Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எய்ட்ஸ் நோயும்... ஆணுறை விழிப்புணர்வும்! - #WorldAidsDay

ந்தக் கட்டுரையை நீங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் இவ்வேளை வரையிலும் மருத்துவ விஞ்ஞானத்தால் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய் 'எய்ட்ஸ்', காற்றின் மூலமாகவோ, அல்லது உடல் ஸ்பரிசத்தின் மூலமாகவோ இந்நோய் பரவுவது இல்லை; ரத்தத்தின் மூலமாகவேப் பரவுகிறது.  பாதுகாப்பான உடலுறவே எய்ட்ஸ் வராமல், தடுப்பதற்கான வழியாக உள்ளது.  உலகில் 3.5 கோடி மக்களுக்கும் மேல், எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்திருக்கின்றனர். அதில் 18  லட்சம் பேர் குழந்தைகள். உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதியதாக எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த ஆண்டு எய்ட்ஸ் ஒழிப்புக்கான கருப்பொருள் Getting to Zero, அதாவது எய்ட்ஸ் நோய் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அது. 1988-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெரும்பான்மையான மக்கள் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்பு உணர்வு பெற்று வருகிறார்கள்.

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒரே வழி பாதுகாப்பான உடலுறவாகும். பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை மிக அவசியமாகிறது. அதனால், இந்த உலக எய்ட்ஸ் தினத்தில் அனைவரும் ஆணுறை பற்றி தெரிந்து கொள்வதும் அதன் விழிப்பு உணர்வினைப் பெற்றுக்கொள்வதும் அவசிமாகிறது

இந்தியாவில் இன்றுவரை ‘காண்டம்’ என்ற சொல் தவறாகவே பார்க்கப்படுகிறது. இன்னமும் 98 சதவிகித குடும்பங்களில் காண்டம் என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலை இந்தியாவில் உள்ளது. அவ்வளவு ஏன்? தொலைக்காட்சிகளில், விளம்பர இடைவேளைகளில் காண்டம் பற்றிய விளம்பரம் வந்தாலே அந்த சேனலை மாற்றிவிடுவோம். உண்மையில், அது ஆபாச வார்த்தையே அல்ல... இன்றைய நாட்களில் கண்டிப்பாக காண்டம் பற்றிய பயன்பாடும் அதன் விழிப்பு உணர்வும் பெற்றிருத்தல் அவசியமாகிறது. குறிப்பாக, இந்தியர்களுக்குத்தான் காண்டம் பற்றிய விழிப்பு உணர்வு அவசியம் தேவை என்கிறது உலக ஆய்வின் முடிவு. நாம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் வாழ்ந்து வருகிறோம். நம்மைச்சொல்லித் தவறில்லை, நாம் வாழும் நாடு அதுபோன்றது. ஏனென்றால் நமது இந்தியா, கலாசாரத்தை முதுகெலும்பாகக் கொண்டு செயல்படுகிறது. அவற்றை நாம் சார்ந்து இருப்பதால்... காண்டம் பற்றிப் பேசவோ, அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ அச்சப்படுகிறோம். ஆனால், இன்றையச் சூழ்நிலையில் அனைவரும் காண்டம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும். காண்டம் பால்வினை நோய்களைத் தடுப்பது மட்டுமில்லாமல், கருத்தடைச் சாதனமாகவும் பயன்படுகிறது.

1990 காலகட்டங்களில் பெருகிவந்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவும், தீவிரமாய் பரவிவந்த எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தவும், இந்திய அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது வட இந்தியாவில் குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் எய்ட்ஸ் நோய் தீவிரமாகப் பரவிவந்தது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர பீகார் அரசு விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த முடிவு செய்தது. ஆனால், ஆணுறை பற்றி விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்துவதற்கு எந்த சமூக ஆர்வலருமே முன்வரவில்லை. காரணம், நம்மைப்பற்றி மக்கள் தவறாக நினைப்பார்களோ என்ற பயம். ஒரு வழியாக சில சமூக ஆர்வலர்கள் சம்மதித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சென்றனர். ஆனால், தயக்கம் காரணமாக ‘கட்டை விரலில் ஆணுறையை அணிந்தபடி...’ இதுபோன்று அதைப் பயன்படுத்தினால் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டு வந்துவிட்டனர். சில மாதங்கள் கழித்து அந்த மக்களைச் சந்திக்க சென்றபோது, அனைத்து ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி ஸ்தம்பித்துப் போயினர். காரணம், அனைவருமே கட்டை விரலில் ஆணுறையை அணிந்துகொண்டு சுற்றி வந்தனர்

இந்தியாவில் முதன்முதலாக 1969-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் லேக்டஸ் என்ற நிறுவனம்தான் ஆணுறையை அறிமுகப்படுத்தியது. தேவையற்ற கரு உருவாதலை தடுப்பதற்காகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. ஆணுறை பற்றிய ஒரு பொதுவான உண்மையைத் தெரிந்துகொள்வோம். ஆரம்பித்த இடத்திலேயே ஒரு செயல் முடிகிறது என்று சொல்வோம் அல்லவா? இது ஆணுறைக்குப் பொருத்தமான உண்மையாகும். ஆரம்ப காலத்தில் பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டன. பின், அது குடும்பக் கட்டுப்பாட்டுச்  சாதனமாக மாறியது. அதன்பின், உலகமே எய்ட்ஸ் நோயால் பாதிப்படைய மீண்டும் ஆணுறைகள் பழையபடியே பால்வினை நோய் கட்டுப்பாட்டுச் சாதனமாக மாறிவிட்டது.

‘காண்டம்’ பெயர்க் காரணம்:

ஆணுறைக்கு, ஆங்கிலத்தில் ‘காண்டம்’ என்று பெயர் வந்தது எப்படி? இதற்கு இரண்டு விதமான காரணங்கள் நடைமுறையில் சொல்லப்படுகின்றன. கி.பி 1600 காலகட்டத்தில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சார்லஸ் தன்னை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக ஓர் உபகரணம் செய்து தருமாறு அரசவை மருத்துவராக இருந்த காண்டத்திடம் வேண்டினார். அதனால், அவர் ஆட்டின் குடலினால் ஆன ஆணுறையை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதனாலேயே அதற்கு அந்தப் பெயர் வந்தது எனப் பலர் சொல்கின்றனர். வேறு சிலரோ, லத்தீன் மொழியில் ‘காண்டஸ்’ என்றால் கிண்ணம். ஆணுறை, கிண்ணம் போன்று இருப்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.


ஆணுறையின் வரலாறு:

ஆணுறையின் வரலாறு கி.மு காலங்களிலேயே ஆரம்பிக்கிறது. கி.மு. 1350 காலகட்டங்களில் நாடோடியர்களாக வாழ்ந்த எகிப்தியர்கள் பூச்சிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், காயங்கள் ஏற்படாமல் இருக்கவும் இலைகள் மற்றும் விலங்குகளின் தோல்களினால் ஆன ஆணுறையை அணிந்து சுற்றிவந்தனர். இதுவே உலகத்தின் முதல் ஆணுறையாகும். அதன்பின்பு, கி.பி 1500 காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகளில் ‘சிபிலிஸ்’ என்ற பால்வினை நோய் வேகமாக பரவிவந்தது. இதன் காரணமாக தங்களின் மனைவியுடன் உடலுறவுகொள்வதற்கே பயந்தனர். அப்போது இத்தாலியின் புகழ்பெற்ற உடற்கூறு நிபுணரான கேப்ரியேல் ஃபெலோபியஸ், மெல்லியத் துணியினால் ஆன ஓர் ஆணுறையைக் கண்டுபிடித்தார். அதை, நோய் பரவாமல் இருப்பதற்காகச் சில இயற்கை ரசாயனங்களையும் சேர்த்துத் தயாரித்திருந்தார். இவரே இன்றைய நவீன ஆணுறைகளின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்

கி.பி 1600-லிருந்து கி.பி 1800 காலகட்டங்கள் வரை ஆடுகளின் குடல்களைக்கொண்டும், விலங்குகளின் தோல்களைக்கொண்டும் ஆணுறைகள் செய்யப்பட்டன. 1840-ம் ஆண்டு ஆணுறைகளின் தேவை அதிகமானதால் ரப்பரால் ஆன ஆணுறைகள் புழக்கத்துக்கு வந்தன. பின்பு 1930-களில் லேடெக்ஸ் எனும் ரப்பர் தொழில்நுட்பம் வந்தபிறகு, மெலிதான ஆணுறைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது புழக்கத்தில் உள்ள ஆணுறைகள் பாலியூரித்தேன் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். இவை டியூரான் என அழைக்கப்படுகிறது.

மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்!

பலபேர், ஆணுறை பயன்படுத்தி கடுமையான அலர்ஜி மற்றும் அவஸ்தைக்கு உள்ளாகி இருப்பார்கள். லாடெக்ஸ் என்ற பொருளைக் கொண்டு ஆணுறைகள் தயாரிக்கப்படுகின்றன. அதன் கோட்டிங் ஸ்பெர்மிசைடு என்னும் பொருளால் ஆனது. இந்த வேதிப் பொருட்கள்தான் உடல் அலர்ஜி மற்றும் ஒவ்வாமைக்குக் காரணம். இந்த பிரச்னை அனைவருக்கும் ஏற்படுவதில்லை... குறிப்பாக, ஒருவர் முதன்முதலாக ஆணுறை பயன்படுத்தும்போது அது மருத்துவரின் ஆலோசனை பெற்றுப் பயன்படுத்துவதே நலம். இதில், பலவகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட பல வகை ஆணுறைகள் உள்ளன. அதில், நம் உடலுக்கு ஏற்றவகையில் மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி உபயோகிப்பது நல்லது. இல்லையென்றால், சரும அரிப்பு, வாந்தி, மார்பு இறுக்கம் போன்றவை வர நேரிடும். முக்கியமாக ஆணுறை மூலமாக அலர்ஜி ஏற்பட்டால் சில நேரங்களில், அதன் காரணமாக ரத்த அழுத்தம் குறையும். இதற்கு உகந்த சிகிச்சை அளிக்காவிடில் அபாயகரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே ஆணுறைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது வெட்கப்பட வேண்டிய செயல் அல்ல.

ஆணுறை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

* உலகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட காண்டம் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து 20 மில்லியனுக்கும் அதிகமான காண்டங்கள் உற்பத்தியாகின்றன.

* நடந்து முடிந்திருக்கிற ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில்தான் இதுவரை அதிக காண்டங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது, 2,50,000 உபயோகப்படுத்தப்பட்ட காண்டங்கள் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிக்கிடந்ததாம்.

* இங்கிலாந்தில் 20 வயதுக்குட்பட்டவர்களே காண்டம் அதிமாக வாங்குகின்றனர்.

ஜெ.அன்பரசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ