Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`கனவுகளுக்கு அர்த்தம் உண்டு... எதற்கு என்ன பொருள்?’ உளவியல் உணர்த்தும் உண்மைகள்!

இயான் வாலஸ் - கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் சைக்காலஜிஸ்ட்

யாரோ ஒருவரை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்திருப்போம். ஆனால், அவரை அதற்கு முன்னரே பார்த்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். வெகுநாளாக நன்றாகப் பழக்கமானவர்போலவே தோன்றுவார். `இவரை எங்கே பார்த்திருக்கிறோம்’ என்று பல மணி நேரம் யோசித்தாலும் விடை கிடைக்காது. அதேபோல், ஒரு நிகழ்வு நடக்கும்போது, ஏற்கெனவே அது நடந்ததுபோலவும் பார்த்ததுபோலவும் உணர்வோம். அந்த நபர், நிகழ்வு எப்போதாவது நம் கனவில் தோன்றியிருக்கும் என்பதுதான் காரணம். அது நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது, இரண்டாவது முறையாக நடப்பதாகத் தோன்றுகிறது. `கனவுகளுக்குப் பலன் உண்டு; இப்படிக் கண்டால் இது நடக்கும்; அது நடக்கும்’ எனக் கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையா? `உண்மை. நாம் அடிக்கடி காணும் கனவுகள் எல்லாவற்றுக்குமே நிஜ வாழ்க்கையில் அர்த்தம் இருக்கிறது’ என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயான் வாலஸ் (Ian Wallace) என்கிற சைக்காலஜிஸ்ட். கனவுகள் தொடர்பாக சுமார் இரண்டு லட்சம் பேரிடம் ஆராய்ச்சியும் செய்திருக்கிறார். இயான் வாலஸ் சொல்லும் சில கனவுகள்... அதற்கான அர்த்தங்கள் இங்கே... 

* கீழே விழுவதுபோல கனவு கண்டால், நீங்கள் வாழ்க்கையில் யாரோ ஒருவரை அதிகம் எதிர்பார்த்து வாழ்கிறீர்கள்; அவரையே சார்ந்து இருக்கிறீர்கள்; இப்போது அவரிடம் இருந்து உங்கள் நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருள்.

* பயன்படுத்தாத அறை அல்லது இடத்தைக் கண்டால், வாழ்க்கையில் நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். உங்களுக்கான தனிப்பட்ட திறமையை இப்போதுதான் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

* தேர்வுகளில் தோல்வி, மேடைப் பேச்சுகளில் சொதப்புவது மாதிரியான கனவுகள் வந்தால், நாம் ஒரு விஷயத்தில் அதிகமாகக் குழம்பிப் போய் இருக்கிறோம் என்று பொருள். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒருமுறையாவது இதுபோன்ற கனவு நிச்சயம் வந்திருக்கும். ஒரு விஷயத்தை எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக முடிக்க வேண்டும் என்ற பயத்தில் இதுபோன்ற கனவுகள் வருவது இயல்பு.

* பறப்பதுபோல் ஒருவருக்குக் கனவு வந்தால், அவர் வாழ்க்கையில் மிகச் சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்திருக்கலாம், இல்லையென்றால், இனி வரும் காலத்தில் வாழ்க்கைக்குத் தேவையான சுதந்திரமான முடிவை எடுக்கப்போகிறார் என்று பொருள். நீண்ட நாள்களாகக் குழம்பிக்கொண்டிருந்த விஷயத்தில், தெளிவான முடிவை எடுக்கப் போவதற்கான அறிகுறி இந்தக் கனவு. இதன் பிறகு வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்கொள்ளும் எண்ணமும் ஏற்படும்.

கனவுகள்

* பொது இடத்தில் நிர்வாணமாகப் பயணம் செய்வதுபோல் கனவு வந்தால், அதற்குப் பிறகு தூக்கம் வருமா? இப்படிக் கனவு வரக் காரணம், ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை இல்லாததே. `செய்கிற வேலை நல்லபடியாக முடியுமா, முடியாதா?’ என்ற குழப்பத்தில் இப்படிக் கனவுகள் வரும்.

* சிறுநீர் கழிக்கவேண்டிய நிர்ப்பந்தம்; ஆனால், கழிப்பிடம் கிடைக்காமல் அவஸ்தைப்படுவது போல கனவு வந்தால், அவர் தன்னுடைய பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் சங்கடத்தில் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்தச் சரியான சூழல் கிடைக்காதவராக அவர் இருக்கிறார் என்று அர்த்தம்.

* மேலே சொல்லப்பட்டிருக்கும் கனவுகள் எல்லாம் நேர்மறையானவை, ஆனால், பல் விழுவதுபோலக் கனவு வருவது எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துவது போன்றது. இது போன்ற கனவுகள் தன் மீது நம்பிக்கை குறைந்து இருப்பதையும், செய்யும் வேலையில் அதிக கவனம் இல்லாததையும் தெளிவுபடுத்துகின்றன.

* ஒரு விலங்கோ அல்லது ஒரு விஷயமோ அடிக்கடி துரத்துவதுபோல நம்மில் பலர் கனவு கண்டிருப்போம். இதுபோன்ற கனவு வருவது, நாம் நிர்ணயத்து வைத்திருக்கும் இலக்கை நோக்கி நாம் பயணிக்காமல் இருக்கிறோம் என்பதை நம் ஆழ் மனதில் பதிந்து போயிருக்கிறது என்று அர்த்தம். இலக்குகளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதால், அதை யாரோ ஒருவர் நமக்கு நினைவுபடுத்துவதுபோலவே வருகிறது இந்தக் கனவு.

``கனவுகள் வருவது மனித இயல்பு. காணும் ஒவ்வொரு கனவும் வாழ்க்கையில் நாம் செய்யும், செய்யத் தவறும் விஷயங்களை நமக்கு நினைவுப்படுத்துபவை. அதற்காக நாம் பயபடவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எதற்காக இப்படி கனவு வந்தது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்’’ என்கிறார் இயான் வாலஸ்.

கனவுகள் நம் எண்ணங்களைப் பிரதிபலிப்பவை. எனவே, நேர்மறையாகவே சிந்திப்போம்... கனவுகளை அர்த்தம் உள்ளதாகச் செய்வோம்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close