Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரீஸ் வங்கிகளின் எதிர்காலம்... ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டில்..?!

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது கிரீஸ். இந்த நாட்டின் கடனிலிருந்து மீட்டெடுக்க ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவை பரிந்துரைத்திருந்த "கடன் மீட்புத் திட்டத்தை" அந்நாட்டு மக்கள் நிராகரிக்கிறார்கள். இது தொடர்பான கடந்த ஞாயிற்றுக் கிழமையில் நடந்த பொதுவாக்கெடுப்பில் சுமார் 61 சதவீத மக்கள் கடன் மீட்புத் திட்டத்தை எதிர்த்தும், 39 சதவீத மக்கள் கடன் மீட்புத் திட்டத்தை ஆதரித்தும் வாக்களித்திருக்கிறார்கள்.

இதன் மூலம் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான பொருளாதார கட்டுப்பாடுகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் ஏற்க மாட்டோம் என்பதை அவர்கள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

கடன் மீட்பு திட்ட நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்று கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ரஸ் பொது மக்களை கேட்டுக் கொண்டதும்,  இப்போது அவரது கோரிக்கையை பெரும்பான்மையான பொது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த பொது வாக்கெடுப்புக்கு பின்னும் அந்நாட்டின் நிதி  நெருக்கடி குறைந்தபாடில்லை.

அதே சமயம், கிரீஸ் நாட்டுக்கு அதிக அளவு கடன் கொடுத்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேயும் கலந்துரையாடிய பிறகு கிரீஸ் மக்களின் வாக்களிப்பை  மதிக்க வேண்டும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, யூரோவை பொது நாணயமாக பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டை இன்று (7.7.15) மாலை கூட்ட முடிவு செய்துள்ளது.  இந்த கூட்டதில் கிரீஸ் மக்களின் உணர்வுகளை மதித்து, அதற்கு கூடுதலாக நிதி உதவி அளிப்பது பற்றி தீவிர ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை ஒருபுறம் நடபெற்றாலும், மற்றொறு புறம் "கிரீஸ்நாடு தன்னிடம் வாங்கிய 350 கோடி யூரோ கடன் தொகையை வருகிற 20 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்" என ஐரோப்பிய மத்திய வங்கி கெடு விதித்துள்ளது.

அதன்படி கடன் தொகையை கிரீஸ் செலுத்தாவிட்டால், அவசர கால கடன் உதவியை ஐரோப்பிய மத்திய வங்கி முற்றிலும் நிறுத்திவிடும் அபாயம் அங்கு நிலவுகிறது.

கடன் உதவி வழங்குவதை ஐரோப்பிய மத்திய வங்கி நிறுத்திவிட்டால், கிரீஸ் நாட்டிலுள்ள வங்கிகள் அனைத்தும் தங்களின் செயல்பாடுகளை அடியோடு நிறுத்திக் கொள்ளும்.

இன்று நடக்கும் ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டி நிர்ணயிக்கப்பட இருக்கும் முடிவில்தான் கிரீஸ் வங்கிகளின் எதிர்காலம் இருக்கிறது என்பதே நிதர்சணமாக உண்மையாகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ