Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஃபெட்னா 2017’ - அமெரிக்கத் தமிழர் திருவிழாவில் உலகத் தமிழர்கள் பங்கேற்பு! #FeTNA2017

ஃபெட்னா

ஃபெட்னா ' என்கிற வட அமெரிக்க தமிழ்ச் சங்கமும் - மினசோட்டா நகர தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30-ம் ஆண்டு பேரவைத் தமிழ் விழா, இம்மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களும் ஆளுமைகளும் பங்கேற்க உள்ளனர்.

வட அமெரிக்காவில் ஆங்காங்கே இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் ஒன்றியமாக, கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. ஆண்டுதோறும் அதன் ஆண்டு விழாவை, வட அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு நகரில் அமெரிக்கத் தமிழர் திருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். அதன்படி 2017-ம் ஆண்டுக்கான விழாவை, எதிர்வரும் ஜூலை முதல் நாள் தொடங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கும் மினியாபோலிசு செயின்ட்பால் இரட்டை நகர் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச் சங்கமும், தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து நடத்துகின்றன.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒவ்வோர் ஆண்டுவிழாவும் தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூகத்துக்குப் பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபு. இந்த ஆண்டுக்கான விழாவானது, நாடகக் கலையின் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகளின் 150-வது பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல், ‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபைக் மீட்டெடுப்போம்!’ என்ற முகப்பு மொழிக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மிசிசிப்பி, மின்னசோட்டா ஆற்றங்கரைகளையொட்டிய பகுதியில் அழகுற அமைந்திருக்கும் அற்புத அரங்கம்தான் `மினியாபொலிசு மாநாட்டு அரங்கம்'. இதில்தான் அமெரிக்கத் தமிழர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜூன் 30-ம் நாள், ‘விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியாக விருந்தினர்களுக்கான வரவேற்பும், தொடர்ந்து இளையோர் தமிழிசை நிகழ்ச்சியும் இரவு விருந்தும் இடம்பெறும்.

திருவிழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக, கயானா பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, கார்த்திகேய சிவசேனாபதி, எழுத்தாளர் சுகுமாரன், தமிழ்ப் பண்ணிசை ஆய்வாளர் கோ.ப.நல்லசிவம், திரைப்படக் கலைஞர் ரோகிணி, கவிஞர் சுகிர்தராணி, வெ.பொன்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, அமெரிக்க காங்கிரஸ் மேன் இராஜா கிருஷ்ணமூர்த்தி, நடிப்புக் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரெமையா, இயக்குநர் ஆர்.பார்த்திபன், இயக்குநர், நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த், இயக்குநர், நடிகர் கிட்டி, `சாதனைத் தமிழன்' மாரியப்பன் தங்கவேலு, படைப்பாக்கப் பேராசிரியர் முனைவர் சுவர்ணவேல் ஈசுவரன், நிகழ்த்துகலை பேராசிரியர், இயக்குநர் முனைவர் ஆர்.இராஜு, பேலியோ நியாண்டர் செல்வன், மூச்சுப்பயிற்சி டாக்டர் சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியன், நிகழ்த்துகலைச் சிற்பி முனவைர் சமணராஜா, கிராமங்களின் கலையதிர்வு நாயகன் கலா.பினுகுமார், ஆராய்ச்சியாளர், நடிப்புக் கலைஞர் முனைவர் எஸ்.சந்தோஷ், நாகஸ்வரக் கலைஞர் யுவத்திரு கலாபாரதி இராமச்சந்திரன் வெங்கடசாமி, நிமிர்வு நிறுவனர், பறையிசைக் கலைஞர் சக்தி, `வாத்தியகலாமணி' தவில் கலைஞர் சிலம்பரசன் கஜேந்திரன், இசை ஆய்வாளர் பி.முருகவேல், அமெரிக்கக் குடிவரவுச் சட்ட ஆலோசகர் கவிதா இராமசாமி, சித்தமருத்துவர் டாக்டர் அருள் அமுதன், செம்மொழித் தமிழறிஞர் முனைவர் மு. இளங்கோவன், பாடகர் ஸ்ரதா கணேஷ், மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பங்களிக்க உள்ளனர்.

ஜூலை முதல் தேதியன்று மாநாட்டு அரங்கில் காலை 9 மணிக்கு, தமிழ் மரபிசையான தவில்-நாகஸ்வரத்துடன் திருக்குறள் மறையோதல், தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், குத்துவிளக்கு ஏற்றல் ஆகியவற்றோடு முதல் நாள் நிகழ்ச்சிகள் முறையாகத் தொடங்கும். பிறகு, பேரவைத் தலைவர், மின்னசோட்டா தமிழ்ச் சங்கத் தலைவர், விழா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வரவேற்றுப் பேசுவர்.

முதல் நாளின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கவிஞர் சுகிர்தராணி அவர்களின் நெறியாள்கையில் `தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ!’ எனும் தலைப்பில் கவியரங்கம், மாணவர்கள் பங்கேற்கும் தமிழ்த்தேனீ, குறள்தேனீ போட்டிகள், சிகாகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் `சாரங்கதாரன்' நாடகம், தமிழ் முனைவோர் மாநாடு, ஆண்டுவிழா மலர் வெளியீடு, இயக்குநர் மிஷ்கின் கலந்துரையாடல், வந்திருப்போரின் மக்களின் மனத்தைக் கொள்ளையடிக்கக்கூடிய வகையில் பண்ணிசைப் பாடகர் ஜெய்மூர்த்தி வழங்கும் மரபுக்கலை மக்களிசை நிகழ்ச்சி, தமிழ்ச் சங்கள் வழங்கும் தமிழ்மரபுக் கலை நிகழ்ச்சிகள், சமூக ஆர்வலர் கார்த்திகேய சேனாபதி சிறப்புரை முதலியவற்றோடு, தமிழ் அறிஞர் நா.வானமாமலை அவர்கள் தொகுத்தளித்த `மருதநாயகம்’ மாபெரும் மரபுநாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறும்.

மரபுக் கலைகளில் முக்கியமானவையாகக் கருதும் தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப்பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன்-குறத்தி, கைச்சிலம்பம், சக்கையாட்டம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன் போன்றவற்றைச் சார்ந்தவையாக, விழாவில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெறும்.

ஃபெட்னா 2017-ன், இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், ஜூலை இரண்டாம் தேதி காலை 9 மணிக்கு, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ் மரபிசையான தவில் நாகஸ்வரம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும். தொடர்ந்து தமிழ்ச் சங்கங்களின் தமிழ் மரபு சார்ந்த நாடக நாட்டியம், கலைநிகழ்ச்சிகளோடு, இயக்குநர், இலக்கியவாதி, களப்பணியாளர் எனப் பன்முகத்தன்மையோடு விளங்கும் `பாகுபலி' புகழ் நடிப்புக் கலைஞர் ரோகிணி அவர்களின் தலைமையில் கருத்துக்களம் நிகழ்ச்சி, இலக்கிய விநாடி வினா, குறும்படப்போட்டி, பண்ணிசை ஆய்வாளர் நல்லசிவம் நிகழ்ச்சி, தமிழர் நிலம்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் சிறப்புரை, ஒலிம்பிக் விருதாளர் மாரியப்பன் தங்கவேலு சிறப்புரை, எழுத்தாளர் சுகுமாரன் சிந்தனையுரை, சமூக சேவகர் வெ.பொன்ராஜ் சிறப்புரை முதலியவற்றோடு `நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ், சூப்பர் சிங்கர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி முதலானாரோடு அக்னி குழுவினர் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறும்.

முதன்மைப் பேரரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, இதர அரங்குகளில் இணையமர்வு நிகழ்ச்சிகளாக, இயக்குநர் மிஷ்கின், பேரா. சுவர்ணவேலுடன் திரைப்படம், குறும்படம் குறித்தான பயிற்சிப் பட்டறை, தமிழ்த் தொழில்முனைவோர் கருத்தரங்கம், மருத்துவத் தொடர்கல்விக் கருத்தரங்கம், திருமண ஒருங்கிணைப்பு, தமிழ்க்கல்வி ஒருங்கிணைப்பு, பேலியோ உணவுப்பழக்கக் கருத்தரங்கம், திருமூலரின் பிராணாயாமம் குறித்தான கருத்தரங்கமும் பயிற்சிப் பட்டறையும், ஆயுர்வேத சித்த மருத்துவக் கருத்தரங்கம், நல்லசிவம் வழங்கும் பண்ணிசைப் பயிற்சிப் பட்டறை, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றுகூடல், வலைஞர் கூட்டம், குடியேற்றச்சட்ட மாற்றங்கள் குறித்தான விழிப்புஉணர்வுக் கருத்தரங்கம், விருந்தினர்களான தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு, சமூக சேவகர் பொன்ராஜ், சமூக ஆர்வலர் கார்த்திகேயசேனாபதி ஆகியோருடன் கலந்துரையாடல், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது பெறும் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் முதலியவற்றோடு, அழைக்கப்பட்டிருக்கும் விருந்தினர்களின் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

வாய்மொழி இலக்கியம், நாட்டுப்புற வழக்குகள், மரபுகள் குறித்தான விரித்துரை, சிலம்பம், பறையிசை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டுநிகழ்ச்சி போன்றவையும் இடம்பெறும். திருவிழாவில், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகளும், தெரிவுசெய்யப்பட்ட ஆன்றோருக்கு வழங்கப்படும்.

ஜூலை மூன்றாம் நாள், திரைப்பட ஆளுமையும் இலக்கிய ஆளுமையுமான ரோகிணி, எழுத்தாளர் சுகுமாரன், வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, கவிஞர் சுகிர்தராணி, கலையாளுநர் மிஷ்கின் முதலானோர் கலந்துகொள்ளும் இலக்கியக் கூட்டம் நடைபெறும்.

அமெரிக்கத் தமிழ் விழா குறித்த கூடுதல் தகவல்களை, பேரவையின் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் .

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close