Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது நிஜ ‘குற்றம் 23’ : ஹாலாந்தில் மாபெரும் செயற்கை கருத்தரிப்பு மோசடி!

கருத்தரிப்பு

செயற்கை கருத்தரிப்பில் எந்த மாதிரியான விபரீதங்கள் ஏற்படுகின்றன? அதில், எவ்வளவு முறைகேடுகள் நடந்து வருகின்றன என்பது குறித்து சமீபத்தில் வெளியான 'குற்றம் 23' திரைப்படம் அழகாக சொல்லியிருக்கும். தன்னை 'ஆண் மகன்' என்று காட்டிக்கொள்வதற்காகவும், 'தன்னால் பல குழந்தைகளுக்கு அப்பாவாக முடியும்' என நிரூபிக்கவும் ஒருவர் எடுக்கும் விபரீத முயற்சிதான் படத்தின் கரு. இந்தப் படத்தின் கதையைப் போலவே ஒரு டாக்டர் செயற்கை கருத்தரிப்பில் முறைகேடுகளை செய்துவந்துள்ளார் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தின் இறுதியில், அனைத்து சஸ்பென்ஸ்களுக்கும் எப்படி விடைகிடைக்குமோ... அதுபோலவே அந்த டாக்டரின் கடைசி காலத்தில்தான் அவர் செய்துவந்த முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஹாலந்தைச் சேர்ந்த ஜான் கார்பாத் என்ற டாக்டர் தன்னுடைய விந்தணுவைப் பயன்படுத்தி 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளை உருவாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது குழந்தைப் பேறு வேண்டி செயற்கை முறையில், கருத்தரித்துக் கொள்வதற்காக பல பெண்கள் டாக்டரின் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 'செயற்கை கருத்தரிப்பு துறையின் முன்னோடியாக தான் விளங்க வேண்டும்' என்று நினைத்திருக்கிறார் டாக்டர் ஜான் கார்பாத். எனவே, செயற்கை கருத்தரிப்பு வேண்டி வரும் பல பெண்களிடம் அரசு விதிகளை மீறி தன்னுடைய விந்தணுவைப் பயன்படுத்தி பல குழந்தைகளை பிறக்க வைத்துள்ளார். இந்நிலையில், செயற்கைக் கருத்தரிப்பில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட தம்பதியர்கள் சிலருக்கு டாக்டரின் நடவடிக்கைகள் குறித்து திடீர் சந்தேகம் எழவே, உண்மை நிலையைக் கண்டறிவதற்காக அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதில், டாக்டர் பொய்யான தகவல்களைக் கூறியதாகவும், பகுப்பாய்வு மற்றும் கொடையாளிகளின் விவரங்களைப் போலியாக உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதுமட்டுமல்லாமல், 'செயற்கைக் கருத்தரிப்பில், ஒரு கொடையாளரிடமிருந்து 6 குழந்தைகளுக்கான விந்தணுவை மட்டுமே எடுக்க முடியும்' என்று அந்த நாடு அறிவித்திருந்தது. ஆனால், ஜான் கார்பாத் இதனைக் கருத்தில் கொள்ளாமல், பல குழந்தைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது. இதனால், கடந்த 2009-ம் ஆண்டிலேயே இவரின் மருத்துவமனை ஆராய்ச்சிக்கூடம் மூடப்பட்டது. 

இந்த டாக்டரின் மூலம் செயற்கைக் கருத்தரிப்பில் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தம்பதிகளின் குழந்தைகளின் கண்களின் வண்ணம், உருவ அமைப்புகள் போன்றவை ஒரே அமைப்பில் இருந்திருக்கின்றன. மேலும், பல குழந்தைகள் டாக்டரின் உடலமைப்பில் இருந்திருக்கின்றனர். இதனால் 20-க்கும் மேற்பட்ட தம்பதியர் தங்களின் வழக்கறிஞர்கள் மூலம் டாக்டர் மீது வழக்கு தொடுத்து விசாரித்து வருகின்றனர். டாக்டரின் டி.என்.ஏ-வை தங்களது குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி அந்தத் தம்பதியர்கள் கூறிவருகின்றனர். இதுபோல 60 குழந்தைகள் டாக்டரின் விந்தணுவின் மூலம் பிறந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'டி.என்.ஏ ஆராய்ச்சி செய்வதற்கான காரணத்தை, டாக்டரால் பிறக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குழந்தைகளே வந்து கேட்கும்வரை அதற்கான விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது' என்று கூறியிருக்கிறது.மேலும், 'ஒருவேளை மருத்துவரின் டி.என்.ஏ-வுடன், குழந்தைகளின் டி.என்.ஏ ஒருமித்துப்போனால், 1980-களில் பிறந்த இந்தக் குழந்தைகள் அந்த மருத்துவர் மீது வழக்கு தொடர முடியும்' என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ''60 குழந்தைகளை முறைகேடான முறையில் செயற்கைக் கருத்தரிப்பு செய்து டாக்டர் பிறக்க வைத்துள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஒருவேளை ஆதாரம் இருந்தால், வழக்கை நடத்துங்கள்'' என்று டாக்டர் தரப்பு வழக்கறிஞர் சொல்லிவருகிறார். ஒருவேளை அந்த டாக்டர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் உண்மையாகவே இருந்தாலும், அதற்கு நீதிமன்றம் தண்டனையே தந்தாலும், அந்த டாக்டரால் இந்தத் தண்டனையை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. காரணம் கடந்த ஏப்ரல் மாதம் 89-வது வயதில், உடல்நலக்குறைவால் அந்த டாக்டர் இறந்துவிட்டார். 

உலகெங்கிலும் செயற்கைக் கருத்தரிப்பு முறையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகம் பணம் சம்பாதிக்கிற தொழிலில், செயற்கைக் கருத்தரிப்பு தொழிலும் மிக முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close