Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி-பதில்!

அஞ்சலக சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர்.

1.என்எஸ்சி (National Savings Certificates) பத்திரம் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

நகல் சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனுடன் ரூ.80 மதிப்புள்ள சிறப்பு முத்திரைத் தாள் ஒட்டிய பாண்டு பத்திரம் கொடுக்க வேண்டும். இந்த பாண்டில் மூன்றாவது நபர் யாரவது ஷுரிட்டி கொடுக்க வேண்டும். ஷுரிட்டி கொடுப்பவரின் 12 மாத  சம்பள தொகையானது, என்எஸ்சி முதிர்வு தொகைக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு என்எஸ்சி சான்றிதழ் பெற ஒரு ரூபாய் என கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதையும், அந்த பாண்டுடன் சேர்த்து அஞ்சலகத்தில் கொடுத்து நகல் என்எஸ்சி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஷூரிட்டி கொடுப்பவர் அரசாங்க பணியில் அல்லது வங்கியில் பணி செய்பவராக இருக்க வேண்டும். ஷூரிட்டி  இல்லையெனில் வேண்டிய பேங்க் கியாரண்டி கொடுக்க வேண்டும்.

2. அஞ்சலகத்தில் என்னென்ன முதலீடுகள் செய்யலாம்?

சேமிப்பு கணக்கு (SB), ரெக்கரிங் டெபாசிட் (RD), மன்த்லி இன்கம் ஸ்கீம் (MIS), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு (SCSS), பிபிஎஃப் (PPF), சுகன்யா சம்ரிதி சேமிப்புக் கணக்கு (SSA), என்எஸ்சி (NSC), கிஸான் விகாஷ் பத்திரம் (KVP), டைம் டெபாசிட் (TD), அஞ்சலக ஆயுள் காப்பீடு (PLI), ஊரக அஞ்சல் காப்பீடு திட்டம் (Rural Postal Life Insurance) ஆகியவை அஞ்சலகத்தில் உள்ள முதலீட்டு திட்டங்கள் ஆகும்.

3.அஞ்சலக திட்டங்களை ஆன்லைனில் முதலீடு செய்ய முடியுமா?

தற்போது ஆன்லைனில் முதலீடு செய்யும் வசதி இல்லை. வருங்காலங்களில் ஆன்லைனில் முதலீடு செய்வதற்க்கான (Core Banking System) திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.



4. தபால் அலுவலக முதலீட்டை மேற்கொள்ள வயது வரம்பு என்ன?

தபால் அலுவலகங்களில் முதலீடு துவங்குவதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர் / காப்பாளர்  மூலம் கணக்கு துவங்கலாம். 10லிருந்து 18 வயதினர் நேரடியாக அல்லது காப்பாளர் மூலமாக கணக்கு துவங்க முடியும். எஸ்.எஸ்.ஏ கணக்கில் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் மட்டுமே  சேர முடியும். (தற்போது 03/12/2003க்கு பின் பிறந்த குழந்தைகள் கூட 01/12/2015 வரை சேரலாம்)

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) கீழ் கணக்கு துவங்க 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை. 55 - 60 வயதுக்கு இருப்பவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்சிஎஸ்எஸ் கணக்கு துவங்கலாம். அதாவது, விரும்ப ஓய்வு பெற்றவர்கள் இந்த வயதில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம்.   ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர்கள் வயது வரம்பு இல்லாமல் சேரலாம். (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு)

5. தபால் அலுவலக ஆர்டி முதலீட்டை மேற்கொள்ள தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ஆர்டி மற்றும் எந்த ஒரு அஞ்சலக சேமிப்பு துவங்குவதற்கும்  அஞ்சலக அலுவலக படிவத்தை பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப் படத்துடன் கூடிய அடையாளச் சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொடுத்து கணக்கு துவங்கலாம். (ரூ. 50,000க்கு மேல் முதலீடு செய்ய பான் அட்டை விவரம் வளங்க வேண்டும்)

6. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இசிஎஸ் வசதி உள்ளதா?

அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு  இசிஎஸ் வசதி தற்போது இல்லை.

7. பிபிஎஃப் திட்டத்தில் என்னுடைய தந்தை முதலீடு செய்திருந்தார். அவர் இரண்டு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. என்னுடைய தந்தையின் பெயர் மற்றும் முகவரி வைத்து சேமிப்பு விவரம் தெரிந்து கொள்ள முடியுமா?

உங்களின் தந்தை எந்த அஞ்சலகத்தில் முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் தெரிந்தால் மட்டுமே முதலீடு பற்றிய விவரங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.


8. அஞ்சலத்தில் என்னென்ன இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. அதிகபட்ச கவரேஜ் தொகை எவ்வளவு?

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 வகையான பாலிசிகள் உள்ளன. முழு ஆயுள் காப்பீடு, மாற்றத்தக்க  முழு ஆயுள் காப்பீடு (Convertible whole life assurance), எண்டோமென்ட் பாலிசி, எதிர்பாராத விதமாக நிகழும் அசம்பாவிதங்களுக்கு எண்டோமென்ட் பாலிசி (Anticipated endowment assurance), கூட்டு  ஆயுள் காப்பீடு (Joint life Endowment assurance), மாற்று திறனாளிகளுக்கான பாலிசி, குழந்தைகளுக்கான பாலிசி. ஒவ்வொரு பாலிசிக்கு வேவ்வெறு வகையான உச்ச வரம்புகள் இருக்கின்றன. இதனுடைய அதிகபட்ச கவரேஜ் ரூ.50 லட்சம்.

இதேபோல ஊரக அஞ்சல் காப்பீடு திட்டத்தின் (RPLI) கீழ் 6 வகையான பாலிசிகள் உள்ளன. முழு ஆயுள் காப்பீடு, மாற்றக்கூடிய முழு ஆயுள் காப்பீடு, எண்டோமென்ட் பாலிசி, எதிர்பாராத விதமாக நிகழும் அசம்பாவிதங்களுக்கு எண்டோமென்ட் பாலிசி, கூட்டு  ஆயுள் காப்பீடு, மாற்று திறனாளிகளுக்கான பாலிசி, குழந்தைகளுக்கான பாலிசி. இதனுடைய அதிகபட்ச கவரேஜ் ரூ.5 லட்சம்.

9. அஞ்சலக் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் என்ன?

சேமிப்பு கணக்குகளுக்கு - 4%,
ஆர்டி கணக்குகளுக்கு - 8.4%,
டைம் டெப்பாசிட்களுக்கு (TD)
1 வருடம் - 8.4%, 2 வருடம் - 8.4%, 3 வருடம் 8.4%, 5 வருடம் 8.5%
மந்த்லி இன்கம் ஸ்கீம் (Monthly income scheme) - 8.4%
பிபிஎஃப் - 8.7%
செல்வமகள் சேமிப்பு கணக்கு - 9.2%
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு  - 9.3%
கிஷான் விகாஸ் பத்திரம் - 8.7%
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
(8ஆவது வெளியீடு, 5 வருடங்கள்) - 8.5%, (9ஆவது வெளியீடு, 10 வருடங்களுக்கு ) - 8.8%

10. பதிவுத் தபாலில் அனுப்பும் முக்கிய ஆவணங்களை சில நேரங்களில் உரிய நபருக்கு கொடுக்காமல், சில சமயங்களில் அருகில் உள்ள வீடுகளில் கொடுத்துவிடுகிறார்கள், இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம்?

கண்டிப்பாக புகார் தெரிவிக்கலாம். எல்லா தபால் அலுவலகங்களிலும் புகார் புத்தகம் இருக்கும். அதில் உங்கள் புகாரை எழுதலாம். இல்லையென்றால் இந்திய அஞ்சலகத்தின் இணையதளம் வழியாக  புகாரை பதிவு செய்யலாம். புகார் பதிவுக்கு http://ccc.cept.gov.in/ComplaintRegistration.aspx என்கிற லிங்கை சொடுக்கவும்.
உங்கள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு கடிதம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.

11. மணி ஆர்டர், மற்றும் பென்ஷன் போன்ற பணம் சம்பந்தப்பட்டவைகளை வழங்கும்போது சில போஸ்ட்மேன்கள் கமிஷன் கேட்கிறார்கள். இதற்கு யாரிடம் சென்று புகார் தெரிவிப்பது?

எல்லா தபால் அலுவலகங்களிலும் புகார் புத்தகம் இருக்கும். அதில் உங்கள் புகாரை எழுதலாம். இல்லையென்றால் இந்திய அஞ்சலகத்தின் இணையதளம் வழியாக  புகாரை பதிவு செய்யலாம். புகார் பதிவுக்கு http://ccc.cept.gov.in/ComplaintRegistration.aspx என்கிற லிங்கை சொடுக்கவும்.
உங்கள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு கடிதம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
இதைத் தவிர http://www.indiapost.gov.in/rtimanual9.aspx இந்த லிங்கில் உங்கள் இடத்திற்கான அதிகாரிகளின் எண்ணிலும் உங்கள் புகாரை தெரிவிக்கலாம். தமிழகத்திற்கு 044 -28592877

12. அஞ்சலகத்தில் என்ன மாதிரியான இணைய சேவைகளை வழங்குகின்றன?

இ-போஸ்ட் என்று ஒரு சேவை இருக்கிறது. இந்த சேவையை அஞ்சல் அலுவலகம் மூலமாகவோ அல்லது உங்கள் சொந்த கணிணி மூலமாகவோ இயக்கலாம். இந்த சேவை கிட்டதட்ட மின்னஞ்சல் அனுப்புவது போலத் தான். http://indiapost.nic.in/இந்த லிங்க் மூலம் அனுப்பலாம். ஒரு A4 பக்க அளவுக்கு நாமே அனுப்பினால் 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாம் அனுப்பிய பதிவு மற்றும் துரிதத் தபால் போன்றவைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.


13. என்னிடம் எந்த விதமான முகவரி சான்றும் இல்லை. இந்த நிலையில் நான் அஞ்சலக ஆர்டி திட்டத்தில் சேர முடியுமா?

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முகவரி சான்று அவசியமானது. எந்த முகவரி சான்றும் இல்லாதவர்கள் அஞ்சலகத்திலேயே  முகவரி அட்டை வாங்கலாம். இந்த அட்டையை பயன்படுத்தி அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கலாம்.


14. கிஸான் விகாஷ் பத்திரத்தை அடமானமாக வைத்து அஞ்சலகத்தில் கடன் பெற முடியுமா?

முடியாது. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிஸான் விகாஷ் பத்திரத்தை அடமானமாக வைத்து  கடன் பெற முடியும். கடன் வழங்கும் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும்.

15. மூத்த குடிமக்களுக்கான டெபாசிட் திட்டத்தில் ரூ. 3 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இந்த முதலீடு ஜாயிண்ட் அக்கவுண்டாக வைத்திருந்தேன். என் மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.  இந்த தகவலை அஞ்சலகத்தில் தெரிவிக்க வேண்டுமா? தெரிவிக்கவில்லையெனில் முதிர்வு தொகை பெறும் போது ஏதாவது பிரச்னை வருமா?


உங்கள் மனைவி இறந்த தகவலை அஞ்சலகத்துக்கு தெரிவிப்பது அவசியம். அதன் பிறகு முதிர்வு தொகை பெறும்போது நீங்கள் கையொப்பமிட்டு  பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

16. அஞ்சல ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்து வந்தேன். இதனுடைய முதிர்வு தொகை காசோலையாக மட்டும்தான் தர முடியும் என்கிறார்கள். என்னிடம் வங்கி கணக்கு இல்லை. ஆர்டி முதிர்வு தொகையை வேறு வகையில் திரும்ப பெற முடியுமா?

தற்போது எனக்கு வயது 65. ஆர்டி முதிர்வு தொகை ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கும்போது முதிர்வு தொகை காசோலையாக மட்டுமே வழங்கப்படும். அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். நீ ங்கள் அந்த அஞ்சலகத்திலேயே சேமிப்பு கணக்கு துவங்கி இந்த தொகையை டிரான்ஸ்பர் செய்து பணமாக பெற்றுக்கொள்ளலாம்.

17. அஞ்சலக முதலீட்டு ஆவணங்கள்  திட்டத்தின் மீது வழங்கப்படும் கடன்களுக்கான  வட்டிவிகிதம் என்ன?

அஞ்சலக முதலீடுகளின் மீது தபால் அலுவலகம் கடன் வழங்குவது இல்லை. அதேநேரத்தில் வங்கிகள் அடமான கடன் வழங்குகிறது. இதற்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும்.

18. நான் வருமான வரிக்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அஞ்சலகத்தில் ஏதாவது திட்டங்கள் உள்ளதா?

வரிச் சேமிப்புக்கு திட்டமிடுபவர்கள் கீழ்க்காணும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
5 வருட டைம் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி, அஞ்சலக, ஆயுள் காப்பீடு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், ஊரக அஞ்சல் காப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.


19. அஞ்சலக அடையாள  அட்டை பெற என்ன நடைமுறை? எவ்வளவு நாட்களில் கிடைக்கும்?

நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அஞ்சலக அலுவலகத்தில் கிடைக்கும் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பத்தை சம்ர்பித்த பின் அஞ்சலக அலுவலகத்திலிருந்து ஒரு அலுவலர் வந்து உங்கள் முகவரியை சரி பார்த்த பின்னரே அடையாள அட்டை வழங்கப்படும். தட்கலில் (Tatkal) விண்ணப்பித்தால் 15 - 30 நாட்களிலும், சாதாரண முறையில் விண்ணப்பித்தால் 30 - 45 நாட்களிலும் வழங்கப்படும்.


20. எந்த மாதிரியான ஆவணங்களை அஞ்சலகம் அடையாளச் சான்றுகளாக ஏற்ற்க் கொள்ளும்?

அரசாங்கம் வழங்கிய எந்த ஒரு அடையாள அட்டையையும், அஞ்சலகம் ஏற்றுக் கொள்ளும்



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ