Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியாவின் ரசாயன தாக்குதல் தடுமாறும் உலக நாடுகள்

சிரியா

திகாலை நேரம்... சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிபின், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்ஹோன் நகர மக்கள் விழித்தெழுந்த சமயம். இன்னும் பலர் விழித்தெழக்கூட இல்லை. சிரியாவின் போர் விமானம் ரசாயன குண்டுகளை நகரத்தின் மீது போட்டது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி அலறி எழுந்தனர்... வாயில் நுரை தள்ளி பலர் சுருண்டு விழுந்தனர். பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற பாகுபாடு இன்றி ஆங்காங்கே கொத்துக்கொத்தாக  சுவாசிக்க முடியாமல் மருத்துவமனைக்கு ஓடினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. 

சிரியாவில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, தன் சொந்த மக்கள் மீதே பசார் அல்-அசத் அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. பல லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக அண்டைநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 2015-ம் ஆண்டுச் சிரியாவில் இருந்து தப்பி, துருக்கி செல்லும்போது கடலில் மூழ்கி சிறுவன் அய்லன் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், சிரியா தன்னுடைய தாக்குதலை நிறுத்தவில்லை. மறைமுகமாகத் தொடர்ந்து ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது சிரியா. 

அய்லன்

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4ம் தேதி), வடமேற்கின் இட்லிப் மாகாணத்தின் மிகப்பெரிய ரசாயனத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால், இதற்கு சிரியா அரசு பொறுப்பேற்கவில்லை. ஆனால், 'சிரியா அதிபர் பசார் அல் அசாதின் படையே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது என்று நம்புகிறோம்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேபோல், வடமேற்கு மாகாண நிர்வாகமும் சிரியாதான் இந்தத் தாக்குதலை நடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவின், சுகோய் ரக விமானத்தில் இருந்துதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தாக்குதலை நேரில் பார்த்த, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், சிரியா ராணுவமோ, நாங்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது இல்லை என்று மறுத்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்கிறது சிரியா. இந்தத் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமே. உடலைக் கொண்டு வராமல் வீட்டில் பலர் வைத்திருக்கின்றனர். இவர்களையும் கணக்கிட்டால், இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதவிர, 300க்கும் மேற்பட்டவர்கள் சுவாசப் பிரச்னைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இட்லிப் மாகாண சுகாதார அதிகாரி மான்சென் கலீர் கூறுகையில், “4ம் தேதி காலை 6.30 மணி அளவில், கான் ஷேக்ஹோன் நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. குளோரின் மற்றும் சரீன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். மாகாணத்தின் எல்லா மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பியுள்ளது. இவர்களுக்குப் போதுமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

குழந்தைகள் பலி

சிரியாவிடம் பயங்கர ரசாயன ஆயுதங்கள் உள்ளன. இதைத் தன் சொந்த மக்கள் மீதே பயன்படுத்தக்கூடும் என்று 2012-ம் ஆண்டே எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், இதை சிரியா மறுத்தது. ஆனால், முதன்முறையாக, 2013-ம் ஆண்டு வடக்கு எல்லைப் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதலை சிரியா நடத்தியது. இதில், சொந்த ராணுவ வீரர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குச் சிரியா பொறுப்பேற்கவில்லை. என்ன மாதிரியான ரசாயனத் தாக்குதல் என்பது முதலில் தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நேரடியாகத் தாக்குதலுக்குள்ளான பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். 

அதன்பிறகு, 2013 ஆகஸ்ட் மாதம், கிளர்ச்சியாளர்கள் நிறைந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். உடனே, சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உத்தரவிட்டது. உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இதற்கு ஒப்புக்கொண்டது சிரியா. 

ஆனாலும், ஆயுதங்களை மட்டும் அழிக்காமல், மறைத்து வைத்தது. ஐ.நா மேற்கொண்ட ஆய்வில், குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. உண்மையில், மிகக் கொடிய ரசாயன ஆயுதங்கள் பட்டியலில் குளோரின் வாயு இடம் பெறாதது சிரியா அரசுக்குச் சாதகமாகிவிட்டது. தற்போது, மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது சிரியா அரசு. சிரியாவின் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து ரசாயன தாக்குதலை சிரியா நடத்தி வருவதால், இதுபற்றி விவாதிக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளன. இன்றைக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு அல்லது நாளை அதிகாலை) இந்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறும். இதிலாவது உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

- பா.பிரவீன் குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close