Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊழியர்களைக் கண்காணிக்க உடலில் `மைக்ரோசிப்' செலுத்தும் நிறுவனம்!

பல சலுகைகளை வழங்குவதற்காகவும், ஊழியர்களை ஈர்க்கவும் முதலாளிகள் போட்டியிடுவது இயல்பே. ஆனால், ஊழியர்களைக் கண்காணிப்பதற்காக முதலாளிகள் பயன்படுத்தும் பல வழிகளில் RFID மைக்ரோசிப் தொழில்நுட்பமும் ஒன்றாக இருக்கிறது. 

மைக்ரோசிப்,

அமெரிக்காவைச் சேர்ந்த த்ரீ ஸ்கோயர் மார்க்கெட் (Three Square Market) எனும் டெக் நிறுவனம் 300 டாலர் மதிப்புள்ள `இலவச மைக்ரோசிப்'பை ஊழியர்களின் உடம்பில் உட்பொதிக்க உள்ளது. ஊழியர்களைக் கண்காணிப்பதற்காகவும், அவர்களின் வசதிக்காகவும், அவர்களுடைய உடலில் இந்த மைக்ரோசிப்களை செலுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தன் ஊழியர்களின் உடல்களில் அரிசி அளவிலான RFID (radio-frequency identification) மைக்ரோசிப்களை உடலினுள் செலுத்த திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனம். எனினும் இது ஊழியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் தெரிவித்துள்ளது.

‛ஊழியர்களின் முக்கியத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே, இந்த மைக்ரோசிப்களை ஊழியர்களின் உடலில் உட்பொதிக்கப்படுகிறது’ என,  த்ரீ ஸ்கோயர் நிறுவனம் பதிலளித்துள்ளது. இந்த மைக்ரோசிப் மூலம், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழைய தங்கள் கைகளை ஸ்வைப் செய்தால் போதும். இதுமட்டுமின்றி கம்ப்யூட்டரை லாக் இன் செய்ய, கதவுகளைத் திறக்க, ஆஃபிஸ் கேன்டீனில் பணம் செலுத்த எனப் பலதரப்பட்ட விஷயங்களுக்கு இந்த மைக்ரோசிப்களைப் பயன்படுத்த முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களும் தங்களது உடல்களில் இந்த மைக்ரோசிப்களை உட்பொதிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது. 

இது குறித்து இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி டாட் வெஸ்ட்ஸ்பி கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில் புதுமையான கேட்ஜெட்டுகள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி த்ரீ ஸ்கோயர் மார்க்கெட் நிறுவனம் பிரபலமானது. இப்போது மைக்ரோ சந்தை தொழில்நுட்பத்தில் த்ரீ ஸ்கோயர் மார்க்கெட் நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. பணம் செலுத்தும் முறைகளில் சிப் தொழில்நுட்பத்தை அடுத்த பரிணாமமாகப் பார்க்கிறோம். இனி விற்பனை இயந்திரங்களுக்குப் பதிலாக, மைக்ரோசிப் சந்தை பரவலாக இடம் பெறுவதைக் காணலாம். ஊழியர்களின் உடலில் உட்பொதிக்கப்படும் மைக்ரோசிப் ஒரு ஊசி போல உணர்வினை மட்டுமே வெளிப்படுத்தும். ஊழியர்களைக் கண்காணிப்பதற்காக மைக்ரோசிப் பயன்படுத்தப்படாது" என்றார். 

உலகிலேயே முதன் முறையாக 2017, ஏப்ரல் 3-ம் தேதி ஸ்வீடன் நிறுவனமான எபிசென்டர் (Epicenter) தனது ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப்களை உட்பொதித்தது. தனது ஊழியர்களின் செயல்பாட்டை மாற்றியமைக்கவும், அவர்களுடைய வசதியை மேம்படுத்தவும் இந்த வசதியை மேற்கொண்டதாகவும் அந்த நிறுவனம் பதிலளித்தது. இப்போது இதனையடுத்து த்ரீ ஸ்கோயர் மார்க்கெட் நிறுவனம் தனது ஊழியர்களின் உடலில் இந்த மைக்ரோசிப்களை நிறுவ உள்ளது.

ஆரம்பத்தில், வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஐடி கார்டை அணிந்து ஊழியர்கள் பணிபுரிந்தனர். பின் இந்த நிலை மாறி ஆக்சஸ் கார்டு அல்லது விரல் ரேகையைப் பதித்தால் மட்டுமே ஊழியர்கள் அலுவலகத்துக்குள் செல்லும் ஸ்கேனிங் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போது ஊழியர்களின் உடலில் மைக்ரோசிப்களை நிறுவி இதன் மூலம் ஊழியர்கள் அலுவலகத்துக்கு நுழையும் நிலை வந்துவிட்டது. அடுத்தது என்ன வருமோ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close