Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்கா முட்டை கற்றுத்தரும் ஐந்து விஷயங்கள்!

தேசிய விருது பெற்று தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப் படம் ''காக்கா முட்டை''  இந்தப் படம் வசூல் ரீதியாகவும், படமாக்கல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதேசமயம் இந்தப் படம் நமக்கு 5 முக்கியமான விஷயங்களை பொருளாதார ரீதியாக சிந்திக்க வைத்திருக்கிறது. 
 
 
இந்த விஷயங்களை பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடு என பெருமை அடித்து கொள்ளும் நம் நாடு கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
 
1.இந்தியாவில் 1990களிலேயே  உலகமயமாதல் கொள்கைகள் வந்து விட்டன. இதன் நோக்கமே அனைவருக்கும் அனைத்து நாடுகளில் உள்ள பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால் இந்தியாவில் எல்லா தயாரிப்புகளும் எல்லாரையும் சென்றடைவதில்லை என்ற விஷயத்தை காக்கா முட்டை அழகாக விளக்கியுள்ளது. பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏழை சேரி மக்களுக்கும் உண்டு. ஆனால் அது சாத்தியப்படவில்லை என்பதை படம் அழுத்தி கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இன்னும் உலகமயமாதல் அனைவரையும் சென்றடையவில்லை என்பதே இதன் கருத்தாக உள்ளது.
 
 
2. தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவசங்களாக அனைத்து பொருட்களும் கிடைக்கிறது. ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் இருந்தால் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளை அரசு தருகிறது. ஆனால் அரிசி, மண்ணெண்ணய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷனில் ஸ்டாக் இல்லை என்பதை உணர்த்தும் காட்சிகள் பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ள நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. ஏழை மக்களுக்கு தேவைப்படும் விஷயங்களைவிட தேவையற்ற இலவசங்கள் அதிகமாக உள்ளன என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது.
 
3.விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்கள் எந்த அளவுக்கு மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் அழகாக காட்டியுள்ளது. இந்த படத்தில் கடை திறப்பு விழாவுக்கு வரும் சிம்பு பீட்சா சாப்பிடுவதை பார்த்து ஏங்கும் சிறுவர்கள் தானும் சிம்பு தின்ற பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் பல வேலைகளை செய்து பணம் சேர்க்கிரார்கள். இன்று கல்லூரி மற்றும் நூடுல்ஸ் விளம்பரங்களில் வரும் பிரபலங்கள் தாங்கள் பொறுப்பல்ல என கை விரிப்பதை இந்தப் படம் ஆழமாகவே சொல்கிறது.
 
 
4.ஏதாவது ஒரு வேலை செய்தால் அதில் எளிதாக வெற்றி பெறலாம் என்ற கருத்தை ஆணித்தரமாக காக்கா முட்டை கூறியுள்ளது. முதலில் பீட்சாவுக்காக 300 ரூபாய் சேர்க்கும் சிறுவர்கள். பின்னர் அந்த கடைக்குள் செல்ல நல்ல ட்ரெஸ் வேண்டும் என்பதற்காக மேலும் 200 ரூபாய் சேர்க்க மேலும் உழைக்க ஆரம்பிப்பது தொடங்கி கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்து தங்கள் இலக்கை அடைவதன் மூலம் எந்த ஒரு வேலையையும் சரியாக தொடர்ந்து செய்தால் இலக்கை அடையலாம் என்ற தத்துவத்தையும் இந்தப் படம் கூறுகிறது.
 
5.வர்த்தக ரீதியாகவும் இந்த படம் சிறப்பான வசூலை தந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கூறியுள்ள செய்தியில் இந்தப் படம் ஏற்கெனவே விருது, பாராட்டுகள் என எனக்கு அனைத்து விஷயங்களையும் தந்துவிட்டது. விற்பனையிலும் நாங்கள் செலவழித்த பணத்தை பெற்றுவிட்டோம். இனி எங்களுக்கு வரும் பணம் எல்லாம் லாபம் தான் என்று கூறியுள்ளார். இது ஒரு தயாரிப்பு நன்றாக இருந்தால் அந்த பொருளின் விற்பனையை யாராலும் தடுக்க முடியாது.அதனை தான் இந்த காக்கா முட்டையும் கொடுத்துள்ளது.
 
 
 நிறுவனங்களும் கூட இதுபோன்ற சில விஷயங்களை கடைபிடித்தால் அவர்களது சிறந்த தாயரிப்பு லாபத்தை தருவதாக அமையும்.
 
எதார்த்த சினிமா, தேசிய விருது என பாராட்டப்படும் இந்த சினிமா நமக்கு பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை கற்று கொடுக்கும் படமாக உள்ளது. காக்கா முட்டை தமிழ் சினிமாவின் பொன் முட்டை.
 
ச.ஸ்ரீராம்
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ