Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"சோலார் பேனல்களில் இறைவன் இருக்கிறான்" - மொரோக்கோ மக்களின் நம்பிக்கை!

அது நல்ல உயரமான மலை உச்சி தான். ஆனால், " உயரம் ஏற, வெப்பம் இறங்கும்" என்ற அறிவியல் கோட்பாடு ஏனோ அங்கு தோற்றிருந்தது. தெற்கு மொரோக்கோவில் இருக்கும் ஆன்ட்டி-அட்லஸ் மலைத்தொடர்ச்சியில் இருக்கும் தஹலா என்ற சிறு கிராமம். அதிக உயரம், வறண்ட பூமி என இருக்கும் இந்த நிலப்பரப்பில் அர்கன் ( Argan ) எனற ஒரு மரம் செழிப்பாக வளர்கிறது. அதிலிருந்து ஒரு வகையான எண்ணெய்த் தயாரிப்பதை இந்தப்பகுதியின் பூர்வகுடிகளான அமேஸிக்ஸ், முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். 

சோலார் பேனல்களில் இறைத்தன்மை - மொரோக்கோ

இப்படியாக பல சிறப்புகள் இந்தக் கிராமத்திற்கு இருந்தாலும், சரியான வகையிலான மின்சார வசதி இல்லாதது பெரும் பிரச்னையாகத் தொடர்ந்து இருந்து வந்தது. இதைத் தீர்க்க கடந்த வருடம், க்ரீன் பீஸ் என்ற அமைப்பு கிராம மக்களுக்கு சோலார் பேனல்களை வழங்கியது. அந்த சோலார் பேனல்கள், அந்தப் பூர்வகுடி மக்களின் வாழ்வில் பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தந்தது. குறிப்பாக, அவர்களின் இறை நம்பிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் ஆச்சர்யமும் நடந்துள்ளது. 

இறைத்தன்மை - மொரோக்கோ

இந்தக் கிராமத்தின் பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் என்றாலும் கூட, பல குழுக்களாகப் பிரிந்து கடவுளைத் தொழும் முறையில் ஒவ்வொரு குழுவும் மாறுபட்டு இருக்கின்றனர். இங்கு ஒரு குழு சூஃபிசத்தைத் தழுவி இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் இருந்தே இங்கு " அடிகா" என்ற மதராஸா இருந்து வருகிறது. சூஃபிசத்தை போதிக்கும் இந்த மதராஸா, பக்தர்களின் ஆகப்பெரும் லட்சியமாக கடவுளிடம் சரணடைவதை வலியுறுத்துகிறது. 

இந்த மதராஸாவில் இருக்கும், சூஃபிக்கள் அனைவருமே இந்த சோலார் பேனல்களில் கடவுள் தன்மை இருப்பதை, உறுதியாக நம்புகிறார்கள். அடிகா மதராஸாவில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக கவிஞரும், சூஃபிசத்தைத் தழுவியவருமான ரூமி போன்ற சூஃபிக்களின் எழுத்துக்களையே முக்கியப் பாடமாகப் படிக்கிறார்கள். இதன் அடிப்படையில், " சூரியன் அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஓர் ஒளிக் கடவுள் " என்பதை உறுதியாக நம்புகிறார்கள். 

சோலார் பேனல்களில் இறைத்தன்மை - மொரோக்கோ

சூரிய சக்தியை உள்ளிழுத்து, அந்தக் கிராமத்திற்குத் தேவையான மின்சார சக்தியை இந்த சோலார் பேனல்கள் கொடுப்பதால் அடிகா மதராஸாவைச் சேர்ந்தவர்கள், இதைத் தங்கள் கடவுளோடு தொடர்புப்படுத்தி புனிதமாகப் பார்க்கிறார்கள். அதாவது, அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒளிக் கடவுளான சூரியன், தன் சக்தியை, அருளை இந்த சோலார் பேனல்களின் வழி கிராமத்திற்குப் பிரித்து வழங்குகிறார் என்று நம்புகிறார்கள். 

அதற்கேற்றார் போல், தஹலா கிராமத்திற்கு சோலார் பேனல்கள் வந்ததும், அது பலவித முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. சீரான மின்சார வசதி இருப்பதால், தடையில்லாமல் விவசாய வேலைகளை அவர்களால் செய்ய முடிகிறது. மேலும், கிராமத்திற்கான தண்ணீர் விநியோகமும் சிரமமில்லாமல் கிடைத்து  வருகிறது. உலகப் புகழ்பெற்ற அர்கன் எண்ணெயை இவர்கள் சுத்தமாக, எந்தவித ரசாயனக் கலப்புகளும் இல்லாமல், கைகளில் ஆட்டியே தயாரிக்கிறார்கள். இந்தக் கிராமத்திற்கு சென்றடைய கடுமையான பாதைகளைக் கடக்க வேண்டியிருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் மிகக் குறைந்த அளவிலேயே இங்கு வருகைத் தருகின்றனர். இது போன்ற காரணங்களால், அவர்களின் கலாச்சாரமும் , நம்பிக்கைகளும் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளன. தூய்மையான எண்ணெயை உருவாக்கி, மக்களுக்குத் தருகிறோம். நேர்மையாகவும், தூய்மையாகவும் இருப்பதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம் என்று சொல்வதில் அடங்கியிருக்கிறது அந்த மக்களின் கறை படிந்திராத தூய்மை. 

 மொரோக்கோ பழங்குடியினர்

சோலார் பேனலில் படும் ஒளியை உருவகப்படுத்தி இறைத்தன்மையோடு ஒப்பிட்டு அவர்கள் நம்பிக்கைக் கொள்வதை, ஏளனக் கண்ணோடும் பார்க்கலாம், இயற்கையின் வழி நின்றும் பார்க்கலாம். அது பார்க்கும் பார்வையில் இருக்கிறது. 

" சூரியனாக மாறுவதை விடுத்து சிறு கீற்றாக மாற முயலுங்கள்" 

என ரூமி சொன்னதை நோக்கியதாக தங்கள் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டிருக்கிரார்கள் இந்த மக்கள். அதை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போய் புரிந்து கொண்டால், இயற்கையோடு கலப்பதாக அர்த்தப்படலாம். 

- இரா. கலைச் செல்வன்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close