Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கியூபா... கம்யூனிசம்... காஸ்ட்ரோவுக்குப் பிறகு!?

 

 

சிறுவர்களுக்கான மாய மந்திரக் கதைகளில் வரும் உயரமான ராட்சதர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும். ஆறரை அடி உயரம், கையில் சுருட்டு, இடுப்பில் துப்பாக்கி, புரட்சிக்காரர்களுக்கே உரிய கரும்பச்சை உடை. எங்கிருந்தாலும் யாராலும் எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய இந்த உருவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவோ முறை முயன்றும் பிடிக்க முடியவில்லை. தனியொரு மனிதனைக் கொல்ல கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 638 முறை இவர்மீது கொலைத் திட்டம் தீட்டினார்கள். அத்தனை முறையும் அவர்களிடமிருந்து தப்பித்த காஸ்ட்ரோவை தன் 90-வது வயதில் இயற்கை தழுவிக் கொண்டது. அதுவும் அவர் முன்பே அறிந்து விட்டிருந்த மரணம் என்றுதான் சொல்லவேண்டும். 

 

 

கடந்த ஏப்ரலில் கடைசியாகத் தனது உரையை நிகழ்த்திய காஸ்ட்ரோ இப்படித்தான் கூறினார், "நான் என் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் எனது 90-வது பிறந்தநாள் வருகிறது. ஆனால் கியூபாவின் புரட்சி எனக்குப் பின்னும் இந்த பூமியில் பேசப்படும். புரட்சிதரும் செய்தி இதுதான், நான் மாண்போடும் பேரார்வத்தோடும் உழைக்கும்போது மனித இனத்தின் தேவைக்கான பொருள் நிச்சயம் நம் வசப்படும். இதற்கு இடைவெளி இல்லாத போராட்டம் தேவை' என்றார்.

 

ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு உலகளாவிய அளவில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் உயரநோக்குவது அர்ஜென்டினா, கியூபா, வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சி போராட்டத்தைத்தான். ஆனால் இப்படிப் போராடிக் கட்டமைக்கப்படும் நாட்டின் ஆட்சி அதிகாரம் எப்படி இருந்தது? கியூபாவின் தந்தை எனக் கருதப்படும் மார்த்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தமிழ் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அமரந்தா, அங்கு தான் பார்த்ததைப் பகிர்ந்து கொண்டார்.

 

மேலிடம் யாருக்கும் ஆணையிடாது!

 

"ஃபிடலுடன் போராட்டம் நடத்திய அனைவருமே அறிவார்ந்த ரீதியாக திறம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். குறிப்பாக ஃபிடலே கூட ஒரு வழக்கறிஞர்தான், போராட்ட காலத்தில்கூட ஆண், பெண் பாகுபாடு இல்லை. உடல் உழைப்பும் மூளை உழைப்பும் ஒரே அளவீட்டில்தான் பார்க்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் அமைக்கப்பட்டபோதும் அதுவே பின்பற்றப்பட்டது. மக்களின் கருத்துகளைத்தான் பிரதிநிதிகள் ஒரு பெரிய கமிட்டியிடம் எடுத்துச் செல்வார்கள். ஆண், பெண் இருவருமே இருக்கும் அந்தக் குழுவில் மக்களின் கோரிக்கை விவாதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். மற்றபடி அங்கு மேலிடம் எதுவுமே மக்களுக்கு ஆணையிட்டதில்லை"

 

"மார்த்தியின் பிறந்தநாள் விழாவுக்காக நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது. நாட்டிலேயே இன்றளவிலும் பெரிய கட்டிடம் அதுதான். அதைத் திறந்து வைக்க காஸ்ட்ரோ வந்தார். அவர் ஒரு காரிலும்,  அவருடன் வந்தவர்கள் மற்றொரு காரிலும் வந்தனர்.

ஒரே ஒரு பாதுகாவலர், அவ்வளவே. வந்தார், திறந்து வைத்தார், சென்றார். மற்றபடி பாதுகாப்பு வளையம் கருப்புப் பூனை, காவல் படை என எதுவும் அவரைச் சுற்றி இல்லை. குறிப்பாக அந்த நாட்டின் நிர்வாகத்தில் இருக்கும் எந்த தலைவரின் புகைப்படமும் எங்கும் இருக்காது. நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே தன்வசம் வைத்திருந்த காஸ்ட்ரோவின் படம் எங்குமே தென்படவில்லை. அதிசயமாக ஹவானா பல்கலைக்கழகத்தில் மட்டும் அவரது ஒரே ஒரு படம் இருந்தது" என்று கூறி அந்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறார் அமரந்தா.

 

"தன் கல்விக் கொள்கைகளின் மூலம் நாட்டில் பல மருத்துவர்களையும் சட்ட வல்லுநர்களையும் உருவாக்கினார் காஸ்ட்ரோ. உலகில் மருத்துவத்தில் தலைசிறந்த நாடு கியூபா. ஆனால் கியூபாவின் மீது பல தடைகளை விதித்த அமெரிக்கா, அவர்களை ஒதுக்கியது. இருந்தும் ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகள் இயற்கைச் சீற்றங்களாலும், கொடுமையான நோயாலும் பாதிக்கப்பட்ட காலங்களில், முதலில் சென்று உதவிக்கரம் நீட்டியது கியூபாதான். ஆனால் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் கியூபாவுடன் நல்லெண்ண ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் தத்தம் நாட்டின் உளவாளிகள் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பிறகு இரு நாடுகளும் நேச உறவுகளுடன்தான் இயங்கி வருகின்றன. தற்போது காஸ்ட்ரோவும் இல்லாத சூழலில், இந்த நேச உறவே கியூபாவிற்கு ஊறு விளைவிக்கலாம். ஆனால் புரட்சியாளர்களும் போராட்டக்காரர்களும் இருக்கும்வரை, அந்நாடு காஸ்ட்ரோ போலவே அமெரிக்காவிடமிருந்து தப்பிப் பிழைத்துக் கொள்ளும்" என்றார்.

 

காஸ்ட்ரோவின் இறுதி வார்த்தைகளும் அதுதான், "நாம் இடைவெளியின்றிப் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்"

 

- ஐஷ்வர்யா
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close