கூட்டம்
'இந்த பூமியிலேயே மிகமிக இளிச்சவாயன்... விவசாயிதான்' என்று தீர்மானித்து விட்டார்கள் போல! அதனால்தான், இப்போதெல்லாம், அவனைக் குறிவைத்து குல்லா போடுவதற்காகவே வரிசையாகக் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள் பலரும்... பற்பல ரூபங்களில்! 'ஒப்பந்தப் பண்ணையம்' என்கிற பெயரில்... வகை வகையாகப் புறப்பட்டு வரும் இதுபோன்றவர்களிடம், தாங்கள் பாடுபட்டு சேர்த்த பணத்தை, லட்சங்களில் முதலீடு செய்துகொண்டே இருக்கிறார்கள் விவசாயிகள்.
'இதெல்லாம் எந்த அளவுக்கு சரி... விவசாயிகள் முதலீடு செய்யும் பணத்துக்கு என்ன உத்தரவாதம்?' என்பது போன்ற கேள்விகள் விவசாயிகளிடமிருந்தே நமக்கு வந்து சேர... அவ்வப்போது, இந்த முதலீடுகள் குறித்து சம்பந்தபட்ட நிபுணர்கள் மற்றும் அனுபவ விவசாயிகள் என்று பலரிடமும் விளக்கம் கேட்டு, கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். அடுத்தக் கட்டமாக, 'குபேரனாக்கும் ஈமு கோழி... லட்சாதிபதியாக்கும் நாட்டுக்கோழி... கோடீஸ்வரனாக்கும் அகர் மரம்... ஒப்பந்தப் பண்ணையம் லாபமா... நஷ்டமா...?' என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு கருத்தரங்கை, ஜூலை 28-ம் தேதி அன்று கோபிச்செட்டிபாளையத்தில் பசுமை விகடன் சார்பில் ஏற்பாடு செய்தோம்.
கருத்தரங்கு நடைபெறுவதற்காக சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள முத்து மஹால் திருமண மண்டபத்தை, அதன் உரிமையாளர் பார்வதி வெங்கடேஸ்வரன் இலவசமாக தந்து உதவ, அரக்கன்கோட்டை _ தடப்பள்ளி பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஏற்பாடுகளில் உதவிகள் புரிய... தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த, 750 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க நிகழ்ச்சி, எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது.

200 ரூபாய் கோடி மோசடி !
கூட்டத்தில் பேசிய அரக்கன்கோட்டை| தடப்பள்ளி பாசன விவசாய சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான சுபி.தளபதி, ''கரும்பு ஆலைகளுடன் நாம் ஒப்பந்தம் போட்டுத்தான் கரும்பு பயிரிட்டு வருகிறோம். அரசாங்கம் செயல்படுத்தும் அந்த ஆலைகளிலேயே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கும்போது, தனியார்கள் கொண்டு வரும் ஒப்பந்தங்கள் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை ஏன் யோசிக்கவில்லை.
ஒப்பந்தப் பண்ணையில் ஈமு வளர்ப்பு பற்றி விளம்பரம் வந்தவுடனேயே... இது சாத்தியமா...? என்கிற சந்தேகம் எழுந்தது. உடனே கால்நடைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கேட்டோம். அவர், 'இந்தியாவில் இருந்து ஈமு கறி ஏற்றுமதியாவதில்லை. இதன் தோல், எண்ணெய் மூலமாக சில பொருட்களை தயாரிப்பதாகச் சொல்கிறார்கள்’ என கடிதம் மூலமாக விளக்கம் அளித்தார்.
ஈமு பண்ணையாளர்கள் அமைப்பான தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் நண்பர்களிடம் கேட்டபோது, 'விளம்பரங்களில் சொல்வது சாத்தியமில்லாத ஒன்று. ஒரு ஈமு மூலமாக அதிகபட்சம் 6 ஆயிரம் மட்டுமே வருமானமாகக் கிடைக்கும்' என்றனர். இதை சில பத்திரிகைகளுக்குச் சொன்னோம். பசுமை விகடன் மட்டுமே... அதைப் பற்றி மேலும் பல்வேறு தகவல்களை தமிழக அளவில் திரட்டி, முழுமையான கட்டுரையை வெளியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் ஈமு ஒப்பந்த நிறுவனம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அம்மாநில சட்டசபையில் அறிக்கை தாக்கலாகி இருக்கிறது. இவ்வளவு ஊடக வசதிகள் இருந்தும், இந்தச் செய்தி நமது விவசாயிகளை எட்டவில்லை. இதுதொடர்பாக எச்சரிக்கை அறிக்கையை வெளியிடுமாறு ஈரோடு மாவட்டத்தின் அன்றைய எஸ்.பி.-யிடம் சொன்னோம். அவரோ... 'நாளைக்கும் நான் இதே மாவட்டத்துல இருக்கணும்’ என்று ஒதுங்கிக் கொண்டார். அந்த அளவுக்கு இதிலும் அரசியல் புகுந்து விட்டது. நாங்கள் ஒரு ஈமு நிறுவனத்தைக் கைநீட்டி குற்றம் சாட்டியதுமே... அந்த நிறுவனம் பல ரூபங்களில் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

ஈமுவில் ஆரம்பித்தவர்கள்... நாட்டுக்கோழி, நிலங்களில் முதலீடு என பல வழிகளில் பணத்தைப் பறிக்கத் தொடங்கியுள்ளனர். ஈமுவைக்கூட விடுங்கள்... அது வெளிநாட்டுப் பறவை. இந்த நாட்டுக்கோழிக்கு என்ன வந்தது. அது காலங்காலமாக நம்மிடம் வளரும் பறவைதானே. அதை வளர்த்து விற்பனை செய்தால், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று நமக்குத் தெரியாதா? நாட்டுக்கோழியில இவ்வளவு வருமானம் வரும், அவ்வளவு வரும் என்று அடுத்தவன் சொல்வதைக் கேட்டு, காசை அள்ளிக் கொடுக்கிறோமே... கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?'' என்றார் ஆவேசமாக.
ஒரு ஈமுக்கு 2,750 ரூபாய்தான் லாபம் !
ஈமுவில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்ல வந்த கால்நடைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தேனி உழவர் பயிற்சி மையத்தின் தலைவர் பீர்முகமது, ''ஈமு, பொன் முட்டையிடும் கோழியல்ல. ஒரு ஈமுக் கோழியை 16 மாதம் வளர்த்து விற்பனை செய்தால், 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரைதான் லாபம் கிடைக்கும். 16 மாதம் வளர்ந்த கோழிகள்தான் விற்பனைக்கு ஏற்றவை. அதற்கு மேல் வளர்ந்த கோழிகளின் கறியும், கொழுப்பும் சரிப்படாது.
16 மாதம் வளர்ந்த கோழி, சராசரியாக 40 கிலோ எடை இருக்கும். ஈமு கோழிகளைக் கறிக்காக வெட்டும்போது உயிர் எடையில் பாதி அளவுதான் கறி இருக்கும். ஒரு கிலோ கறி 350 ரூபாய் விலையில் விற்றால்...
20 கிலோவுக்கு 7,000 ரூபாய் கிடைக்கும். அதேபோல 7 கிலோ கொழுப்பு கிடைக்கும். ஒரு கிலோ கொழுப்பு 750 வீதம் 5,250 ரூபாய் கிடைக்கும். தோல் 500 ரூபாய் விலை போகும். ஆகமொத்தம் 16 மாதம் வளர்ந்த ஒரு ஈமு கோழியில் இருந்து 12,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு கோழி தனது உடல் எடையை போல் 5 மடங்கு தீனியை சாப்பிடும். ஒரு கிலோ தீனி 30 ரூபாய் விலையில் 200 கிலோவுக்கு 6 ஆயிரம் செலவாகும். குஞ்சு விலை 3 ஆயிரம் ரூபாய், பராமரிப்புச் செலவுக்கு 1,000 ரூபாய் என செலவுக் கணக்கில் 10 ஆயிரம் போக...
2,750 ரூபாய்தான் வருமானமாகக் கிடைக்கும். ஈமுக் கோழியில் இதை விட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பில்லை.
அடுத்து நாட்டுக்கோழி... ஒப்பந்தப் பண்ணையம் மூலமாக நாட்டுக்கோழி வளர்ப்பதாகச் சொல்பவர்கள் கொடுப்பது, கலப்பினக் கோழிகள். அதை நாட்டுக்கோழி என்று சொல்லக் கூடாது. முறையாக கோழிகளை வளர்க்க நினைப்பவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களை அணுகுங்கள். அனைத்து ஆலோசனைகளும், பயிற்சிகளும் இலவசமாகவே கிடைக்கும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நீங்களே வளர்த்தாதான் அது நாட்டுக்கோழி !
தமிழகத்தில் வணிகரீதியாக பெரிய அளவில் நாட்டுக் கோழிகளை வளர்த்து வரும் எஸ்.ஆர்.எஸ் பண்ணையின் நிர்வாக இயக்குநர் சுரேஷ்குமார், ''நாட்டுக்கோழிகளைப் பொறுத்தவரை நீங்களே வளர்க்கறதுதான் சரி. அதை பக்கத்துல இருக்கற சந்தைகள்ல நீங்களே விற்க முடியும்.

ஒப்பந்த முறையில வளர்க்காதீங்க. ஒப்பந்த முறைங்கற பேர்ல நிறையபேர் கிளம்பி வந்ததால நாட்டுக்கோழி விலை இறங்கியிருக்கு. இதனால எங்களை மாதிரி நேர்மையா தொழில் செய்றவங்களுக்கும் பாதிப்பு ஏற்படுது'' என்று கவலையோடு சொன்னார்.
அநியாய விலைக்கு அகர் செடி வாங்காதீர்கள் !
அகர் மரம் சாகுபடி பற்றி பேசிய கோயம்புத்தூர் மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் தேவராஜன், ''அகர் மரம் வளர்க்க நிழலும், 60% வெப்பமும் தேவைப்படும். நமது பகுதியில் மலை அடிவாரப் பகுதிகளில் தென்னை மரங்களில் ஊடுபயிராக வளர்க்கலாம். களர் மண், உப்புத் தண்ணி இருக்கிற இடங்களில் அது வளராது. கோவை, தேனி மாவட்டங்களில் நன்றாக வளரும். ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஊடுபயிராகச் செய்யலாம். அகர் மரம் வளர்க்க நினைப்பவர்கள், 200, 300 ரூபாய் என்று அதிக விலையில் விற்பனை ஆகும் நாற்றுகளை வாங்கி ஏமாற வேண்டாம். நாற்றின் உண்மையான விலை 65 ரூபாய்தான்'' என்று சொன்னார்.
'கொலை வழக்கு போடணும்'
திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ''கே.ஜி. ஈமு கம்பெனியில இருந்து வந்த கார்த்திக் சங்கர், எங்க ஊர்காரங்கக்கிட்ட 'விவசாயம் பொய்த்துப் போச்சு. பேசாம ஈமுவுல முதலீடு செய்யுங்க, மாசம் 7 ஆயிரம் வருமானம் கிடைக்கும்'னு சொன்னாரு. அதை நம்பி எங்க கிராமத்துல மட்டும் ஒண்ணரை கோடி ரூபாய் முதலீடு செஞ்சாங்க. இப்ப கம்பி நீட்டிட்டு போயிட்டாங்க. கார்த்திக் சங்கரோட மனைவி போலீஸ் கான்ஸ்டபிளா இருக்கறதால அதை வெச்சு மிரட்டுறாங்க.
ஏமாந்தவங்கள்ல ஒருத்தரான வையாபுரி, மாரடைப்புல இறந்துட்டாரு. இவ்வளவு பேர் உழைச்சு சம்பாதிச்ச காசை சுரண்டி உல்லாசமா இருக்கற கார்த்திக் சங்கரை குண்டர் சட்டத்துல போடணும். ஒரு விவசாயி சாவுக்கு காரணமா இருக்கறதால கொலை வழக்கு போடணும்'' என்று ஆவேசப்பட்ட சுப்பிரமணியம்,
''நாங்கதான் ஏமாந்துட்டோம். இனிமே தமிழ்நாட்டுல யாரும் இவனுங்களை நம்பி ஏமாந்துடாதீங்க'' என்றதும் ஒட்டுமொத்த கூட்டமும் கண்கள் கலங்கியது.
நிறைவாக பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ், ''ஒப்பந்த பண்ணையத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டு கோழி வளர்ப்பவர்கள், 'கம்பெனி என்னை ஏமாற்றி விட்டது. எனது முதலீட்டை திரும்ப பெற்றுக் கொடுங்கள்' என நீதிமன்றத்திடம்கூட கேட்க முடியாது.
ஏனென்றால் ஒப்பந்தப் பத்திரத்தில் கம்பெனியும் நீங்களும் இணைந்து கூட்டாக ஒரு வியாபாரத்தில் ஈடுபடுவதாகத்தான் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதில் பங்குதாரராக உள்ள உங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. நஷ்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டியிருக்கும்.
.jpg)
எனவே ஒப்பந்த பத்திரத்தை வைத்துக் கொண்டு சட்டப்படி விவசாயிகளால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று உண்மையை உடைத்தவர்... விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலையும் தந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பலரும், 'சில மாதங்களுக்கு முன்பே இதுபோன்ற விழிப்பு உணர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தால்... முதலீடு செய்யாமல் இருந்திருப்போமே' என ஆதங்கப்பட்டனர்.
'ஒப்பந்தப் பண்ணையத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பாதுகாப்பு உண்டாக்கும் வகையில், ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என்று பெரும்பாலானவர்கள் வேண்டுகோள் வைக்க... அதற்கான முயற்சியை அந்த மேடையிலேயே ஆரம்பித்தார்... வழக்கறிஞர் சுபி. தளபதி!








COMMENT(S): 3
well done Mr.Thalapati keep it up
விவசாய நண்பர்களே, விழிப்புடன் இருங்கள்.
இதே கோபிச்செட்டிபாளையத்தில்தான் பொலவக்காளிபாளையம் ரோட்டில் இரண்டு திருடர்களை அடித்தௌக் கொன்று நடு ரோட்டில் போட்டார்கள்.
அதே கதைதான் கார்த்திக் சங்கரோட மனைவிக்கும் நேரும். கோபி மக்கள் செய்யக்கோடியவர்கள். செய்து காட்டுவார்கள்.