Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்ஃபி முதல் செயல்பாடுகள் வரை டிஜிட்டல் இந்தியா திட்டம் ஓர் அலசல்!

இந்தியாவில் கடந்த நவம்பர் 2014ல் டிஜிட்டல் இந்தியா திட்டம்  அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், சேவைகளை டிஜிட்டல்மயமாக மக்களுக்கு வழங்குவது மற்றும் அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் அறிவை புகுத்துதல் என்ற கொள்கைகளை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்டது தான் இந்த திட்டம்.


பின்னர் மத்திய பட்ஜெட் 2015ல் இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக முக்கியமாக பொது இடங்கள், இரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் வை-பை வசதி நிறுவப்படும் என்றும், கிராமங்களுக்கு அதிக வேகம் கொண்ட ப்ராட்பேண்ட் சேவை வழங்கபடும் என்று கூறி திட்டங்கள் துவங்கி செயல்பாட்டுக்கு வரத்துவங்கின.


இந்நிலையில் பிரதமர் இந்த வாரம் முழுவதையும் டிஜிட்டல் இந்தியா வாரம் என அறிவித்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை அளித்துள்ளார்.டிஜிட்டல் இந்தியா வாரத்தில் பேசப்பட்ட விஷயங்களில் முக்கியமாக இ-காமர்ஸ் என்ற நிலையில் இருந்து எம்-காமர்ஸ் எனும் விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த உதவும் வசதிகளை ஏற்படுத்தி தருவது. அரசின் சீர்திருத்தங்கள் மூலம் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவது, டிஜிட்டல் லாக்கர் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறப்பட்டது. இந்த விஷயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.


டிஜிட்டல் இந்தியா பயன்கள் என்ன?


டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் கிராமத்தில் உள்ள மக்கள் மற்றும் இணையதள வசதியே சென்றடையாத பகுதி மக்களுக்கும் இணையதள சேவைகளை கொண்டு சேர்க்க மூடியும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐடி துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது. இந்தியாவுக்கு தேவையான எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை இந்தியாவிலேயே உருவாக்கி கொள்ளும் ஜீரோ இறக்குமதி கொள்கையை கடைபிடிக்கவும் திட்டமிட்டுள்ளது அரசு.


டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் செல்போன்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று நாம் எடுக்கும் செல்ஃபிக்கள் துவங்கி நாம் வாங்கும் பொருட்கள், சினிமா டிக்கெட்டுகள், மின்சார, தொலைபேசி கட்டணம் செலுத்துவது வரை விரல் நுனியில் செல்போனில் ஆப்ஸாக மாறியுள்ள நிலையில் மக்கள் இ-காமர்ஸ் என்ற நிலையில் இருந்து மாறி எம்-காமர்ஸ் எனும் செல்போன் வழி வர்த்தகத்துக்கு பழக்கப்பட்டு விடுவார்கள். அதுமட்டுமின்றி ஆய்வுகளும் இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் செல்போன் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறுகின்றன. அதனால் இந்தியாவில் மொபைல் மூலம் டிஜிட்டல் மயமாக்குதலில் பெரிய மாற்றங்களை இந்தியா சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளை அதிகப்படுத்த இந்தியாவில் ரூ.4.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் உடனடியாக 60,000 ஐடி பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.


பிரச்னை என்ன?

டிஜிட்டல் இந்தியா திட்டம் கூறும் விஷயங்கள் எல்லாம் கேட்கவும், நினைத்துப் பார்க்கவும் பிரமாண்டத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தினாலும், இந்தியாவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சில பிரச்னைகளும் உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே 3ஜி சேவையே பல இடங்களுக்கு சென்றடையாத நிலையே இருக்கிறது. இந்நிலையில் அனைத்து இடங்களுக்கும் ப்ராட்பேண்ட் இணையத்தை கொண்டு செல்ல உள்கட்டமைப்புகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டயாத்தில் அரசு உள்ளது.

இணைய சேவைக்கான கட்டணங்கள் அதிகமாக உள்ளது. இன்னும் தொழில்நுட்பங்களை அதிகரித்தால் அதற்கான கட்டணத்தை கட்டாயம் செல்போன் நிறுவனங்கள் உயர்த்தும். கிராம மக்கள் பயன்படுத்தும் சேவை அதிக விலை உள்ளதாக இருந்தால், அந்த சேவையை அனைவரும் பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது.

தவிர, இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி விஷயத்தில்  இன்னும் ட்ராய் தரப்பில் இருந்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை.

இதுபோன்ற விஷயங்கள் உள்ள நிலையில் நல்ல அம்சங்களை கொண்ட அதிக தொழில்நுட்ப மேம்பாடு உடைய இந்தத் திட்டம் வரவேற்கதக்கதுதான் என்றாலும், இன்னும் இந்தியாவில் அதற்கான உள்கட்டமைப்புகள், சூழல்கள் உருவாகவில்லை என்பதே உண்மை. இதனை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இது சிறப்பான திட்டமாக அமையும். அப்போதுதான் இந்தத் திட்டம் வெறும் செல்ஃபி திட்டமாக இருக்காமல் சிறந்த செயல்பாடுகளை கொண்டு இந்தியாவையே டிஜிட்டல் மயமாக்கும் திட்டமாக மாறும் என்பதில் ஆச்சர்யமில்லை.


ச.ஶ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ