைதானத்திற்கு வரும் அந்த ரசிகர்கள் உண்மையில் தைரியம் மிக்கவர்களாகவே இருப்பர். ஆனால் இந்தப் போட்டியைக் காண வந்த 7,023 ரசிகர்களில் பெரும்பாலோனார் கருப்பினத்தவர்கள். தங்களுக்காக ஒரு அணி ஆடுகிறது என்பதைப் பார்க்கவும் அங்கு அவர்கள் குழுமியிருந்தார்கள்.

4 ஆண்டுகள் முன்பு, கிழக்கு மிட்லேண்ட் பகுதியில் வசிக்கும் ஒரு முதியவர் இப்போட்டியைப் பற்றி நினைவு கூர்ந்தது – “எனது நண்பனொருவன் வெஸ்ட் புரோம் அணியின் பரம ரசிகன். அந்தப் போட்டியை அவன் நேரில் பார்த்துவிட்டு என்னிடம் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான். கருப்பின வீரர்கள் அனைவரும் வெள்ளைச் சீருடையில் களம் கண்டிருக்கிறார்கள். அரங்கிலிருந்த கருப்பின ரசிகர்கள் அனைவரும் அவர்களை ‘கமான் வொயிட்ஸ்’ என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். வெஸ்ட் புரோம் ரசிகர்களும் அவர்களை உற்சாகப்படுத்தி மரியாதை செலுத்தினார்களாம்” என்கிறார் அவர்.

இதுதான் அந்த கால்பந்துப் போட்டிக்குக் கிடைத்த வெற்றி. மைதானம் பக்கமே வராத அந்த ரசிகர்களை கூட்டமாக வரவைத்தது, தாங்கள் கருப்பர்கள் என்பதை மறக்கடித்து, வெள்ளையர்களைப் போல் உற்சாகமூட்டவைத்தது, தங்கள் அணி வீரரையே திட்டும் ரசிகர்களையும், கருப்பின அணிக்கு ஆதரவு அளிக்கவைத்தது என இப்போட்டி நிச்சயமாய் ஒரு மைல்கல் தான்.

சரி அந்த மேட்ச் என்னதான் ஆச்சுனு பார்க்குறீங்களா? ‘சிரில் ரெஜிஸ் XI’ என்றழைக்கப்பட்ட கருப்பு வீரர்கள் அடங்கிய அணி 3-2 என வெள்ளை வீரர்கள் அடங்கிய ‘லென் கான்டெல்லா XI’ அணியை வீழ்த்தியது!

-மு.பிரதீப் கிருஷ்ணா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close