Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நூற்றாண்டுகளிலும் பிறந்த நாள் கொண்டாடிய இத்தாலி பாட்டி!

பாட்டி

19-ம் நூற்றாண்டில் இறுதியில் பிறந்து, இன்றுவரை உயிர்வாழும் கடைசிப் பெண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், எம்மா மொனாரோ என்ற பாட்டி.

நமக்குத் தெரிந்தவரையில் நூறு ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதே அரிது. ஒரு சில பேர்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், இத்தாலியில் பிறந்த பாட்டி 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் தன் பிறந்த நாளைக் கொண்டியிருக்கிறார் எனும் செய்தி முதலில் ஆச்சர்யத்தை அளித்தாலும், பின் மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதானே.
 
நவம்பர் 29, 1899-ல் பிறந்த எம்மா மொனாரோ, உலகிலேயே மிகவும் வயதான பாட்டி என்ற சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் தன் 117-வது பிறந்தநாளை மிக சிறப்பாகக் கொண்டாடிய இந்தப் பாட்டி, இத்தாலியில் பிறந்தவர். கடும் உழைப்பாளியான இவரது வாழ்க்கை தன்னம்பிக்கையோடு ஒருவர் வாழ்வதற்கான உதாரணமாக கொள்ள வேண்டியதாகும்.

இத்தாலியில் உள்ள லேக் மேகியோர் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் எம்மா பாட்டிக்கு, எட்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இப்போது குடுகுடு தாத்தா, பாட்டியாகிவிட்டபோதிலும், 'இத்தனை வயதுவரை ஆரோக்கியமாக இருக்கும் எங்கள் அம்மாவைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது' என்கிறார்கள். 1936-ல் தன் கணவரை இழந்த பிறகு, ஒரு சிறு தொழிற்சாலையில் கூலிவேலை செய்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றிவந்தார் எம்மா. தங்களை சிரமப்பட்டு வளர்த்ததை இன்றும் நெகிழ்வோடு உணர்கிறார்கள் பிள்ளைகள்.

 ''தினமும் இரண்டு முட்டைகள், அத்தோடு பிஸ்கெட்ஸ் சாப்பிடுகிறேன். பற்கள் இல்லாதனால் என்னால் அதிகமாக சாப்பிடி முடியாது என்று FAP நியூஸ் நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

நூறு ஆண்டுகளைக் கடந்த இவருக்கு புதிய விஷயங்கள் ஏதும் தெரியாது என நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி கூறும்போது,

'இன்று என் பிறந்தநாளைக்கு யாரையும் அழைக்கத் தேவையில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து என உலகில் உள்ள எல்லா மக்களும் இணையம் மூலம் என்னை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு இருப்பார்கள்' என்று பொக்கை வாய் புன்னகையோடு கூறும் பாட்டி, 'சென்ற பிறந்தநாள் அன்று சிறு துண்டு கேக் சாப்பிட்டேன். இந்தப் பிறந்தநாளைக்கு அதுவும் சாப்பிடமுடியவில்லை' என்று வருந்துகிறார்.

'இப்போது படுக்கையைவிட்டு என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. கேட்பதும், பேசுவதும் குறைந்துவிட்டது. கண்பார்வை மங்கிவிட்டது. என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து வருவதை என்னால் நன்றாக உணரமுடிகிறது' என்று சோகமாகும் பாட்டியை, உலகம் முழுக்க இருந்து குவிந்தவண்ணம் இருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் மூப்பின் அவஸ்தைகளையும் மீறி மலர்த்திக்கொண்டிருக்கின்றன. அந்த வாழ்த்துகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பாட்டி, அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறார்.

19-ம் நூற்றாண்டின் கடைசி மனுஷியின் பிறந்தநாளுக்கு வாழ்த்த உறவினர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் ரிப்போர்ட்டர்கள், சாட்டிலைட் சேனல்கள் என அவர் வீடே நிரம்பிவிட்டது. 'மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெண்' என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற உள்ளார் பாட்டி.

எம்மா மொனாரோவை கௌரவிக்க உள்ளூர் திரை அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றிய சுய சுயசரிதை 'The Woman Who Saw Three Centuries' என்ற பெயரில் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலத்தின் சாட்சி!

- என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்