Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேர்லக்: ஷார்ட் டேர்ம் பெய்ன்... லாங் டேர்ம் கெய்ன்..!


‘அட, அடுத்த வாரம் முதல் புதுப்பொலிவுடன் நாணயம் விகடன் வருகிறதா? புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து வாசகர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள்’’ என்று புகழ்ந்தபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவரை உட்காரச் சொல்லிவிட்டு, வழக்கம்போல கேள்விகளை கேட்கத் தொடங்கினோம்.

‘‘நிஃப்டி 8000 புள்ளிகளுக்குக் கீழே போய்விட்டதே! அடுத்து என்னதான் நடக்கும்?’’ என்று கேட்டோம் பதைபதைத்தபடி.

‘‘நிஃப்டி 8000 புள்ளிகளுக்குக் கீழே இறங்கியிருப்பது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகும். நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றுள்ள பங்குகளில் 60 சதவிகித பங்கு களை எஃப்ஐஐக்கள் விற்பதும் சந்தை இறக்கத்துக்கு முக்கியக் காரணமாகும். வியாழக்கிழமை அன்று மட்டும் அவர்களின் நிகரப் பங்கு விற்பனை ரூ.623 கோடியாக இருக்கிறது.

தற்போதைய நிலையில் நிஃப்டிக்கு 7800-ல் நல்ல சப்போர்ட் இருந்தாலும் அதை உடைத்துக்கொண்டு கீழே செல்லும்பட்சத்தில் 7600 வரைகூட போகவும் வாய்ப்பிருக்கிறது.

இதெல்லாம் குறுகிய காலத்துக்கான நிலைமைதான். நீண்ட காலத்தில் சந்தை அபாரமாக உயரும் என்றுதான் சொல்கிறார்கள். நடப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 30333 புள்ளிகளுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என மார்கன் ஸ்டேன்லி கணித்துள்ளது. இது 50% வாய்ப்பு. இதுவே, 40% வாய்ப்பில் 36939-க்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், 10% வாய்ப்பில் சென்செக்ஸ் 26007 புள்ளிகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறது. நிஃப்டி புள்ளிகள் 9000 புள்ளி களுக்குப் போகும். அதற்குமுன் அது 7000 புள்ளிகளுக்கு இறங்கித் தான் ஏறும் என்று சொல்லி இருக்கிறார் மார்கன் ஸ்டேன்லி யின் துணைத் தலைவர் (இண்டியன் ஈக்விட்டி பிசினஸ்) சஞ்சய் ஷா.

ஆனால், முன்னணி பங்கு தரகு நிறுவனமான யூபிஎஸ், 2015ம் ஆண்டு இறுதிக்குள் நிஃப்டி புள்ளிகள் 9200-க்கு அதிகரிக்கும் என முன்னர் கணித்திருந்தது. இப்போது, அதை 8600 ஆகக் குறைத்தி ருக்கிறது. பருவமழை தாமதமாகி இருப்பதால் தொழில் வளர்ச்சி குறையும், கூடவே பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்கிற சூழ்நிலையால் யூபிஎஸ் அதன் இலக்கை குறைத்திருக்கிறது.

பங்குச் சந்தையில் எதிர்காலம் பற்றி இப்படி பல தகவல்கள் வெளியானாலும் சிறு முதலீட்டா ளர்கள் இன்னும் நிறைய நம்பிக்கையோடுதான் இருக்கி றார்கள். சிறு முதலீட்டாளர் கள்தான்  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். நடப்பு நிதியாண் டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல், மே) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் ஃபோலியோ எண்ணிகை 6 லட்சம் அதிகரித்து மொத்தம் 3,22,71,536-ஆக உள்ளது. மே மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் ஃபோலியோ சுமார் 3 லட்சம் அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதத்துடன் முடிந்த ஓராண்டுக் காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு 72% அதிகரித்து ரூ.3.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் சென்செக்ஸ் 15%தான் வளர்ச்சி கண்டுள்ளது. இதை யெல்லாம் பாசிட்டிவ்வான வளர்ச்சியாகவே நாம் பார்க்க வேண்டும்” என நம்பிக்கையோடு பேசிக்கொண்டே வந்தவருக்கு சூடான சுக்குமல்லி காபி தந்தோம்.

‘‘வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா திடீர் இணைப்பு நடவடிக்கை ஏன்?” என்றோம்.

‘‘இதற்கான தேவை என்ன என்பதைச் சின்னப் பிள்ளைகள் கூடக் கண்டுபிடித்துவிடும். வேதாந்தாவுக்கு ரூ.77,752 கோடி கடன் இருக்கிறது. கடனுக்கான வட்டி சுமார் 8 சதவிகிதமாக உள்ளது. அதேநேரத்தில், இந்தக் குழுமத்தின் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் வசம் ரூ.16,867 கோடி ரொக்க கையிருப்பு இருக்கிறது. வேதாந்தாவுடன் கெய்ர்ன் இந்தியாவை இணைக்கும் பட்சத்தில் வேதாந்தாவின் கடன் அளவு குறையும்.

ஆனால், இந்த இணைப்பு எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. கெய்ர்ன் நிறுவனத்தை 2010-ம் ஆண்டில் வேதாந்தா குழுமம் கையகப் படுத்தியலிருந்து அதன் சந்தை மதிப்பு இதுவரைக்கும் சுமார் 50% வீழ்ச்சி கண்டிருக்கிறது.

கெய்ர்ன் இந்தியாவில் எல்ஐசி 9 சதவிகித பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இணைப்பு குறித்து அடுத்த இயக்குநர் குழு கூட்டத்தில் இரு நிறுவனங்களும் விவாதிக்க உள்ளன. அப்போது கெய்ர்ன் நிறுவனத்தின் சிறுபான்மை முதலீட்டாளர்கள், இந்த இணைப்புக்குப் பலமாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அனலிஸ்ட்டுகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் எல்ஐசியின் பங்கும் முக்கியத்துவம் பெறும். எனவே, இந்தச் சமயத்தில் இந்த பங்கில் புதிதாக முதலீடு செய்வது யோசிக்க வேண்டிய விஷயம்” என்றார் தோளை உயர்த்தியபடி.

‘‘உர நிறுவனப் பங்குகள் விலை ஏறி இருக்கின்றனவே?” என்றோம் ஆச்சர்யத்துடன்......


மேலும் தெரிந்து கொள்ள விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ