Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் - 2

- எம்.பி. பாண்டிகுமார், இணை பேராசிரியர், LIBA
 
டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களின் பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் அதிகம் என்பதை கடந்த அத்தியாயத்தில் சொல்லி இருந்தேன்.
 
இப்போது அது பற்றி விளக்குகிறேன். டெரிவேட்டிவ் ஒப்பந்தத்தின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது.
 
அன்றாட வாழ்வில் டெரிவேட்டிவ் ஒப்பந்தத்தின் பயன்பாடு:
 
பயன்பாடு 1 (Forward contract)
 
டெரிவேட்டிவ் ஒப்பந்தமானது நம் அம்மாவுக்கும் பூ அல்லது பால் விற்க்ககூடிய விற்பனையாளர்க்கும் இடையே ஏற்படுவது. நம் அம்மாமார்கள் பூ அல்லது பால் தங்களுடைய வீட்டுத்தேவைக்கு வாங்க முற்படும்போது அதற்கான விலையை உடனுக்குடன் தராமல் மொத்தமாக வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ கொடுப்பது வழக்கம்.
 
தனது வீட்டு தினசரி தேவைக்காக பூ வாங்கும்போது அதன் விலையை மாதத்தின் முதல் நாளன்றே, உதாரணமாக ரூ.25-க்கு நான்கு முழ கதம்பப் பூவை தின பூஜை தேவைக்காக கொடுக்கவேண்டும் என்று பூ வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்துவிடுவார்.
 
பூ வியாபாரி முதலிலேயே ரூ.25-க்கு நான்கு முழ கதம்ப பூவை கொடுக்க ஒப்புக்கொண்ட காரணத்தினால் தினசரி சந்தை விலையை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் நம் அம்மாவின் பூஜைக்கான பூவின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்.
 
பயன்பாடு 2 (Option contract)
 
சுந்தர் அவர்கள் மே மாதம் 30-ம் தேதி அன்று மும்பை செல்வதால் புகைவண்டிக்கான 2-ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கான பயணசீட்டை முன்பதிவு செய்கிறார். பயணம் செய்வதற்கு உரிமையை அவர் முன்பதிவு மூலம் பெறுகிறார். மும்பை செல்வதற்காக பயணக் கட்டணம் ரூ.950 மற்றும் முன்பதிவு கட்டணமாக ரூ.20-யையும் ஒட்டுமொத்தமாக செலுத்துகிறார். சுந்தருக்கும் மற்றும் ரயில்வே நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட இந்த ஒப்பந்தமானது சுந்தருக்கு  ஏதுவான சூழ்நிலையில் அவருடைய முன்பதிவு உரிமையை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
 
ஆனால், மே மாதம் கடைசி வாரத்தில் அவரால் மும்பை செல்ல முடியாது என்று தெரிந்தவுடன், அவர் பயணச் சீட்டை ரத்து செய்கிறார். சுந்தரால் பயணத் திட்டத்தை செயலாக்கமுடியாத காரணத்தில், முன்பதிவு உரிமையை விட்டு கொடுக்க ரூ.20-ஐ இழக்கத் தயாராகிறார். இறுதியாக அவர் செலுத்திய பயண கட்டணம் ரூ.950-ஐ திரும்பப் பெற முடிகிறது.
 
இன்றைய நவீன வாழ்க்கையில்தான் டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் இருக்கின்றன என்று நினைத்துவிடாதீர்கள். மகாபாரதத்திலேயே டெரிவேட்டிவ் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லை? 
 
மகாபாரத்தில் டெரிவேட்டிவ் ஒப்பந்தம்!  
 
மகாபாரத இதிகாசத்தில், போர் நடக்கும் தருவாயில், குந்தி தன்னுடைய மூத்த சூர்ய புத்திரன் கர்ணனை கங்கை ஆற்றங்கரையில் சூரிய நமஸ்காரம் செய்யும் தருவாயில் சந்திக்கிறார் என்பதும் யாவரும் அறிந்ததே.
 
குந்தி, தான் யார் என்று கூரியது மட்டுமல்லாமல், தன்னுடைய ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற எண்ணி, கர்ணனை கௌரவர் பக்கமிருந்து விலகிப் பாண்டவர் அணியில் சேர வேண்டும் என்று அழைக்கிறார். அந்தத் தருணத்தில் கர்ணன் வரங்களை அளிக்கிறார். இதற்கும் டெரிவேட்டிவ் ஒப்பந்தத்துக்கும் தொடர்புண்டு. 
 
முதலில், போரின் முடிவில் ஐந்து புத்திரர்களும் நிச்சயமாக உயிரோடு இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், தான் வெற்றி பெற்றால் அர்ச்சுனன் உயிர் துறப்பார் அல்லது தோற்றால் தான் உயிர் துறக்க நேரிடும் என்று குந்தியிடம் சொல்கிறான் கர்ணன். அர்ச்சுனன் இறந்து கர்ணன் இருந்தாலும் சரி, கர்ணன் இறந்து அர்ச்சுனன் இருந்தாலும் சரி, இறுதியாக குந்திக்கு ஐந்து புத்திரர்கள் உயிரோடு இருப்பார்கள் என்பதை வியாச பகவான் மகாபாரதத்தில் வலியுறுத்தினார். இதை டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களுடன் எப்படி ஒப்பிட்டுப் பார்க்கலாம். 
 
கடந்த அத்தியாயத்தில் முன்னோக்கிய ஒப்பந்தம் பற்றி பார்த்தோம் அல்லவா? அதை முதலில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது, மே 20-ல், சுந்தரலட்சுமி சர்க்கரை ஆலை விற்பனை மேலாளர் தனது ஆலையின் சர்க்கரை இருப்பு நிலை ஜூன் 1-ம் தேதியில் 10,000 கிலோ கிராம் என்று திட்டமிடுகிறார்.
 
விற்பனை மேலாளர் விலையிறக்கம் ஏற்படும் என்பதற்கான வாய்ப்புக்களை முன்னரே அறிந்து இரண்டு பேக்கரி முதலாளிகளுடன் முன்னோக்கிய ஒப்பந்தத்தில் ரூ.45 (ஒரு கிலோவுக்கு) விற்க சம்மதிக்கிறார். சிறப்பான பருவ மழையினால் மிக அதிகமான கரும்பு மகசூல் ஏற்பட்டதால், சந்தையில் சர்க்கரையின் வரத்து (supply) அதிகரித்து, விலை ரூ.43-ஆகக் குறைந்தது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி அன்று ஒப்பந்தபடி (Forward contract) ரூ.45/ கி.கி விற்பதன் மூலம் சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் நஷ்டத்தை தவிர்க்க முடிகிறது.
 
மகாபாரத்திலும் கர்ணன் போரில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும், இறுதியில் குந்திக்கு மொத்தம் ஐந்து புத்திரர்கள் இருப்பதும் மற்றும் சுந்தரலட்சுமி  சர்க்கரை ஆலையின் ரூ.45/கி.கி ஜூன் 1-ஆம் தேதியில் விற்பதும் முன்னோக்கிய ஒப்பந்தத்தின் அம்சங்களை நினைவுறுத்துகிறது.
 
இப்படி நம் தினப்படி வாழ்க்கையிலும் டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் பல இருந்தாலும், அவற்றை எப்படி எல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் வகைப்படுத்தி பிரித்து வைத்திருக்கிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.
 
டெரிவேட்டிவ் வகைகள்!  
 
டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் பின்வரும் வகைகளாக பட்டியலிடப்படுகிறது.
 
பார்வர்ட் காண்ட்ராக்ட் (முன்னோக்கிய ஒப்பந்தம்):
 
இந்த வகையான காண்ட்ராக்ட்கள் நிதி மற்றும் பொருட்களை அடிப்படையாக கொண்டு தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்படுவதால், வர்த்தகத்திலுள்ள விலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய ரிஸ்க்கை தவிர்த்து நஷ்டத்தை குறைக்கிறது. இதில் ஒருவர் வாங்கவும் மற்றொருவர் விற்கவும் ஆக மொத்தம் இவகையான ஒப்பந்தத்தில் இருவர் மட்டுமே பங்கெடுகின்றனர்.
 
ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (எக்ஸ்சேஞ்ச் முன்னோக்கிய ஒப்பந்தம்):
 
இந்த வகையான காண்ட்ராக்ட்கள், எக்ஸ்சேஞ்ச்களால் வகுக்கப்பட்ட வரையறைகளுக்குள் விற்பவர் மற்றும் வாங்குபவர் மத்தியில் எட்டப்படுகிறது. இதில் வாங்குபவர் ஒருவர், விற்பவர் ஒருவர் என இருவரையும் எக்ஸ்சேஞ்ச் என்கிற அமைப்பு இணைத்து, நெறிமுறைப்படுத்துகிறது. 
 
ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட்கள்!
 
இந்தியாவில் பொதுவாக ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று, கமாடிட்டி ஃப்யூச்சர் கான்ட்ராக்ட்; மற்றொன்று, ஃபைனான்ஷியல் ஃப்யூச்சர் கான்ட்ராக்ட். முதலில்
கமாடிட்டி ஃப்யூச்சர் கான்ட்ராக்ட்டைப் பார்ப்போம்.
 
கமாடிட்டி ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் (Commodity Futures Contract):
 
இந்த வகையான காண்ட்ராக்ட்கள் விளைபொருட்கள் (கடலை, சோயா, ரப்பர்), விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் செம்பு (Copper), கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள், பணப்பயிர்கள் (ஏலக்காய், கொத்தமல்லி), சர்க்கரை, பருத்தி ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பெற்று, மிக முக்கியமாக கீழ்காணும் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
 
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX):
 
விலை மதிப்பற்ற மற்றும் அடிப்படை உலோகங்கள், ஆற்றல் (Energy), விவசாய விளைப்பொருட்கள் இதில் வர்த்தகமாகின்றன.
 
நேஷனல் கமாடிட்டி டெரிவேட்டிவ் எக்ஸ்சேஞ்ச் (NCDEX): விலை மதிப்பற்ற மற்றும் அடிப்படை உலோகங்கள், ஆற்றல் (Energy), விவசாய விளைப்பொருட்கள் இதில் வர்த்தகமாகின்றன.
யூனிவர்ஷல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்: விவசாய விளைப்பொருட்கள், ஆற்றல் மற்றும் விலை மதிப்பற்ற உலோகங்கள் வர்த்தகம் செய்கிறது.
 
ஃபைனான்ஷியல் ஃப்யூச்சர் கான்ட்ராக்ட் (Future Contracts):
 
ஃபைனான்ஷியல் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட்கள் பொதுவாக நிறுவனத்தின் பங்குகள் (Shares), அரசாங்கக் கடன் பத்திரங்கள் (Bonds), பங்குச் சந்தை குறியீட்டேன் (Share market index) மற்றும் அந்நிய செலவாணியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இவற்றை நான்கு பெரும் வகைகளாக பிரிக்கலாம்.
 
பங்கு ஃப்யூச்சர்ச் காண்ட்ராக்ட் அல்லது ஸ்டாக் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் என்பவை ஸ்டாக் ஃப்யூச்சர்கள் (Stock futures) ஆகும்.
 
பங்கு சந்தை குறியீட்டேன் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் அல்லது இன்டெக்ஸ் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Index futures)
 
கடன் பத்திரங்கள் ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் அல்லது பாண்ட் ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Bond futures)
 
அந்நிய செலவாணி ஃப்யூச்சர் காண்ட்ராக்ட் அல்லது கரன்சி ஃப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் (Currency futures)
 
கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஃபைனான்ஷியல் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்களை விரிவாக தெரிந்துகொள்ள பின்வரும் இணையதள முகவரிகளை அணுகுங்கள். 
 
பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்:
 
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்:
 
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்-ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (MCX-SX):
 
இந்த ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட்டுகளை விற்பவர் மற்றும் வாங்குபவருக்கிடையில் எக்ஸ்சேஞ்சானது எப்படி வரையறை செய்து செயல்படுத்துகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ