Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ஸ்டீல் நிறுவனங்கள்:எதிர்காலம் எப்படி இருக்கும்?!

-ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

உலோகம் மற்றும் சுரங்கத்துறை  நிறுவனங்களின்  செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கின்றன. அடிப்படை உலோகங்கள் ( BASE METALS ) பெரும்பாலும் கடந்த ஒரு வருடமாக சரிந்து வருகின்றன. உலோகம் என்று சொன்னாலே, சீனாவின் பொருளாதரம் / அந்த நாடு பயன்படுத்தக்கூடிய அளவு மற்றும் சீனாவின் ஏற்றுமதி / இறக்குமதி புள்ளி விவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன இந்திய பங்குச் சந்தைகளில் உலோகம் சார்ந்த பங்குகளின் விலைகள் 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகி வருகின்றன. 2015 முழுமைக்கும் நிப்டியின் உலோகக் குறியீடு 2224. (CNX METAL Index ) என்ற அளவில் 16%  இறக்கம் கண்டுள்ளது. JSPL, SAIL, TATA STEEL ,  HINDALCO,  TATA SPONGE , NMDC , GMDC , NALCO போன்ற பங்குகள் கடந்த டிசம்பர் 2014 விலையொடு ஒப்பிடுகையில் 25 % முதல் 35 % வரை குறைந்துள்ளது.

மேற்சொன்னவாறான நிலைமைக்கு சர்வதேச அளவில் காணப்படுகின்ற ஒருவிதமான தேக்க நிலை ,அதாவது தேவை குறைவு, உள்நாட்டைப் பொருத்தவரை,  சீனா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து நேரடியாக  ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்களால் போட்டிபோடமுடியாத சூழ்நிலை ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.

இறக்குமதிக்கு இரு காரணங்கள்!
பெரிய அளவிலான இறக்குமதி நடைபெறுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1)நம் நாட்டின் உற்பத்தி விலையைக்காட்டிலும், இறக்குமதி செய்யப்படுகின்ற விலையானது குறைவாக இருப்பது
2) FTA ( FREE TRADE AGREEMENT ) செய்துகொள்ளபட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போது இறக்குமதி தீர்வை கிடையாது
இந்த இரண்டு காரணங்கள்தான் நம் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய சவால்களாக இருக்கின்றன.

ஸ்டீல் இறக்குமதி; சீனாவின் பங்கு அதிகம்!
சீனாவின் உள்நாட்டில் தொழில் உற்பத்தி , மற்றும் கட்டுமானத்துறையில் காணப்படுகின்ற தொய்வு நிலையால், அந்த நாடு இந்தியாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறது.  2014 ஏப்ரல் தொடங்கி இந்த வருடம் ஜனவரி வரை இந்தியாவின் மொத்த ஸ்டீல்  இறக்குமதி 8.38 மில்லியன் டன்களாகும். இதில் சீனாவிலிருந்து மட்டும் 2.9 மில்லியன் டன்களுக்கு நம் நாடு இறக்குமதி செய்துள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், சீனாவின் வெளிநாடுகளுக்கான ஸ்டீல் ஏற்றுமதி மே மாதத்தில் குறைந்திருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால், பல்வேறு நாடுகளின் பொருளாதார தேக்க நிலையின் காரணமாக, தேவை குறைந்ததின் அடிப்படையில் 2.5%-மாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி!
2015 நிதியாண்டில், அதாவது சென்ற வருடத்தை ஒப்பிடும்போது 71% முழுமை அடைந்த ஸ்டீல் (FINISHED STEEL) இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாத ஸ்டீல் இறக்குமதி 20.4% இருந்தது, மே மாதத்தில் 58%ஆக அதிகரித்துள்ளது. இந்த இறக்குமதியானது, நடப்பு நிதியாண்டு முழுவதும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், உலக அளவில் ஸ்டீல் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான  இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணி  வகிக்கும், பிரேசிலின் VALE,  ஆஸ்ட்ரேலியாவின்  RIO TINTO மற்றும்  BHP  நிறுவனங்களின்   தொடர் உற்பத்தி, உலகச் சந்தைகளில் இரும்புத் தாதுவின் விலையை சரிவடையச் செய்துள்ளது.

 


ஆனால், நம் நாட்டில், இரும்புத்தாதுவின் விலை சர்வதேச விலையைவிட அதிகரித்து காணப்படுவது, நம் இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் அமெரிக்க டாலர் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒட்டு மொத்த சந்தைப் பொருட்களின் விலை சரிவிற்கு காரணமாகவும் இருக்கிறது. ஆகையால், நம் உள்நாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளில் உடனடியாக  முன்னேற்றங்களை  எதிர் பார்க்க இயாலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ