Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”இதானா உங்க டக்கு..!” - அமெரிக்க சர்க்கஸ்களில் வனவிலங்குகளுக்குத் தடை

" ஜம்போ சர்க்கஸ் பார்த்திருக்கியா?... அதான் சூப்பரா இருக்கும். ஜம்போன்னா யானை தெரியமா உனக்கு?. இந்த சர்க்கஸ்ல யானைங்க தான் ரொம்ப ஃபேமஸ். எப்பூடி இருக்கும் தெரியுமா? நான் அன்னிக்கு எங்க மாமாவோட போகும்போது, அந்த யானை அப்படியே என் பக்கத்துல அதோட தும்பிக்கைய போட்டுச்சு நான் பயப்படவே இல்லை..."

" ஜம்போல்லாம் சும்மா... ஜெமினி சர்க்கஸ் தான் செமய்யா இருக்கும். அப்படியே சிங்கம் நெருப்புக்குள்ள குதிச்சு ஓடும் பாரு... "

" ராயல் சர்க்கஸ் பார்த்திருக்கீங்களா? அதுல கரடி தான் ரயில் ஓட்டிட்டு வரும்... அதுல எங்க சித்தப்பாவுக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தாரு. என்னையும் அந்தக் கரடி ஓட்ற ரயில்ல உட்கார வச்சாரு..."

ஜம்போ சர்க்கஸ்

இப்படியாக நாம் ஒவ்வொருத்தருக்குமே சர்க்கஸ் குறித்த நினைவுகள் ஏதோ ஒன்று இருக்கும். காட்டிலிருக்கும் மிருகங்களைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சிகளைக் கொடுத்து, அது பல ஆச்சர்யமூட்டும் சாகசங்களை நிகழ்த்துவது என... ஒவ்வொருவருக்கும் அது ஆச்சர்ய அனுபவம் தான். மனிதர்களுக்கும், மிருகங்களுக்குமான புரிதலை, நெருக்கத்தை, உறவை உணர்த்தும் ஒரு கலையாகத் தான் அது இருந்தது. ஆனால், 2000ங்களின் தொடக்கத்தில் பல விலங்கின ஆர்வலர்கள், விலங்குகள் மீது கொண்ட பற்றின் காரணமாக இதையெல்லாம் கடுமையாக எதிர்த்து, சர்க்கஸ் என்ற கலையை மொத்தமாக துடைத்தெறிந்தார்கள். இந்தியாவில் சர்க்கஸ்களில் விலங்குகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. பல சர்க்கஸ் கம்பெனிகள் இழுத்து மூடப்பட்டன. இன்று ஆப்ரிக்கர்களும், ரஷ்யர்களும் சாகசங்களைச் செய்யும் மிகச் சில சர்க்கஸ் காட்சிகள் நடைபெறுகின்றன. 

அமெரிக்க சர்க்கஸ்களில் வனவிலங்குகளுக்குத் தடை

சரி... இந்த உணர்வுகளை எல்லாம் கொஞ்சம் அடக்கிவிட்டு விஷயத்திற்கு வருவோம். மிருகங்களை வதைப்பது கொடூரம். பிற்போக்குத்தனமான, காட்டுமிராண்டித்தனமான செயல் என்றெல்லாம் சொல்லப்படு தான் இந்தியா போன்ற நாடுகளில் , பீட்டா போன்ற மிருக ஆர்வலர்களால் சர்க்கஸ் தடை செய்யப்பட்டது. ஆனால், பலருக்கும் அதிகம் வெளியே தெரியாத விஷயம், அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை சிங்கம், புலி, கரடி, யானை உட்பட பல வன விலங்குகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் சர்க்கஸ் காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தானிருந்தன. தற்போது, அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சலீஸில் சர்க்கஸில் வன விலங்குகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

லாஸ் ஏஞ்சலீஸ்

லாஸ் ஏஞ்சலீஸின் நகர கவுன்சில் ஒருமனதாக இந்த முடிவை தற்போது எடுத்துள்ளது. சர்க்கஸ் மட்டுமல்லாமல், வேறெந்த பொழுதுபோக்கு அம்சங்களிலும் வன விலங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறது. 2014ல் யானைகளுக்கு அங்குசம் பயன்படுத்துவதைத் தடை செய்தது லாஸேஞ்சலீஸ் நகர கவுன்சில். அதன் தொடர்சியாகத் தான் இந்த தடையையும் அறிவித்துள்ளது. இது இன்னும் முழுமையான நடைமுறைக்கு வரவில்லை என்றாலும் கூட, நகர கவுன்சில் ஒரு மனதாக இதற்கு ஓட்டளித்திருப்பதே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள் மிருக ஆர்வலர்கள். மேலும், லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற பெரிய நகரத்தில் இதை அமல்படுத்திவிட்டால், அதை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் சர்க்கஸில் வனவிலங்குகள் முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். 

நெருப்புத் தாண்டும் புலி

2015ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி 69% அமெரிக்கர்கள், சர்க்கஸ்களில் வனவிலங்குகளைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென்ற கருத்தினைப் பதிவு செய்திருந்தார்கள். பிரபல ஃபோர்பஸ் பத்திரிக்கையில் 2016ம் ஆண்டில் வெளியான கட்டுரையில், கடந்த 20 ஆண்டுகளில் , அமெரிக்காவில் சர்க்கஸ் பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கை 30லிருந்து 50 சதவீதம் குறைந்திருப்பதாக சொல்லியிருந்தது. சர்க்கஸ் வருமனத்திலும் 7% வரை சறுக்கல் இருந்ததாக அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. 
மிருகங்களைக் கொடுமைப்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும், மனிதர்களுக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் பெரிய ஆபத்தான விஷயமாக இருப்பதாக விலங்கின ஆர்வலர்கள் சொல்கிறார்கள். சமயங்களில் சர்க்கஸில் பயன்படுத்தப்படும் புலி, சிங்கங்கள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் நடப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

வளையத்தில் புலிகள்

சரி... சர்க்கஸ்களுக்கு மாற்றாக இன்று எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துவிட்டன. சர்க்கஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை. அதில் பயன்படுத்தப்பட்ட மிருகங்களும் பிழைத்துக் கொள்ளும். சர்க்கஸ்காரர்களும் வேறு ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்வார்கள். எல்லாம் சரி தான்... ஆனால், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பீட்டா போன்ற மிருகப் பாதுகாப்பு இயக்கங்கள், மற்ற பல வளரும் நாடுகளில் தலையிட்டு சர்க்கஸ்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே தடுத்த நிலையில், அமெரிக்காவில் அதை ஏன் இன்னும் முழுமையாகக் கொண்டுவரவில்லை ? என்று பல நாட்டு செய்தித் தளங்களும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்... " தன் முதுகில் இருக்கும் அழுக்கைத் துடைக்கவே....." 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close