Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடுகளில் திகீர் துண்டுப் பிரசுரங்கள்... இனவெறி பயத்தில் அமெரிக்கர் அல்லாதோர் !!

மெரிக்காவின் 'க்ரைக் ரான்ச்' என்ற ஊரில், குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் சமீபத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் போடப்பட்டது. இதில் என்ன ஆச்சர்யம்? எங்கள் வீடுகளில் கூடத்தான் தினந்தோறும் ஒரு துண்டுப்பிரசுரம் விழுகிறது என்கிறீர்களா? இது, அதுபோல சாதாரண துணிக்கடை பிரசுரம் அல்ல... அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளவரைப் பார்த்து மக்கள் பயப்படும்படியான ஒரு துண்டுச்சீட்டு. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. எனிலும் அவருக்கு சில பல எதிர்ப்புகள்  வந்ததும் முழுக்க முழுக்க உண்மையே.

என்ன எதிர்ப்புகள் வந்தாலும் இப்போதைக்கு அமெரிக்காவின்  ஸ்டார் ட்ரம்ப் தான். இந்நிலையில், ட்ரம்ப்-ன் ஏதோ ஒரு கடைக்கோடி ஆதரவாளர் செய்த வேலைதான் அந்த பரபரப்பான துண்டுப்பிரசுரம். அது, ஹாட் ஆஃப் தி சிட்டி ஆக மாறி விட்டிருந்தது. 'அப்படி அதுல என்னதான் எழுதியிருக்கு, அட சொல்லுங்கப்பா'-ங்கற உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது... இதோ அந்த கடிதாசி...ஸாரி, பிரசுரத்தின் விவரம்...

“ட்ரம்ப் அமெரிக்காவுக்கே கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்....வெள்ளைமாளிகைக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் ட்ரம்ப்.... நாங்கள் எங்களுடைய நாடு பழைய நிலைக்கு மாறுவதற்காக காத்துக்கொண்டு இருக்கோம்.....எங்களுடைய முக்கியக் கோரிக்கையே இங்க இருக்கின்ற இந்துக்களையும், முஸ்லிம்கள், கறுப்பினத்தவர் மற்றும் யூதர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.... இங்க என்னல்லாம் நடக்குதுன்னு நாங்க பார்த்துக்கிட்டேதான் இருக்கோம். நாங்க டெக்ஸாசில் எங்களுடைய செயல்களைச் செய்யத் தொடங்கிடுவோம். எங்க பிரஸிடென்ட் ட்ரம்ப் நாட்டை பார்த்துக் கொள்வார். இங்க இருக்குற வெளிநாட்டவர்கள் எல்லாம் அதிக சம்பளம் வர்ற வேலைகளை எங்ககிட்ட இருந்து பறிச்சுக்கிறாங்க. யாரும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது.. சட்டரீதியாக ஏதாவது தொந்தரவு வந்தால், அதை எப்படிச் சந்திக்கணும்னு எங்களுக்குத் தெரியும்” என்று அதில் அச்சிடப்பட்டுள்ளது.

அச்சத்தில் மக்கள்!

இந்த துண்டுபிரசுரத்தைக் கண்ட ஒரு தென்ஆஃப்ரிக்கர், இதனை புகைப்படமாய் எடுத்து செய்திச் சேனல்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அல்லெனில் தங்கியிருக்கும் இவர், பாதுகாப்பு கருதி எவ்வித அடையாளங்ளையும் தெரிவிக்கவில்லை. ஒரே ஒரு கருத்தை மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பதிவு செய்துள்ளார். “எங்கள் எதிர்காலத்தை நினைத்து, நாங்கள் ரொம்பவே குழம்பி உள்ளோம். எங்கள் வாழ்க்கைக்கு பாதுகாப்பு இருக்குமா? என்பது சந்தேகமே” என கூறியுள்ளார்.

“இதுவரை 701 குற்றங்கள் பதிவாகியுள்ளன”

இந்த துண்டுப்பிரசுரம் குறித்து, மெக்.கின்னிஸ் காவல்துறையினர் கூறுகையில், “பல வீடுகளுக்கும் இதுபோன்ற நோட்டீஸ் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்களும் நிறைய வந்துள்ளன. ஆகவே, இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். விசாரணை நடைபெற்றுவருகிறது"  என்றனர். என்னதான் இவர்கள் இவ்வாறு கூறினாலும், அங்குள்ள சத்ர்ன் பாவெர்டி மையத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “தேர்தல்நாள் தொடங்கி, இன்றோடு ஏறத்தாழ 701 குற்றங்கள் வரை பதிவாகியுள்ளன. இதில் 65% குற்றங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சீரியஸானால் நடவடிக்கை உண்டு!

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், இதுகுறித்து ட்ரம்ப்-யிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, இதனை அறவே மறுத்துள்ளார் ட்ர்ம்ப்.... “இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை நான் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை...ஒதுக்கி விடுவேன். யாரையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட ஊக்கப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை இவ்விஷயம் சீரியஸானால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ட்ரம்ப்பின் தெரிவித்தார்.

ஸ்டீவ் பானெனுடன் ட்ரம்ப்

இவை, எல்லாவற்றையும் தாண்டி, தற்போது ட்ர்ம்ப் செய்துள்ள மற்றொரு காரியம் நிறைய பேருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது... ஸ்டீவ் பானென் என்பவரை வெள்ளைமாளிகையின் முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளார். இந்த ஸ்டீவ் பானென் பற்றி அங்குள்ள இதழ்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளன. யூதர்களை எதிர்ப்பது, பெண்ணின எதிர்ப்பாளர், இன வெறியர் என அவர் மீது  குற்றச்சாட்டுகள் உள்ளன. "இவர் மேல், என்னதான் குற்றஞ்சொன்னாலும், ஸ்டீவ் பானென்ன நியமித்ததில் மாற்றம் இல்லை. ஒருவேளை அவர் மீது இதற்குப் பிறகும் ஏதாவது குற்றாச்சாட்டுகள் கூறப்பட்டு நிரூபிக்கபடுமானால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது மட்டும்தான் வழி:

ஒருபுறம் இனவெறியை வெளிப்படுத்தும் வாசகங்கள் வீட்டு வாசலில் மிரட்டலோடு விழுகிறது. மற்றொருபுறம் ஸ்டீவைக் கண்டு பயம் என அமெரிக்கர்கள் பலரும் ஏகமாய் பயந்துபோய் உள்ளனர். இதெல்லாம் சரியாக, ஒரு வழி இருக்கு. அது என்ன தெரியுமா? இந்தியாவில் திடீரென்று இனி 500, 1,000 செல்லாதுன்னு பிரதமர் மோடி சொன்ன மாதிரி, இனி சாதி, மதம், இனம் எதுவும் செல்லாதுன்னு சொல்லுங்கப்பா... நாடு என்ன நாடு? உலகம் முழுக்க அழுக்கில்லாம, கறுப்பு மனசு கொண்டவங்ககிட்ட இருந்து காப்பாற்றப்பட்டுடும் ஆமா!

-ஜெ. நிவேதா
மாணவப் பத்திரிகையாளர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ