Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு சவால்; சீனாவின் பயணிகள் விமானம் பறந்தது!

போயிங், ஏர்பஸ் போன்ற விமான தயாரிப்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக, சீனாவும் பயணிகள் விமானத்தைத் தயாரித்துள்ளது.  முதல் விமானம், ஷாங்காய் நகரில் சுமார் 80 நிமிடங்கள் பறந்தது. 

சீனா தயாரித்த போக்குவரத்து விமானம்

பயணிகள் விமான தயாரிப்பில், உலகிலேயே முன்னணியில் இருப்பவை அமெரிக்காவின் போயிங் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனங்கள்தான். இந்த இரு நிறுவனங்களும் இணைந்து,  ஆண்டுக்கு சுமார் ஆயிரம் விமானங்களை உற்பத்திசெய்கின்றன.  சீனாவும் பயணிகள் விமானத்தைத் தயாரிக்க முயற்சித்துவந்தது. 2008-ம் ஆண்டு இதற்கான திட்டம் தீட்டியது. சீன அரசு நிறுவனமான Commercial Aircraft Corporation of China (COMAC ), 2011-ம் ஆண்டு முதல் விமான தயாரிப்பில் ஈடுபட்டது. அதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளது. 

சீனா தயாரித்த விமானத்தின் பெயர் `சி919'. விமானத்தின் வெளிப்புறத்தில் பச்சை, நீலம் வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. சீன எழுத்துகள் சிவப்பு வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்படாத நிலையில் சி919 விமானத்தை ஐந்து விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் அடங்கிய குழு, ஷாங்காய் விமானநிலையத்திலிருந்து இயக்கியது. விமானத்தில் பறந்த அனைவரும் உயிர் காக்கும் ஆரஞ்சு நிற ஜம்ப்பிங் சூட் அணிந்திருந்தனர். பாரசூட்களும் தயார்நிலையில் இருந்தன. இரட்டை இன்ஜின்கொண்ட இந்த விமானம், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல்  சுமார் 80 நிமிடங்கள் வானில் பறந்தது. மூன்றாயிரம் அடி உயரத்தில் யாங்ட்சூ நதியின் மீது 200 முதல் 300 கி.மீ வேகத்தில் விமானம் இயக்கிப் பரிசோதிக்கப்பட்டது. 

இந்த விமானத்தில் 158 பேர் வரை பயணிக்க முடியும். சீனா உள்நாட்டிலேயே இந்த விமானத்தைத்  தயாரித்திருந்தாலும், ஜெனரல் எலெக்ட்ரிக், பிரான்ஸ் நாட்டின் சஃப்ரான், ஹானிவெல், குட்ரிச் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் தொழில்நுட்பங்கள் வழங்கியுள்ளன. முதல் ஆர்டரை சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்வேஸ் கொடுத்துள்ளது. இதுவரைக்கும் 23 விமான சேவை நிறுவனங்களிலிருந்து 570 ஆர்டர்கள் வந்துள்ளதாக  Commercial Aircraft Corporation of China தெரிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்குள்  இரண்டு டிரில்லியன் மதிப்புள்ள பயணிகள் விமான சந்தையைப் பிடிக்க, சீன அரசு திட்டமிட்டுள்ளது. 

சீனா தயாரித்த விமானந்தாங்கிக் கப்பல்

போக்குவரத்து விமானம் மட்டுமல்ல, விமானம் தாங்கிக் கப்பலையும் உள்நாட்டிலேயே சீனா கட்டியுள்ளது. 2012-ம் ஆண்டு வரை சீன கடற்படையிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லை. உக்ரேன் நாட்டிடமிருந்து ரஷ்யத் தயாரிப்பு விமானம் தாங்கிக் கப்பலைச் சீரமைத்து வாங்கியது. அதன் பெயர் `லிங்ஜோங்'. இதே காலகட்டத்தில்தான் சீன கடற்படைக்காக உள்நாட்டிலேயே விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. தற்போது அந்தக் கப்பலின் தயாரிப்புப் பணியும் நிறைவுபெற்றுள்ளது.

கப்பலின் பெயர்  `001ஏ'. சுமார் 70 ஆயிரம் டன் எடைகொண்டது. 315 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும்கொண்டது. சீன தயாரிப்புப் போர் விமானமான `ஜே- 15' ரக விமானங்கள் இதில் நிறுத்தப்படும். இந்தக் கப்பல்  2020-ம் ஆண்டு சீன கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கட்ட, சீன கடற்படைத் திட்டமிட்டுள்ளது. சீனா தயாரித்துள்ள `001ஏ' விமானம் தாங்கிக் கப்பல், இந்தியாவின் விக்ரமாதித்யாவைவிடப் பெரியது. விக்ரமாதித்யா 44,500 டன் எடையும், 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும்கொண்டது. 

உள்நாட்டிலேயே விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் பணியில், கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுவருகிறது இந்தியா. `விக்ராந்த்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல், 37,500 டன் எடைகொண்டது. 260 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும்கொண்ட விக்ராந்தை, அடுத்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட வேண்டும் என்பது திட்டம். ஆனால், பணிகள் தாமதமாகிவருவதாகச் சொல்லப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close