Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘குடும்ப அமைப்புதான் நம் பொருளாதாரத்தின் பெரிய பலம்!’’

‘குடும்ப அமைப்புதான் நம் பொருளாதாரத்தின் பெரிய பலம்!’’
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் “உலகப் பொருளாதாரப் பிரச்னைகள் - இந்தியாவில் அதன் தாக்கங்கள்’’ என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசிரியராக இருக்கும் ஆர்.வைத்தியநாதன். வெளிநாடுகளில் முடங்கிக்கிடக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அவர் ஆற்றிய சிறப்புரையிலிருந்து:

 

“முதலில் ஒன்றை நன்றாகத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். உலகின் ஏழை நாடுகள் மற்றும் முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒரு பொருளாதாரப் பிரச்னை வந்தால் அது அந்த நாட்டின் பிரச்னை... இதே ஒரு பெரிய நாடான அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளிலோ பொருளாதாரப் பிரச்னை வந்தால் அது உலகப் பொருளாதாரப் பிரச்னை என்று கூறப்படுகிறது அல்லது வர்ணிக்கப்படுகிறது.


மேற்கூறிய வரிகளுக்குச் சிறந்த உதாரணம், கடந்த 1990-ல் அன்றைய வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஜிடிபி உலக ஜிடிபியில் சுமார் 36%. ஜி-7 நாடுகளின் பங்கு சுமாராக 51 சதவிகிதத்துக்கும் அதிகம். அதே இன்று அதாவது, 2015-ல் இந்தியா சீனா போன்ற வளரும் நாடுகள் உலக ஜிடிபியில் 51 சதவிகிதத்துக்கும் கூடுதலாக பங்களிக்கின்றன. ஆனால், முன்பு உச்சத்திலிருந்த ஜி-7 நாடுகளின் அளவு 36 சதவிகிதத்துக்கு வந்துவிட்டது.


இந்த மாற்றத்துக்குப்பின் ஜி-7 என்று இருந்த உலக முதலாளிகளின் கூட்டமைப்பு மெள்ள மறையத் தொடங்கி ஜி-20 என்று ஒரு புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. இந்த மாற்றம் வேறு ஒரு கருத்தையும் ஆழமாகச் சொல்கிறது. “ஒன்று, நாங்கள் உலகத்தை ஆள்வோம் அல்லது உலகத்தை ஆள்வதில் பங்குபோட்டுக் கொள்வோம்” என்பதே அந்தக் கருத்து.


வளர்ந்த நாடுகளாகக் கூறப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைகள் இந்தியாவுக்கு ஒரு ரூபாய் நன்கொடையாகவோ, மானியமாகவோ கொடுத்தால்கூட 1008 விதிமுறைகளையும், சட்டத்திட்டங்களையும் விதித்துச் செலவு செய்யச் சொல்கிறது. ஆனால், நாம் (இந்தியா) 2010-ல் அமெரிக்காவுக்கு 1 பில்லியன் டாலர் தொகையை எந்தவிதமான கட்டுப்பாடுகளோ, நிபந்தனைகளோ, விதிமுறைகளோ இல்லாமல் மானியமாகக் கொடுத்தோம். இதை என்னவென்று சொல்வது!


இந்தியாவின் மிகப் பெரிய பலமே சேமிப்புதான். ஆனால், முன்னேறிய நாடுகள் தங்கள் மக்களுக்குச் செலவழிக்கக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த அபரிமிதமான செலவழிப்புக்குக் காரணம் ஓர் ஆள் குடும்பம், தனிநபர் குடும்பம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்தியாவின் கலாச்சாரமும் குடும்பமும் இருக்கும் வரை இந்தியாவை எந்த ஒரு சக்தியும் ஒன்றும் செய்ய இயலாது.


நம் கலாச்சாரத்தில் பெண்தான் குடும்பம். பெண்ணைத் தாண்டி இந்தியாவில் ஒன்றுமில்லை. ஒரு வீட்டில் யார் என்ன செய்கிறார்கள், யார் என்ன செய்ய வேண்டும் என்பது வரை அனைத்தும் பெண்தான் முடிவு செய்கிறாள். உதாரணமாக, ஒரு மகனும் அப்பாவும் ஒரு சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். சொந்தக்காரர் பையன் என்ன படிக்கிறான் என்றவுடன் தந்தை ‘சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு’ என்பார். மகன் சிரித்துக் கொண்டே, ‘அப்பா ஐ அம் ஸ்டடியிங் எய்த்’’ என்பார். இதே அம்மாவாக இருந்தால், என் பையன் சயின்ஸ்ல ஸ்ட்ராங், இங்கிலீஸ்ல புலி, மேத்ஸ்ல சென்டம்தான் எப்பவுமே.... என்று அனைத்தும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச் சொல்லிவிடுவாள்.


இந்தியாவின் பொருளாதாரத்தில் சாதி ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பிட்ட சாதி மக்கள் தங்களின் குறிப்பிட்ட தொழில்களில் தன்னிகரற்றவர்களாக, வேறு யாராலும் அவர்களின் தரத்துக்குப் பொருட்களைத் தயாரிக்கவோ அல்லது சேவைகளை வழங்கவோ இயலாத அளவுக்கு முன்னிலையில் இருக்கிறார்கள். இது இந்தியாவின் பெரும் பலம் என்றுகூடச் சொல்லலாம்.
ஒரு பெருவாரியான படிக்காத மக்கள் அரசை எதிர்பார்க்காமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறார்கள். திருப்பூர் ஆடைகள், ஜலந்தர் விளையாட்டுப் பொருட்கள், சூரத் வைரங்கள், ஆக்ரா லெதர்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தியாவின் மொத்த சேமிப்பு சுமாராக 35% இருக்கும். அதில் அரசு சேமிப்பு 2%, தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சேமிப்பு 8%. வீடுகள் சேமிப்பது பாக்கியுள்ள 25%. இப்போது சொல்லுங்கள், இந்தியாவில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இந்தியாவின் சேமிப்பின் முதுகெலும்பு நம் குடும்பங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?


இந்தச் சேமிப்பில் பெரும் பகுதி தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அதற்குச் சரியான காரணங்கள் இருக்கிறது. தங்கத்தைப்போல் வேறு எந்த ஒரு முதலீட்டையும் உடனடியாகப் பணமாக மாற்ற முடியாது என்று நம் இந்திய குடும்பங்கள் நம்புகின்றன. இதற்குச் சமீபத்தில் ஒரு நல்ல உதாரணம் கிடைத்தது. என் வீட்டுக்கு தினமும் பூ விற்க வருவார் ஒரு பெண். ஒருநாள் அவர் பூவை முழம் போடும்போது வழக்கமாக அவர் கையில் இருக்கும் தங்க வளையலைக் காணவில்லை. என்னவாயிற்று என்று விசாரித்தேன். ஒரு சின்னச் செலவு, அதான் அடகு வச்சிருக்கேன் என்றார். நம் இந்திய மக்கள் தங்கத்தை எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பதை இதிலிருந்து உணர முடிகிறது.


இன்று மேற்கத்திய நாடுகளின் முக்கியப் பிரச்னை, மக்கள்தொகை. நம்மைப் போன்ற ஆசிய நாடுகள் அதிக மக்கள்தொகை இருப்பதாகப் புலம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் கடந்த நூறு ஆண்டுகளில் மிகவும் கணிசமான அளவுக்கு மக்கள்தொகை குறைந்திருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசு எக்கச்சக்க சலுகைகளை அறிவிக்கிறது. ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் மக்கள்.


16 - 24 வயதுடையவர்கள் வேலை இல்லாமல் இருப்பது ஸ்பெயினில் 50% நெருங்கிவிட்டது, கிரீஸில் 48%, போர்ச்சுகலில் 30%, இங்கிலாந்தில் 22.3% அமெரிக்காவில் 18% என்று வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. யார் கண்டார் ஒரு காலத்தில் இங்கிலாந்தை இந்தியா காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைகூட உருவாகலாம்!


2012-ம் ஆண்டுக் கணக்குப்படி, பல நாடுகளில், மக்கள் தங்கள் ஜிடிபியில் 90% வரைகூட கடன் வாங்குகிறார்கள். அதாவது, ஹவுஸ்ஹோல்டு டெப்ட் (Household debt) என்று சொல்லப்படும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பிரிட்டன்தான். ஹவுஸ்ஹோல்டு டெப்ட் என்று அழைக்கப்படும் வீட்டு நபர்கள் வாங்கும் கடனில் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் கீழே இருக்கின்றன. முன்னேறிய நாடுகள் என்று பட்டியலிடப்படும் நாடுகள் அனைத்தும் டாப் 5 இடங்களுக்குள் இருக்கின்றன.


அதேபோல், ஒரு நாட்டின் கடன் தன் ஜிடிபியைவிடக் கூடுதலாக இருப்பது இன்று சகஜமாகிவிட்டது. இருப்பினும் 200%, 300% என்று கடன் இருப்பது எல்லாம் மிகவும் ஆபத்தானது என்பது நாம் அறிந்ததே. ஒரேநேரத்தில் சேர்ந்தாற்போல் பெரிய தாக்கங்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் வந்தால், நாடு முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் திவால் ஆகிவிடும். இந்தப் பட்டியலில் இருக்கும் பிரிட்டன் தோராயமாக தன் நாட்டின் ஜிடிபியைவிட 500% கூடுதலாகக் கடன் வாங்கி டாப் மூன்று இடத்தில் இருக்கிறது.


இப்படி பல உலகப் பிரச்னைகள் இருக்கிறபோதிலும் இந்தியா முன்னேற சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
1. மேற்கூறிய பிரச்னைகள் அனைத்தும் ஓர் உலகப் பொருளாதாரப் பிரச்னை இல்லை. இது ஒரு ஆங்கிலோ சாக்ஸன் (Anglo saxon) பிரச்னை.
2. மேற்கத்திய நாடுகளில் நிலவும் பிரச்னைகள் தீர இன்னும் 80 காலாண்டுகள் ஆகும், அதாவது 20 ஆண்டுகள் ஆகும்.
3. நம் உள்நாட்டுத் தேவை அதிகரித்திருக்கிறது. உள்நாட்டில் வீடுகளின் சேமிப்பு அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களால் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
இந்தியாவின் நிதி இந்தியாவுக்குத் திரும்ப வரவேண்டும். இது இந்தியாவின் தொடக்கம்தான். இந்தியாவில் உள்ள எல்லோருமே முன்னேறுவதற்கான வாய்ப்புகள்தான்’’ என்று கூறி முடித்தார் பேராசிரியர் வைத்தியநாதன்.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ