Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்

90 வயதான க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதை ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரௌல் காஸ்ட்ரோவும் அறிவித்துள்ளார். க்யூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோ, க்யூபாவின் அதிபராக இருந்தார். சேகுவேராவின் நண்பராகவும், சக போராளியாகவும் இருந்தவர் காஸ்ட்ரோ. இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அவரது மறைவை முன்னிட்டு அங்கு ஒன்பது நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் க்யூபா அரசு தெரிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோ வரலாறு

காஸ்ட்ரோவின் இயற்பெயர் பிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரூஸ்

1926ல் கியூபாவின் ஹொல்கூன் மாகாணத்தில் பிறந்தவர் காஸ்ட்ரோ

கியூபாவில் புரட்சியின் போது சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் இணைந்து போராடினர்

ராணுவ  ஆட்சியாளர் பாடிஸ்டாவுக்கு எதிராக போராடி ஆட்சியை பிடித்தவர் பிடல்

1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ

1976 முதல் 2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ

பிடல் காஸ்ட்ரோ -கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின் ஆகியோர் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் பிடல் கேஸ்ட்ரோ இவருடையது. வக்கீலாகத் தன் தொழிலில் ஈடுபட்ட கரும்புப்பண்ணை பணக்கார விவசாயியின் பையன் முதலாளித்துவத்தை எதிர்க்கிற ஆளாக நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் அவர் நாட்டின் சூழல். ஒரு பக்கம் மக்கள் துன்பத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தார்கள். வறுமை மக்களை வாட்டிகொண்டு இருக்க,அடிப்படை வசதிகள் இல்லாமல் நாடே துன்பப்பட்டுக்கொண்டு இருந்த பொழுது அமெரிக்காவின் பெருநிருவனங்களைக் காக்கும் பணியைத் தான் செவ்வனே க்யூபாவின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். மாடு திருடி பிழைத்தவர் எல்லாம் தலைவன் ஆகி நாட்டைக் காலி பண்ணி கொண்டு இருந்தார்கள்.

காஸ்ட்ரோ எக்கச்சக்க நிலங்கள் கொண்டிருந்தவரின் மகன். பாடிஸ்டா எனும் ஆட்சியாளன் (அமெரிக்காவின் கைப்பாவை )தேர்தல் நடத்துவதாகச் சொல்லிவிட்டு தேர்தலை நடத்தாமல் போக அதில் போட்டியிட்ட காஸ்ட்ரோ அதிர்ந்து போனார் ;அவனுக்கு எதிராக ஒரு புரட்சி நடத்தி அதில் பலபேரை இழந்த பின் நீதிமன்றத்தில் அவரை நிறுத்திய பொழுது வரலாறு என்னை விடுதலை செய்யும் என அவர் ஆற்றிய உரை சிலிர்க்க வைப்பது -வெகு சீக்கிரமே அரசாங்கம் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் விடுதலை செய்தது -சே குவேராவுடன் சேர்ந்து பன்னிரண்டு தோழர்களுடன் உதவியோடு கொரில்லா போரை ஆரம்பித்து ஆட்சியை எளிய மக்களின் துணையோடு பிடித்துக் காண்பித்தார்.

அவர் ஆட்சியை ஒழிக்க அமெரிக்க எடுத்த முயற்சிகள் ஏராளம் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள் என்கிற ஆவணப்படமே வந்தது .

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெயை ரஷ்ய நிறுவனங்களிடம் வாங்க சொன்னார் .அவர்கள் நோ சொன்னார்கள் .தேசிய மயமாக்கினார் .அடிமாட்டு விலைக்குக் கரும்பு விளைவிக்கும் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்கிய யூனைடட் ப்ரூட் கம்பெனிக்கு அதே விலைக்கு இழப்பீடு கொடுத்து டாட்டா காண்பித்து அனுப்பினார் .அமெரிக்கா என்னடா இது எனச் சுதாரிப்பதற்குள் இப்படி நடந்ததும் சர்க்கரையை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றது . இதற்குதான் காத்திருந்தேன் என அமெரிக்காவின் வங்கிகள்,நூற்றி அறுபத்தி ஆறு கம்பெனிகள் என எல்லாவற்றையும் தேசிய மயமாக்கினார் கேஸ்ட்ரோ . ரஷ்யா கைகொடுத்தது.நடுவில் ஒரு ஆயிரத்து நானூறுபேரை அமெரிக்கா இவரின் ஆட்சியை ஒழிக்க அனுப்பி முகத்தில் கரிப்பூசிகொண்டது.

காலி என அமெரிக்கா நினைத்த,காலியாக்க நினைத்த காஸ்ட்ரோ மற்றும் க்யூபா பல்வேறு பொருளாதாரத் தடைகள்,சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப்பாதையில் நடை போடவே செய்தது . மக்கள் ஓயாமல் உழைத்தார்கள். உலகில் மிகச்சிறந்த பொதுமருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. குழந்தைகள் நலம்,கல்வி ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்படும் பணம் மொத்த வருமானத்தில் அதிகமே. மனித வள குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் அந்நாடு இருக்கிறது. க்யூபா அமெரிக்காவின் காலின் கீழ் உள்ள முள் போல உலக வரைபடத்தில் இருக்கும். அது காலில் தைத்த முள் இல்லை;கண்ணில் தைத்த முள். அந்த நம்பிக்கை தேசத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.  

 

--பூ.கொ.சரவணன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close