Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸ் வழியில் செல்லும் தமிழகம்!

 

கடன் சுமை பிரச்னையில் தமிழகம் கிரீஸ் வழியில் சென்று கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறார் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை...
 
‘‘ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் அரசு பன்னாட்டு வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் வாங்கிய கடனுக்கான தவணையாக ரூ.10,558 கோடியை (150 கோடி யூரோ) நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கிரீஸ் அரசு செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அத்தவணையை கிரீஸ் அரசால் செலுத்த முடியவில்லை.
 
அடுத்தக் கட்டமாக இம்மாத இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய வங்கிக்கு ரூ.24,636 கோடியை (350 கோடி யூரோ) கடன் தவணையாக செலுத்த வேண்டும். ஆனால், கிரீஸ் நாட்டு அரசு இப்போதுள்ள நிலையில் அதையும் செலுத்த முடியாது. இக்கடன் சுமையிலிருந்து வெளிவருவதற்கு உதவ ஐரோப்பிய நாடுகளோ, பிற உலக நாடுகளோ முன்வரவில்லை. கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள அந்த நாடுகள், அவற்றை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று கூறி விட்டன. அவற்றை ஏற்றால் கடன் தரும் நாடுகளுக்கு கிரீஸ் நாடு அடிமையாக மாறிவிடும்.
கிட்டத்தட்ட இத்தகைய சூழலை நோக்கித்தான் தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் தொகை, பொருளாதாரம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் நிலைமை கிரீஸ் நாட்டை விட மோசமாகத்தான் உள்ளது. கிரீஸ் நாட்டின் பரப்பளவு 1.31 லட்சம் சதுர கி.மீ ஆகும். தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1.30 லட்சம் சதுர கி.மீ. ஆகும். கிரீசின் மக்கள் தொகை 1.08 கோடி மட்டுமே. ஆனால், தமிழகத்தின் மக்கள் தொகை அதைவிட 7 மடங்கு அதிகமாகும். கிரீசின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.13.16 லட்சம் கோடி (207 பில்லியன் டாலர்). தமிழகத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.10.60 லட்சம் கோடி. தனிநபர் வருமானம் கிரீசைவிட தமிழகத்தில் பல மடங்குக் குறைவு. 
 
 
கிரீஸ் நாடு கடன் சுமையில் சிக்கியதற்கு வளர்ச்சி விகிதம் குறைந்தது, நிதிப்பற்றாக்குறை அதிகரித்தது, அரசின் கடன் அதிகரித்தது, நிதிநிலை கணிப்புகள் பொய்த்துப் போனது, புள்ளிவிவர குளறுபடிகள் ஆகிய ஐந்து அம்சங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இந்த காரணங்களால் அந்நாட்டில் கடன் சுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவை அதிகரித்தன. இவற்றின் காரணமாகவே கிரீஸ் இப்படி ஒரு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 
 
இந்த காரணங்கள் அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழக அரசின் நேரடிக் கடன் சுமை ரூ.2,11,483 கோடி, பொதுத்துறை நிறுவனங்களின் உத்தேசக் கடன் ரூ.2,01,000 கோடி என மொத்த கடன் சுமை ரூ.4,07,748 கோடியாக அதிகரித்திருக்கிறது. அரசின் நேரடிக் கடனுக்காக ரூ.17,856 கோடி, பொதுத்துறை நிறுவங்களின் கடனுக்காக சுமார் ரூ.17 ஆயிரம் கோடி என ஆண்டுக்கு ரூ.35,000 கோடியை வட்டியாக மட்டும் தமிழக அரசு செலுத்துகிறது. இது தமிழக அரசின் வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். 
 
இது தவிர, இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ. 49,068 கோடி, ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.51,741 கோடி செலவிடப்படுகிறது. தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயும் இதற்கே செலவாகிவிடுவதால் மற்றத் திட்டங்களைச் செயல்படுத்த கடன் வாங்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் தமிழகம் வாங்கவிருக்கும் கடனின் அளவு ரூ.30,446 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் நாடு கடன் வலையில் சிக்கியதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது அந்நாட்டின் கடன் சுமை 2006-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரையிலான 10 ஆண்டுகளில் 80.2% அதிகரித்து இருப்பதுதான். ஆனால், தமிழக அரசின் நேரடி கடன் சுமை மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 239% அதிகரித்துள்ளது. 2006-ஆம் ஆண்டில் ரூ.62,310 கோடியாக இருந்த அரசின் கடன் சுமை 2015-16-ஆம் ஆண்டில் ரூ.2,11,483 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ரூ.1,10,000 கோடி கடனை தற்போதைய ஜெயலலிதா அரசு வாங்கியிருக்கிறது. இது முந்தைய 60 ஆண்டுகளில் வாங்கப்பட்ட மொத்த கடன் சுமையைவிட அதிகமாகும். தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மீதும் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்த்து மொத்தம் ரூ.56,397 கடனை சுமத்தியுள்ளன. இது சமாளிக்க முடியாதது.
 
வேலைவாய்ப்பை எடுத்துக் கொண்டால், வேலைவாய்ப்பு அலுவலக புள்ளி விவரங்களின்படி மட்டும் தமிழகத்தில் 85 லட்சம் பேர் படித்துவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். படித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், ஒரு  கோடிக்கும் அதிகமானோர் வேலையின்றி வாடுகின்றனர். 
ஊழலைப் பற்றி சொல்லவேத்  தேவையில்லை. எங்கும் ஊழல்... எதிலும் ஊழல் என்பதுதான் தமிழக அரசின் தாரக மந்திரமாக மாறிவிட்டது. மாநிலத்தின் பொருளாதார உற்பத்தி, அரசின் வருவாய், அரசின் செலவு போன்ற விஷயங்களில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் இலக்குகள் எதுவுமே எட்டப்படவில்லை. அரசின் நிதிப்பற்றாக்குறை படிப்படியாக அதிகரித்து நடப்பாண்டில் ரூ.31,829 கோடி என்ற அளவை எட்டியுள்ளது.
 
இதே நிலை தொடர்ந்தால், கிரீஸ் அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஏற்படும் ஆபத்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் ஊழல் இல்லாத, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி வருவாயை பெருக்கும் திறன் கொண்ட, நிர்வாகத் திறமை கொண்ட அரசு அமைக்கப்பட வேண்டும். அப்படிப்பட்டதொரு அரசை அமைத்து தமிழகத்தை மீளாக்கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்க பாட்டாளி மக்கள் கட்சி போராடும்''.

 

(நாணயம் விகடனின் வாக்களிக்கலாம் வாங்கவில் பங்கு கொண்டுவிட்டீர்களா?)
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ