Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை தாக்குவோம்” ஈரான் எச்சரிக்கை

ஈரான் பாகிஸ்தான் எல்லை

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கை இந்தியாவிடம் மட்டும் அல்ல, அதன் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தீவிரவாதிகளை அழிக்க, சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பலியாகினர். இந்தநிலையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்போம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளித்துவருகிறது. அதேபோல், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவான நடவடிக்கையைப் பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. மலைப்பகுதிகளில் மறைவாக இருக்கும் தலிபான்கள், அவ்வப்போது ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதுல் நடத்துவது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொண்டு பணிக்கு வந்தவர்களைக் கடத்திக் கொலைசெய்வது போன்ற செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். தலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில், ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் மீது, சன்னி இஸ்லாமிய ஆதரவு தீவிரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, ஜெய்ஷ் அல் அடல் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், 10 ஈரான் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து, மிக நீண்ட தூரம் செல்லும் கை ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்லாமாபாத் வந்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைச் சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, எல்லையில் அதிகளவில் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். தீவிரவாத தாக்குதல் நடைபெறாது என்று இஸ்லாமாபாத் உறுதி அளித்தது. 

இந்தநிலையில், திங்கட்கிழமை (மே 8) ஈரான் அரசு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த ஈரான் ராணுவ தளபதி முகமது பக்கேரி, "தொடரும் இந்தத் தாக்குதலை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. பாகிஸ்தான் அதிகாரிகள், அந்தநாட்டு எல்லையில் இருந்து நடக்கும் இதுபோன்ற தீவிரவாதச் செயல்களைத் தடுக்க முன்வர வேண்டும். அங்குள்ள தீவிரவாத முகாம்களை மூட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாவிட்டால்... தீவிரவாதத் தாக்குதல் தொடருமானால்... பாகிஸ்தான் எல்லைக்குள் ஈரான் ராணுவம் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து, அவர்களை மிகவும் பாதுகாப்பாகச் சொர்க்கத்துக்கு அனுப்பிவைக்கும்" என்றார். 

பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவிப்பது இது முதல் முறை அல்ல... இதற்கு முன்பு, 2014ம் ஆண்டு ஜெய்ஷ் அல் அடல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஐந்து ஈரான் பாதுகாப்புப் படையினரை கடத்திச் சென்றனர். அவர்களை மீட்பதற்காக, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்தது. உடனடியாகச் செயல்பாட்டில் இறங்கிய பாகிஸ்தான், "ஈரான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அப்படிச் செயல்பட்டால் அது சர்வதேச விதிகளை மீறியதாகிவிடும். நாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம்" என்றது. சொன்னதுபோலவே, தீவிரவாத இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நான்கு ஈரான் வீரர்களை விடுவித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். ஆனாலும், தீவிரவாத தாக்குதல் தொடர்வது, ஈரான் பாகிஸ்தான் உறவில் விரிசலை விரிவாக்கிக்கொண்டே செல்கிறது.

பாகிஸ்தானின் மூன்று எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மூன்று அண்டை நாடுகளுடனும் பகையுணர்வுடன் இருப்பது பாகிஸ்தானுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close