Latest News
Published on :30-11--0001 06:00 AM
'இயற்கை விளைபொருட்களில் கூடுதல் சத்துக்கள் இல்லை'
பீதியைக் கிளப்பும் ஸ்டான்ஃபோர்டு... உண்மையை உடைக்கும் ஆர்வலர்கள்!
சமரன், படம்: ர.அருண் பாண்டியன்

உலகம் முழுக்கவே இயற்கை வழி விவசாயம் மற்றும் அதன் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களை நோக்கி பார்வையைத் திருப்பி வரும் இந்த வேளையில்...

'ரசாயன முறை விவசாயத்தைவிட, இயற்கை முறை விவசாயத்தில் பலன்கள் அதிகமாக இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை' என்று 'குண்டு' போட்டிருக்கிறது அமெரிக்காவின் 'ஸ்டான்ஃபோர்டு’ பல்கலைக்கழகம்.

இந்தப் பல்கலைக்கழகம், இயற்கை விவசாயம் பற்றி ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் முடிவுகளை, 'அன்னல்ஸ் இன்டர்னல் மெடிசின்’ (Annals of Internal Medicine)என்கிற ஆங்கில இதழ் தற்போது பிரசுரித்திருக்கிறது.

'ரசாயன முறை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கும் இடையில் புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்களில் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் பாஸ்பரஸ் சத்து மட்டும்தான் அதிகமாக இருக்கிறது. ஊட்டச்சத்துக்களிலும் வேறுபாடுகள் எதுவுமில்லை. பூச்சிக்கொல்லியின் தாக்கம் 30 சதவிகிதம் மட்டும்தான் குறைவாக இருக்கிறது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கோழிக்கறி மற்றும் பன்றிக்கறிகளில் உயிர்க்கொல்லிகளை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் குறைவாக இருக்கின்றன.

ஆகக்கூடி ரசாயன விவசாய உணவுக்கும், இயற்கை முறை உணவுக்கும் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை. இயற்கை உணவை பிரபலப்படுத்தவும், அதை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கும் மட்டும்தான் இயற்கை விவசாயம் உதவுகிறது’

-என்பதுதான் அக்கட்டுரையின் சாராம்சம்.

உலகம் முழுவதுமுள்ள இயற்கை விவசாய ஆர்வலர்கள் மத்தியில், இந்தக் கட்டுரை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலிருக்கும் இயற்கை ஆர்வர்லர்கள் சிலரிடம் கேட்டபோது...

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார்: ''பொதுவாக உணவு உற்பத்தி என்பது... மண், உழவர், நுகர்வோர் ஆகிய மூன்று விஷயங்களையும் சார்ந்தது. இவை மூன்றும்தான் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், உர நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவை தங்களின் சுயலாபத்துக்காக அரசியல்வாதிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் லஞ்சத்தைக் கொட்டிக் கொடுக்கின்றன. அதனால்தான், கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த நிறுவனங்களின் விருப்பத்துக்கேற்ப முடிவுகளை வெளியிட்டு, விவசாயிகளையும், நுகர்வோரையும் குழப்பி விடும் வேலையைத் தெளிவாக பார்க்கின்றனர்உலகம் முழுவதுமே.

உணவுப் பொருட்களில் புரதம் இருக்கிறதா... கொழுப்பு இருக்கிறதா... என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அவற்றில் என்ன சத்துகள் இருக்கின்றன என்பதை மொத்தமாகத்தான் பார்க்க வேண்டும்.''  

இயற்கை ஆர்வலர் அரச்சலூர் செல்வம்: ''மேற்கத்திய நாடுகளில் பல நிறுவனங்கள், தங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும், இயற்கை விவசாயத்தை ஒழிக்க, பல்வேறு வேலைகளைச் செய்கின்றன. அதனால்தான் பல ஆராய்ச்சி முடிவுகள், இயற்கை விவசாயத்தை ஒழித்துக்கட்டும் விதமாக வெளிவருகின்றன.

இங்கிலாந்தை மையமாகக் கொண்ட, 'சாயில் அசோசியேஷன்’ (soil association)எனும் சங்கம், அமெரிக்கா, இந்தியா என்று பல்வேறு நாடுகளில் 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் பற்றி செய்த ஆய்வு முடிவுகளை 6 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ரசாயன விவசாயத்தைவிட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் 'பைட்டோ ஃபேக்டர்’ அதிகமாக இருப்பதாக அதில் சொல்லி இருக்கின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய 2 ஆயிரம் வகையான வேதியியல் பொருட்கள் இருப்பதாகவும் சொல்லி இருந்தனர். இவற்றைஎல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத உர மற்றும் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், இயற்கை விவசாயத்துக்கு எதிரான இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வைக்கின்றன.

மேலைநாடுகளில் வேண்டுமானால் இயற்கை விளைபொருட்கள் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். ஆனால், நம்நாட்டில் 90% விவசாயிகள் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை வழக்கமான சந்தைகளில்தான் விற்கிறார்கள். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இதுபோன்ற ஆய்வு  முடிவுகள், நுகர்வோரை வேண்டுமானால் குழப்பலாமே ஒழிய... இயற்கை விவசாயிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.''

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சித்த மருத்துவர் கு. சிவராமன்: ''இந்த அறிக்கையில், ரசாயன விவசாயத்தை 'பாரம்பரிய வேளாண்மை' (Conventional Agriculture) என்று ஆங்கில வார்த்தையில் விளித்திருப்பதிலிருந்தே அதன் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

முதன்மைச் சத்துகளான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவற்றின் அளவுகளில் மாற்றம் இல்லை என்கிறது அந்த அறிக்கை. இதுபோன்ற ஆய்வுகளில், முதன்மைச்சத்துகளை மட்டும் பார்க்காமல் நுண் சத்துகள், மண்ணின் அங்ககத்தன்மை போன்றவற்றை தொகுப்பாய்வாகச் செய்து சொல்வது மட்டும்தான் சரியாக இருக்கும். எல்லா தாவரங்களிலும் முதன்மை சத்துகளைவிட, நுண் சத்துகளான அல்கலாய்டுகள், சிறுசத்துகள், தனிமங்கள் போன்றவற்றில்தான் மருத்துவ குணம் அதிகமாக இருக்கும். ரசாயன உரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பெரிதாக இருந்தாலும், அவற்றில் நுண்சத்துகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் அதிக அளவில் நுண்சத்துகள் நிரம்பி இருக்கும்.

10 ஆயிரம் ஆண்டு காலமாக சாப்பிட்டு வந்த அரிசியால் எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் இருந்திருக்கிறது. கடந்த

50 ஆண்டுகளில் அதிக விளைச்சலுக்காக உருவாக்கப்பட்ட ஒட்டுத்தானியங்களை, ரசாயன உரம் போட்டு விளைவித்த குப்பை உணவு வகைகளால்தான்... புற்று நோய், நீரிழிவு நோய், சர்க்கரை வியாதி என்று பல்வேறு வாழ்வியல் வியாதிகளை சந்திக்கிறோம்.''


''இரண்டு ஆண்டுகள் பொறுத்திருங்கள்!''

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முனைவர் கே. ராமசாமியிடம் இதுபற்றி பேசியபோது, ''மண்ணில் இடப்படும் இயற்கை உரச் சத்துகளில் இருந்து 80 சதவிகிதத்தை பயிர்கள் எடுத்துக் கொள்ளும். மீதி, 20 சதவிகிதம் மட்டும்தான் சேதாரமாகும். ரசாயன உரங்களை இடும்போது, 20 சதவிகிதத்தை மட்டும்தான் செடிகள் எடுத்துக்கொள்ளும். 80 சதவிகிதம் வீணாகத்தான் போகும்.

இயற்கை உரங்களான, மண்புழு உரம், குப்பை எரு, ஆலைக் கழிவு உரங்கள், கோழி எரு  போன்றவற்றில் எத்தனை சதவிகிதம் உரச் சத்து உள்ளது? அவற்றின் தரம் மற்றும் மதிப்பு என்ன? என்று தெரியவில்லை. இவற்றுக்கு எந்தவிதமான நிர்ணயமும் இல்லாமல்தான் இருக்கிறது.

இன்றைக்கு மண்புழு உரம் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும்; சர்க்கரை ஆலைக்கழிவு ஒரு டன் கிட்டத்தட்ட 6 ஆயிரமும் ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இவற்றை விவசாயிகள் வாங்கிப் போடும்போது லாபம் கேள்விக்குறியாகி விடும்.

இன்றைக்கு இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கும், ரசாயன விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கும் மேலோட்டமான வித்தியாசங்களை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவற்றை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாததால்தான் இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்புகின்றன.

இயற்கை இடுபொருட்கள் மற்றும் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தும் வேலைகள் நம்முடைய பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதுபற்றிய முடிவுகள் வெளிவரும்'' என்று சொன்னார்!

COMMENT(S): 4

நமது நாட்டில் பல்கலைகலகங்கள் இல்லையா, அறிஞர்கள் இல்லையா, ஆராய்ச்சி கூடம் இல்லையா? நம்மிடம் என்ன இல்லை! எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டு ஆராய்ச்சி முடிவுகளை வைத்து முடிவு செய்யக்கூடாது..!
நம் நாட்டு விஞ்ஞானிகளே விழித்தெழுங்கள்..!!

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு எது வசதியோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு பெரிதுபடுத்தி வெளியிடுவார்கள். பாரம்பரிய விவசாயம் என்பது வெறும் புரதச்சத்து, கொழுப்பு என்று அடங்கி உள்ள சத்துக்களை மட்டும் குறித்து அல்ல. அதையும் தாண்டி மண்வளம், சுற்றுச்சூழல், மருத்துக் கழிவுகளால் ஏற்படும் நீண்டகால் தாக்கம் இவை அனைத்தையும் இணைத்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

இதுவும் மக்களைத் திருப்பும் முயற்சியே!. ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கின்றது. இயற்கைமுறை உணவுகளுக்கு ஆதரவு பெரிகிக் கொண்டிருக்கின்றது. அதைத் தடுப்பதற்கான முயற்சியே இது. உண்மைதான். செடியில் உற்பத்தி முறையில் மாற்றமில்லாமல் இருக்கலாம். வைட்டமின்களும் மற்ற உயிரூட்டிகளும் (என்ஸைம்கள்)எப்படி நமக்குக் கிடைகின்றன என்பது வேறுபடும். ஏன் இரும்பு வேண்டுமென்பதற்காக ஆனியைச் சாப்பிட முடியாதல்லவா. பர்கர் பிட்சா தொடர்கடைகளின் முதலாளிகள் அதைச் சாப்பிட மாட்டர்கள். அவர்கள் இயற்கைமுறையில் விளைந்த உணவுகளை உண்பார்கள்.

ஜீரோ பட்ஜட் இயற்கை விவசாயம் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு

Displaying 1 - 4 of 4
 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

OR
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)
இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
பசுமை விகடன்
< 25 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook
Please wait while we process your request ...

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook