Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீன அரசு இராணுவ வீரர்களைக் குறைக்கும் பின்னணி இதுதான்!

சீன ராணுவம்

'போர் வேண்டாம்' என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால், போர்க்குணமும், போர் ஆயுதங்களும் எந்தநேரமும் நம்மிடம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். நாம் என்னதான் அஹிம்சையை போதித்தாலும், நம்மை எதிரி நாடுகள் போருக்கு அழைக்கும்போது, நாம் எதிர்த்துப் போர் புரிவது மட்டும்தான் சிறந்தவழி. வரலாற்றில், போரின்போது பல யுக்திகளைப் பயன்படுத்தினர். அதில் முக்கியமானது படைவீரர்களின் எண்ணிக்கையை குறைத்து, தொழில்நுட்ப ஆயுதங்களை அதிகமாக பயன்படுத்துவதாகும். இந்த நடைமுறை வந்தபிறகு படைவீரர்களை நம்புவதைவிடவும் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பரீதியிலான ஆயுதங்களையே அனைவரும் அதிகம் நம்பத்தொடங்கினர். இதுவரை, உலகில் நடந்த பல போர்களை உற்றுக் கவனித்தால் ஆயுதங்களே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானித்திருப்பதை அறியமுடியும். 

தொழில்நுட்பங்கள் அதிகளவில் போர் செய்யப் பயன்படுத்தப்பட்டபோது, 'படைவீரர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல' என்ற கருத்தை அனைவரும் ஏற்கத்தொடங்கினர். பல லட்சம் வீரர்களையும், ஆயிரமாயிரம் குதிரைப்படை மற்றும் யானைப் படையினரையும் வைத்திருந்த இப்ராஹிம் லோடி, வெறும் 8,000-க்கும் குறைவான வீரர்களைக் கொண்ட பாபரால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். காரணம் பாபரிடம் இருந்த பீரங்கிகள். இதுதான் ஆயுதங்களின் பலம் எனலாம். தற்போதும்கூட, உலக அரங்கில் தங்களின் வல்லாதிக்கத்தைப் பறைசாற்ற ஒவ்வொரு நாடும் தங்கள் வசமுள்ள ஆயுதங்களின் உதவியையே பெரிதும் நம்புகின்றன. இதனால், தங்கள் ராணுவத்தில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஆயுத பலத்தை மேம்படுத்தவே ஒவ்வொரு நாடும் விரும்புகின்றன.

பீரங்கிகள் அணிவகுப்பு

இந்நிலையில் உலகிலேயே அதிக ராணுவவீரர்களைக் கொண்ட சீனா, தற்போது வீரர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. சீன ராணுவத்தில் சுமார் 23 லட்சம் ராணுவவீரர்கள் பணியாற்றி வருகின்றனர். சீன ராணுவத்தைப் பொறுத்தவரை தற்போதும் பழைய போர் பயிற்சிமுறையே தீவிரமாக அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது புதிய போர்பயிற்சி முறையைத் தொடங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, சுமார் 13 லட்சம் வீரர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு எஞ்சியுள்ள வீரர்களுக்கு, புதிய போர்முறைகள், நவீன ஆயுதங்கள் ஆகியவற்றை கையாளக்கூடிய வீரர்களாக உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. 13 லட்சம் வீரர்கள் என்பது சாதாரண எண்ணிக்கையல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையே, சீன அரசு குறைக்கத் திட்டமிட்டுள்ள 13 லட்சம்தான். ராணுவத்தில் இந்த ஆட்குறைப்பு பற்றி சீன ராணுவ இணையதளத்தில், "தற்போது சீன ராணுவத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் ராணுவ நடைமுறைகள் யாவும் பழங்கால போர் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், போர்ப் பயிற்சி முறையில், தற்காலத்துக்கு ஏற்ப புதுமையான யுக்திகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ராணுவத்தின் கடற்படை மற்றும் ஏவுகணை படைப்பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்தப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடற்படை

தற்போது சீன ராணுவத்தில் 6,457 பீரங்கிகள், 2,955 போர் விமானங்கள், 714 போர்க்கப்பல்கள் உள்ளன. மேலும், 68 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பலுடன் ராணுவ வலிமையில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வருடந்தோறும் சீன அரசு, ராணுவத்துக்காக 216 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி வருகிறது. இதில் ராணுவ வீரர்களின் பராமாரிப்புச் செலவுக்காக மட்டுமே பெரும்தொகை செலவிடப்படுகிறது. ராணுவத்தில் ஆட்குறைப்பு மூலம் கிடைக்கும் தொகையை ஆயுதங்களுக்காகவும், புதிய போர் பயிற்சி முறைகளுக்காகவும் செலவிடத் தயாராகி வருகிறது சீனா. கடந்த 2015-ம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் மூன்று லட்சம் படை வீரர்கள் குறைக்கப்படுவர் என அறிவித்திருந்தார். தற்போது, உள்நாட்டில் படைவீரர்கள் குறைக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் உள்ள தங்கள் நாட்டு ராணுவத்தளங்களில் ராணுவ வீரர்களை அதிகரிக்கும் பணியையும் செய்யவிருக்கிறது சீன அரசு.

இதேபோல், பல்வேறு நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பணியில் தீவிரமாக உள்ளன. அதற்குக்காரணம், ஒவ்வொரு நாடும் அதிகளவில் நிதி ஒதுக்குவது ராணுவத்துக்குத்தான். அந்தத்தொகையிலும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே அதிகளவில் செலவு ஏற்படுகிறது. அந்தச்செலவை ஆயுதங்கள் தயாரிப்பதற்கும், புதிதாக ஆயுதங்கள் வாங்குவதற்கும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் உபயோகிக்கலாம் என்பது அந்தந்த நாடுகளின் எண்ணம். அதனடிப்படையில்தான் பாதுகாப்புப் படையில் ஆட்குறைப்பு பற்றி பல நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.

ஏவுகணைகள்

தற்போது, சீன அரசு தங்களின் படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, கடற்படை, போர் வியூக ஆதரவு படை, ராக்கெட் படை போன்றவற்றை நவீனப்படுத்தி, முழுமையான ஆயுதப்படையை உருவாக்கினால் ராணுவ வலிமையில் சீனா தற்போதுள்ள நிலைமையை விடவும் இன்னும் அதிகமான வலிமையை பெறும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close