Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரலாறு காணாத வெள்ளம்.... உயிர்ப்போராட்டத்தில் மக்கள்... தவிக்கும் சீனா!

சீன வெள்ளம்

சீனாவில் ஏற்பட்ட வரலாறுகாணாத பெருமழை வெள்ளத்தினால் இதுவரை பல மாகாணங்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர் என்று சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

சீனாவில் கடந்த ஜூன் மாத இறுதிவாரத்தில் பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால், பல்வேறு முக்கிய நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக செஜியாங், ஹுபேய், குவாங்டாங், அன்ஹுயி, சிச்சுவான், ஜியாங்சி, ஹுனான், சோங்கிங், சகிசோ, யுனான் உள்ளிட்ட மாகாணங்கள் முற்றிலுமாக வெள்ளக்காடாக மாறின. வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டநிலையில், மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. சீன வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாதவகையில் தற்போது இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1931-ஆம் ஆண்டு ஏற்பட்ட மஞ்சள் ஆற்று வெள்ளத்துக்குப் பின்னர், இந்த அளவுக்கு மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீன வெள்ளம்

குறிப்பாக, கிசியாங்ஜியாங் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. அந்தக்கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 27 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பலத்தசேதம் அடைந்துள்ளன. வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. 

சீன வெள்ளம்

சில அணைகளின் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹுனான் மாகாணத்தில் மட்டும் மக்களை மீட்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் சுமார் 3000-க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சீனாவின் பெரும்பாலான மாகாணங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. 

வெள்ளம் காரணமாக, சுமார் 2,500 கோடி யுவான் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 56 பேர் உயிரிழந்திருப்பதுடன், பலர் மாயமாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. வெள்ளநீர் முற்றிலுமாக வடிந்த பின்னரே, உயிரிழந்தோர் எண்ணிக்கை சரியாகத் தெரியவரும் என சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, முதல்கட்டமாக சுமார் 1,800 கோடி யுவானை அரசு ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து வெள்ளநிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close