Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகள் மீது பாயும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்!

‘‘தொழிலையே முடக்கப் பாக்குறாங்க!’’ 
வங்கிகள் மீது பாயும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்!
- ச.ஜெ.ரவி
 
ஒரு தொழிலைக் காக்க வங்கிகளின் தேவை மிகவும் அத்தியாவசியம். ஆனால், அந்த வங்கிகளே தொழில் முடக்கத்துக்குக் காரணமானால்? வங்கிகள் மீது அப்படி ஒரு புகார் சொல்லி, மிகப் பெரிய போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள். ‘‘எங்கள் தொழில் வாழ்க்கையையே முடக்கப் பாக்குறாங்க’’ என்று புலம்பித் தவிக்கும் அவர்களிடம், என்ன பிரச்னை என்று கேட்டோம். 
 
‘‘பிரச்னையின் இன்றைய நிலையைப் புரிந்துகொள்ள கடந்த ஐந்து ஆண்டுகளாக வங்கிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையே நடக்கும் சட்டப் போரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றபடி, அந்தப் பின்னணியை விளக்கினார் திருப்பூர் பனியன் தொழிலதிபரும், ‘ஃபாரெக்ஸ் டெரிவேட்டிவ் கன்ஸ்யூமர்ஸ் போரம்’ அமைப்பின் தலைவருமான ராஜா சண்முகம்.
 
வங்கிகள் காட்டிய வழி! 
 
“பொதுவாக, அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில்தான் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். 2007-ம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் டாலரின் மதிப்பு 46 ரூபாயில் இருந்து 39 ரூபாயாகக் குறைந்தது. இதனால் எங்களுக்குக் கடும் நஷ்டம். இதன் காரணமாக திருப்பூரில் ஏற்றுமதித் தொழிலே ஸ்தம்பித்தது.
 
அப்போதுதான் வங்கிகள் இந்த கரன்சி டெரிவேட்டிவ்வை எங்களுக்கு அறிமுகம் செய்தன. 
 
 
 
 
ராஜா சண்முகம்
 
‘டாலர் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டவே இந்த கரன்சி டெரிவேட்டிவ். நல்ல கஸ்டமர்களுக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பைத் தருகிறோம். இதற்கு நீங்கள் எந்த ஆவணங்களையும் தரத் தேவையில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் போதும்’ எனச் சொல்லி, 2007-ம் ஆண்டு இறுதியில் பல நிறுவனங்களுடன் இந்த கான்ட்ராக்ட்டைப் போட்டன வங்கிகள்.

இறங்கி, ஏறிய டாலர் மதிப்பு! 
 
அப்போது 40 ரூபாயில் இருந்த ரூபாய் மதிப்பு 35 ரூபாய்க்கு வரும் என்றார் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம். ரிசர்வ் வங்கி, 36 ரூபாய்க்கு வரலாம் என்றது. இவையெல்லாம் எங்களைக் கவலையில் ஆழ்த்தியது. இந்தச் சமயத்தில் வங்கியாளர்கள் சொன்னதை யதார்த்தமாக ஏற்றுக்கொண்டோம்.
 
ஆனால், 2007 இறுதியில் 39 ரூபாயில் இருந்து 40, 41 ரூபாய் என உயர்ந்த டாலரின் மதிப்பு, 2007 டிசம்பரில் திடீரென 52 ரூபாயை அடைந்தது. அப்போதுதான் வங்கிகள் ஒவ்வொரு நிறுவனமாக நீங்கள் 10 கோடி ரூபாய் தரவேண்டும், 25 கோடி ரூபாய் தரவேண்டுமென்று கேட்க ஆரம்பித்தன. ஏன் என்று கேட்டோம்.
 
‘நீங்க போட்ட ஒப்பந்தப்படி, உங்களுக்கு நஷ்டமாகிடுச்சு. அதற்கான தொகையைக் கட்டுங்க’ என்றார்கள். திருப்பூர்ல மட்டும் ஒப்பந்தம் போட்ட 35 ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை உடனே கட்ட வேண்டும். இல்லையென்றால், சர்பாசி சட்டப்படி தொழிலை முடக்கிடுவோம்னு மிரட்டினார்கள் வங்கியாளர்கள்.
 
கைவிரித்த அரசு!
 
இந்தப் பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து ‘ஃபாரக்ஸ் டெரிவேட்டிவ் கன்யூமர்ஸ் போரம்’ என்கிற ஓர் அமைப்பை ஆரம்பித்து, ரிசர்வ் வங்கி கவர்னரைச் சந்தித்து முறையிட்டோம்.
 
அதன் பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் புகார் செய்தோம். ‘இது ஒரு சட்டவிரோத கான்ட்ராக்ட்’ என சிவில் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தோம்.
 
இந்தப் பிரச்னையில் தொடக்கம் முதல் நடந்த விஷயங்களை சிபிஐயிடம் விளக்கிச் சொன்னோம். நாங்கள் சொன்னதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்குக் கேள்வி எழுப்பியது சிபிஐ. அதற்கு ரிசர்வ் வங்கியால் பதிலளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி, வங்கிகள் 10 தவறுகள் செய்ததாக ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது. இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக 19 வங்கிகளுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கிகள் சட்டவிரோதமாக இயங்கியதை உறுதிப்படுத்தியது. 
 
சிபிஐ தனது முதல்கட்ட விசாரணையை முடித்து, இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கியபோது, அந்த விசாரணையை எதிர்த்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கின. கடந்த ஐந்து ஆண்டுகளாக சிபிஐ மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாமல் தடை நீடிக்கிறது. இந்தப் பிரச்னையில் யார் மீது தவறு என்பதைக் கண்டுபிடிக்கத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால், வங்கிகளோ சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கத் தொடர்ந்து மறுத்து வருகின்றன’’ எனப் பிரச்னையை விரிவாகவே எடுத்துச் சொன்னார் ராஜா சண்முகம்.

நம்பி கையெழுத்துப் போட்டேன்!
 
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக நஷ்டம் கண்ட நிறுவனங்கள் அந்தத் தொகையைத் தொடர்ந்து கேட்டுவந்தன. இப்போது அந்தத் தொகையைத் திரும்பப் பெறுவதில் வங்கிகள் முனைப்புடன் களத்தில் இறங்கியுள்ளன. இதனை எதிர்த்துதான் ஏற்றுமதியாளர்கள் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர் ஆனந்த்திடம் பேசினோம். 
“என் கம்பெனி இருபது வருஷமாகச் செயல்பட்டு வருகிறது.
 
 
பாரத ஸ்டேட் வங்கிதான் எங்களது ஒரே வங்கி. 2007-ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, கரன்சி பாதிப்பிலிருந்து தப்பிக்க வங்கி இந்த ஒப்பந்தத்தை எங்ககிட்ட அறிமுகப்படுத்துனாங்க. அப்ப என்கிட்ட 13 மில்லியன் டாலர் ஏற்றுமதிக்கான ஆர்டர் கையில் இருந்துச்சு. வங்கி அதிகாரிங்க சொல்றப்ப, அது நியாயமாத்தான் இருக்கும்னு நம்பி கையெழுத்துப் போட்டேன். ஒப்பந்தம் போட்ட உடனே 2007 இறுதியில் 30 லட்சம் அக்கவுன்ட்ல இருந்து எடுத்தாங்க. 2009 ஜனவரியில் ஒரே நேரத்துல 24 கோடி ரூபாய் எடுத்தாங்க. ஏன் இப்படின்னு விசாரிச்சப்ப இந்த ஒப்பந்தம்தான் காரணமென்று தெரியவந்துச்சு.            ஆனந்த்
 
ஆலையை மூடப் பாக்குறாங்க!
 
இது சம்பந்தமாக கோர்ட்ல கேஸ் போட்டேன். இதனால என் வங்கிக் கணக்கை முடக்கினாங்க. சட்ட விரோத டெரிவேட்டிவ் கணக்கை கடனா மாத்திக்கோங்கனு கேட்டாங்க. அதை நான் ஏத்துக்கலை. அஞ்சு வருஷமாக நான் தொடர்ந்த கேஸ், கோர்ட்ல இருக்கு. வங்கி அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்தழைக்க மாட்டேங்குறாங்க. நான் அவங்க மேலே புகார் கொடுத்து எஃப்ஐஆர் போட்டவுடனே, கடனைத் திரும்பக் கட்டலைன்னு என் போட்டோவை பேப்பர்ல போட்டாங்க. அதுக்கு அப்புறம் சர்பாசி நோட்டீஸ் கொடுத்து, இப்ப என் ஆலையை மூடப் பாக்குறாங்க. டெரிவேட்டிவ் கான்ட்ராக்ட்ல இவங்க செஞ்ச பிரச்னையைச் சமாளிக்க, 1,200 பேர் வேலை செய்யுற கம்பெனிய மூட முயற்சி பண்றாங்க’’ என்று மனம் கொதித்தார்.

ஒப்பந்தமே சட்ட விரோதமானது!
 
திருப்பூர் ஆடிட்டர் தனஞ்செயனுடன் பேசினோம். “இந்த ஒப்பந்தம் மூன்று பிரிவுகளில் விதிகளை மீறியுள்ளது. பிரிவு 18-ன்படி உண்மையைச் சொல்லியும், உண்மையை நம்பியும் ஒப்பந்தம் போடப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் சொல்லவேண்டிய உண்மையைச் சொல்லாமல் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது. பிரிவு 23-ன்படி, எந்த ஒப்பந்தமும் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். பிரிவு 30-ன்படி சூதாட்டம் போன்று ஊக வணிகமாக இருந்தால் அது செல்லுபடியாகாது. இந்த 3 பிரிவுகளிலும் இந்த ஒப்பந்தம் மீறி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓர் ஒப்பந்தம் ஏற்றுமதியாளருக்குச் சரியானதாக இருக்குமா என்று ஆராய்ந்தபின்பே ஒப்பந்தம் போட வேண்டும். அந்த விதிமுறையும் இதில் மீறப்பட்டுள்ளது.
                                                                                                                         தனஞ்செயன்
 அதில் 11 வெளிநாட்டு வங்கிகள். 7 தனியார் வங்கிகள். ஒரே ஒரு வங்கி மட்டுமே தேசியமயமாக்கப்பட்ட வங்கி. இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடுதான் மோசம்” என்றார். 
கருத்து சொல்ல விரும்பவில்லை!
 
இந்தப் பிரச்னை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பலரிடம் பேசினோம். “இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இதுதொடர்பாக நாங்கள் கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது. நாங்கள் எந்த ஆலையையும் மூட முயற்சிக்கவில்லை’’ என்றனர். 
 
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தவறு செய்தது யார் என்பதைக் கூடிய விரைவில் கண்டறிந்து, சுமூகமானதொரு முடிவு காணப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்துமா?
 
படங்கள் : ரமேஷ் கந்தசாமி.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ