Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களிடம் லிக்விட் கார்டு இருக்கா?

-சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், (Wisdomwealthplanners.com ) புதுச்சேரி.

கிரெடிட் கார்டு என்கிற சமாச்சாரமெல்லாம் நமது முன்னோர்கள் காலத்தில் கிடையாது. எப்போது தனியார் வங்கிகள் உருவெடுத்தனவோ அப்போதுதான் கிரெடிட் கார்டு மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டன. கிரெடிட் கார்டு  அறிமுகமான நாளில், அது செல்வந்தர்களுக்கும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆம், அப்போது கிரெடிட் கார்டு வைத்திருப்பதை எல்லோரும் கெளரவமாக கருதினார்கள். அன்றைய நிலையில் நம்மை நம்பி கடன் தருகிறார்கள் அதை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து பார்த்து பார்த்து அதை பக்குவமாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நிலை குறைந்தபட்சம் 20,000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கிரெடிட் கார்டு பெற்றுக் கொள்ளும் வசதி. அதை வாங்கி பயன்படுத்துபவர்கள் முறையாக பயன்படுத்தத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் அவலநிலை. தான் பெற்றிருக்கும் கடன் அட்டை மூலம் வாங்கிய கடன் தொகை சிறிதேயாயினும் அதற்கு 36% வட்டி செலுத்தி கடன் தொகையை அடைத்தவர்களும் உண்டு. வாங்கிய கடனை கட்டாமல, மேலும் கடன் பெற முடியாமல் சிக்கித் தவிப்பவர்களும் உண்டு.

இத்தகைய கடன் அட்டையை, தனியார் வங்கிகளே அதிகம் வழங்குகின்றனர். பொதுதுறை நிறுவனங்கள் இதற்காக அதிகம் சிரமம் எடுப்பதில்லை. இத்தகைய கடன் அட்டையை குறிப்பாக அவரவர் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதேனும் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். பல இளைஞர்கள் இதன் மூலம் வழங்கப்படும் கேஸ்பேக் ஆஃபர் என்கிற ஆசை விளம்பரத்தால் கவரப்பட்டு அதில் மாட்டிக் கொள்கின்றனர்.

கிரெடிட் கார்டினால் ஏற்படும் பிரச்சனைகள்:

1. மாத சம்பளத்திற்கு ஏற்றார்போல், குறைந்தது ஐந்து மடங்கு முதல், அவரவர் ஈட்டும் வருமானத்தை பொருத்தும், வங்கியில் பணம் கையிருப்பை பொருத்தும், கிரெடிட் கார்டு  பயன்பாட்டை கொண்டும் வழங்கபடுகின்றது.

2. 0% வட்டி என்று சொல்லி தவணை செலுத்தும் காலத்திற்கு ஏற்ப சேவை கட்டணம் பெறுதல்.

3. நம்பிக்கையின் அடிப்படையில் கொடுப்பதனால், இதற்கு கடன் தொகைக்கு வட்டியாக 36% - 48% வட்டி வாங்கபடுகின்றது.

4. தவணை குறிப்பிட்ட தேதியில் செலுத்தாவிட்டால் காலதாமத கட்டணமும், சேவை கட்டணம் என்று பலவிதமாக வசூலிக்கப்படுகின்றது.

5. தான் வைத்திருந்த கிரெடிட் கார்டு தொகைக்கு உச்சவரம்புக்கு மேல் தவறுதலாக வாங்கப்பட்டால் அதற்கென்று ஒரு தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது.



இதுப்போல கடன் அட்டையினால் ஏற்படும் பிரச்சனைகள் பலவாகும். கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும் அட்டையை பயன்படுத்துபவர்களுக்கு Reward points வழங்கப்படுகின்றது. 45 நாட்களுக்கு வட்டியில் பொருட்கள் வாங்கி பயன் பெறலாம் என்றும் இத்தகைய சலுகைகளை உங்களுக்காக பிரத்யேகமாக தருகின்றோம் என்றும் ஆசை வார்த்தையை கேட்டு கிரெடிட் கார்டை வாங்கிய பிறகு மிகப்பெரிய அபாயகரமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

பொதுவாக ஒருவரது முன்னேற்றத்திற்கு ஆரம்பத்தில் கடன் தேவை தான். அத்தகைய கடன் தொகை இஎம்ஐ -ஆனது தான் வாங்கும் சம்பளத்தில் 35% மட்டுமே கடன் தவணை தொகையாக இருத்தல் வேண்டும். ஆனால் இத்தகைய கடன் அட்டையினால் பெரும்பாலானவர்கள் அளவுக்கு அதிகமாக கடன்களை பெற்று துயரத்திற்கு ஆளாகிறார்கள்.

ஆக இன்று வளர்ந்து வரும் இந்தியாவில் நன்கு வாழ வேண்டிய இளைஞர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து, கிரெடிட் கார்டு கௌரவத்தால், கிரெடிட் கார்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அதனால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இளைஞர்கள் மத்தியில் எதற்கெடுத்தாலும் கடன் பெற்று வாழ்வது என்பது வழக்கமாகி விட்டது. இவர்கள் படிப்படியாக கோடீஸ்வரர்கள் ஆகும் தகுதி இருந்தும் தனக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளை கோடீஸ்வரர்கள் ஆக்குகின்றனர் என்பது ஓர் ரகசிய உண்மையாகும்.

அதனால் எமனாகிய கிரெடிட் கார்டு  தவிர்த்து, அதற்கு பதிலாக லிக்விட் கார்டை பயன்படுத்த தொடங்கினால் உங்கள் வருமானம் விரயமாவது தடுப்பத்தோடு நமது தாய் தந்தையர் வழி வாழ மிகவும் உதவும். எப்படி கடன் அட்டைக்கு கிரெடிட் லிமிட்டை வங்கியில் நிர்ணயிக்கப்படுகின்றதோ, அதுபோல (Liquid Card) அவசர அட்டைக்கும் தங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை நினைத்து அதற்காக தாங்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் சேர்த்து வைக்கலாம்.

உதாரணத்திற்கு ரூ.50,000-க்கு லிக்விட் கார்டு வேண்டுமென்றால் இதற்காக மாதம் 5,000 ரூபாயை பத்து மாதத்தில் சேர்த்து வைத்து அதை லிக்விட் கார்டு போல் பயன்படுத்தலாம். இத்தகைய அவசர அட்டையை வங்கிகளில் சேர்த்து வைக்கலாம். தாங்கள் சேர்த்து வைக்கும் தொகைக்கு தினந்தோறும் வட்டியும் அளிக்கப்படுகிது. வங்கியில் 4%, வழங்கபடுகின்றது.. இதுவே மியூச்சுவல் பண்ட்டில் சேர்க்கும் போது குறைந்தது 6% முதல் 8% வரை வருமான வளர்ச்சி அடைகிறது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், லிக்விட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வபர்களுக்கு ஏடிஎம் கார்ட் வழங்குகிறது. இதில் தேவைக்கு பணம் எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு ஏற்ப யூனிட்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடன் அட்டையில் இருக்கும் வசதி பெறுவதை போல அவசர அட்டையிலும் பெறலாம். இத்தகைய அவசர அட்டையானது தங்கள் விருப்பம் போல சேமித்து வைப்பதனால் அவரவர் தேவைக்கு ஏற்றார் போல் சேமித்து வைக்கலாம். இதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது.

பொதுவாகவே மக்களின் மனம் கடன் என்றாலே முதல் ஆளாக வாங்க துடிப்பதே வருங்கால பிரச்சனைக்கு முதல் காரணம். பொதுவாக அவரவர் வாழ்வின் நிகழ்விற்கு கடன் பெற்றுதான் செயல்படுத்த முடியும் என்பதில்லை பெரும் தொகைக்கு மட்டும் கடன் பெற்று, சிறுதொகையை சேமித்து நிறைவேற்றலாம். ஆக சிறுசிறு தேவைக்கெல்லாம் உங்கள் வருமானத்தை விரயமாக்க வேண்டாம்.

நீங்கள் செல்லும் பாதை முறையாகவும், தெளிவாகவும் இருந்தாலும் அதற்காக சேமித்து பொருள் வாங்கும் திறன் கொண்ட நீங்கள் இத்தகைய கடன் அட்டையால் முதலில் வாங்கி பயன்பெற்று பிறகு அத்தகைய பொருட்களுக்கான கடனை அடைப்பீர்கள். அது வட்டியாக இருந்தாலும், அதற்கான சேவை கட்டணமாக இருந்தாலும், அதற்கான தாமத கட்டணமாகட்டும், எதுவாகட்டும் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதி இழப்பேயாகும். அதனால் திட்டமிட்டு அதற்கு ஏற்றார்போல லிக்விட் கார்டு மூலம் சேர்த்து வைத்து வாங்கினால், நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வட்டியும் கிடைக்கும்.

இங்கே எது சிறந்தது என்பதை உதாரணம் மூலம் காண்போம்.

கடன் அட்டை (பாபு)
இஎம்ஐ சேவை கட்டணம் ரூ.900
ஒரு லட்சம் கடன் தொகை
ஒரு லட்சம்*12% (12 மாதம்) = ரூ.8,885
1,00,000 + 6,618 = 1,06,618

அவசர அட்டை (சாரதி)
ஒரு லட்சம் தேவை - 8032
96,384+3,616

மேற்கண்ட உதாரணத்தில் கடன் அட்டை வைத்துள்ள பாபு முதலில் பொருளை வாங்கி அதற்காக 12% வட்டியில் செலுத்தும் தொகை 1,00,000+900+6620 = 1,07,520

இதுவே சாரதி அவர்கள் உடனே வாங்குவதை தவிர்த்து அவசர அட்டையின் வாயிலாக வாங்க விரும்புகிறார். அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள பொருளுக்கு வெறும் 96,384 சேமித்து வட்டியாக 3,616 கிடைக்கிறது. ஆக உடனே கடன் பெறுவதாலும். ஆசையை நிறைவேற்றுவதாலும் உங்கள் பணம் விரயமாகிறது. இதுவே நீங்கள் யோசித்து, சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் வாங்குவதால் நன்மை அடைகிறதா என்பதை கவனித்து முடிவெடுங்கள்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ