Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி-பதில்!

அஸெட் அலோகேஷன் சந்தேகங்களுக்கு  22-7-2015 அன்று மாலை 4-5 மணிக்கு ட்விட்டரில் இன்டகிரேடட் என்டர்பிரைசஸ் (இந்தியா), இயக்குநர்,  ஸ்ரீராம் வைத்தியநாதன்  பதில் அளித்தார்.

1. என்னால் மாதம் ரூ. 1 லட்சம் சேமிக்க முடியும். என்னுடைய அஸெட் அலோகேஷன் எவ்வாறு இருக்கவேண்டும்? என் வயது 45. ஓய்வு வயது 60.
 
அஸெட் அலோகேஷனில் முக்கியமான அம்சம் முதலீட்டாளரின் வயதுதான். பொதுவாக 100 மைனஸ் வயது எடுத்துக்கொண்டு அந்த சதவிகிதத்திற்கு ( 55%) ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் 55 %  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். 30 % கடன் ஃபண்டுகளில் முதலீடு  செய்யலாம். 5 % தங்கத்திலும், மீதத்தை வங்கியிலும் டெபாசிட் செய்யலாம். 

2. என் வயது 65. வீட்டு வாடகையாக மாதம் ரூ. 18,000 வருமானம் வருகிறது. என் வருமானத்திற்கு அஸெட் அலோகேஷன் எப்படி இருக்க வேண்டும்?

உங்களது வயதை மனதில் வைத்துக்கொண்டு  நோக்கும்போது உங்களின் வருமானம் வாழ்க்கைத்  தேவைகளை நிவர்த்தி செய்யும் அளவிலேயே உள்ளது.
 
ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் அவசரத் தேவைகளுக்கு பணத்தை ஒதுக்கியபின் மீதம் இருப்பின் வங்கி டெபாசிட்டுகளில் அந்தத் தொகையை முதலீடு செய்யலாம்.

3. என் வயது 40. நான் ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, தங்கம் போன்றவற்றில் எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
 
அஸெட் அலோகேஷனில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று ஃபைனான்ஷியல் அஸெட்ஸ் ( ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட், வங்கி டெபாசிட்) , இரண்டாவது ரியல் அஸெட்ஸ் ( ரியல் எஸ்டேட், தங்கம் ). 
ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரையில் சிறிய தொகையை முதலீடு செய்ய முடியாது. லிக்விடிட்டி அவ்வளவு எளிதல்ல. தங்கத்தைப் பொறுத்தவரை நல்ல ஒரு முதலீடுதான். கடந்த ஐந்து வருடங்களில் நல்ல வளர்ச்சியைத் தந்துள்ளது. ஆனால், நீண்ட காலத்தில் அதனுடைய வளர்ச்சி 8 % -த்தைத் தாண்டியதில்லை. எனவே, உங்களுடைய அஸெட் அலோகேஷனில் தங்கத்தின் பங்கு 5-லிருந்து 10 சதவிகிதம் வரை மட்டுமே வைத்துக்கொள்ளலாம். 
 
ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை சொந்த பயன்பாட்டிற்கு வாங்குவீர்களானால் அதை முதலீடாகக்  கருத முடியாது. உங்களிடம் பெரியதொரு தொகை இருக்குமேயானால் அதில் ஒரு பகுதியை ( 30 %) நீண்ட கால முதலீடாகச் செய்யலாம். அதை செய்யும்போது லிக்விடிட்டி அவ்வளவாக இருக்காது என்பதை மனதில் கொண்டு செய்ய வேண்டும்.
 
உங்களால் பத்து ஆண்டு காலம் வரை காத்திருக்க முடியுமென்றால் பங்குச் சந்தையில் 60% முதலீடு செய்யலாம் , அதுபோலவே  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். 

4. இந்தியாவில் கடந்த 10, 15 ஆண்டுகளில் எந்த முதலீடு அதிக வருமானம் தந்திருக்கிறது?
    
ரியல் எஸ்டேட் கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக நல்லதொரு வளர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், அதனுடைய  குறைகளான  அதிக முதலீட்டுத் தேவை, லிக்விடிட்டி  மற்றும் வரியைக் கருத்தில்கொண்டு  நோக்கும்போது அவ்வளவு நல்ல முதலீடாகக் கருத முடியாது. 
 
ஆனால், ஈக்விட்டி / ஈக்விட்டி ஃபண்டை எடுத்துக்கொண்டு பார்க்கும்போது அவை 15%-க்கு மேல் வளர்ச்சியைத் தந்துள்ளது. மேலும், இதிலிருந்து கிடைக்கும் டிவிடெண்டுகளுக்கு வரியில்லை. மேலும், டிவிடெண்ட் மற்றும் கேப்பிட்டல் அப்ரிசியேஷன் இணைந்து கிடைக்கும் வாய்ப்பு இதில் மட்டுமே உள்ளது . 
 
மேலும், ஒரு வருடத்துக்குமேல் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து கிடைக்கும்   மூலதன ஆதாயத்திற்கு வரிவிலக்கு உள்ளது.
 
5. வருமான வரிச் சலுகை கிடைக்கும் விதமாக அஸெட் அலோகேஷன் செய்ய முடியுமா? விளக்கிச் சொல்லவும்.
 
வருமான வரி சட்டம் 80சி-ன் கீழ் பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இஎல்எஸ்எஸ் என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் , ராஜீவ் காந்தி ஈக்விட்டி திட்டம் , பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி இதுபோன்ற திட்டங்களில்  முதலீடு செய்யும்போது வருமான வரிச் சலுகை கிடைக்கிறது. இஎல்எஸ்எஸ் திட்டத்திலிருந்து திரும்பக் கிடைக்கும் பணத்திற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரிச்சலுகை உள்ளது. வளர்ச்சி வாய்ப்பும் அதிகம். பிபிஎஃப்-ல் கிடைக்கக்கூடிய வட்டி முழுவதுக்கும் வரிச்சலுகை உண்டு .
 
6. நிதித் திட்டமிடலும்,
அஸெட் அலோகேஷனும் ஒன்றா?
 
நிதித்  திட்டமிடலின்  ஒரு முக்கிய பகுதிதான் அஸெட் அலோகேஷன். உங்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்காகச் செய்யப்படுவதுதான் நிதித் திட்டமிடல், அதில் அஸெட் அலோகேஷன் ஒரு கருவியாகச் செயல்படுகிறது.
 
7. அஸெட் அலோகேஷன் டிராக் செய்வது எப்படி ?
 
அஸெட் அலோகேஷன் என்பது உங்களுடைய வயது , இலக்கு, எதிர்பார்க்கும் வளர்ச்சி, உங்களால் ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ளும் அளவு மற்றும் முதலீட்டுக் காலம் இவைகளை மனதில் கொண்டு செய்யப்பட வேண்டும். 
குறைந்தபட்சம் வருடத்திற்கு இருமுறையாவது உங்களுடைய முதலீடுகள் சரியான பாதையிலும் அளவிலும் வளர்ந்து வருகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் . எங்களுடைய நிறுவனத்தின்  எல்லா  கிளைகளிலும்  முதலீட்டாளர்களுக்கு  இந்தச் சேவையை அளித்து வருகிறோம்.
 
8. அஸெட் அலோகேஷன் ,  போர்ட்ஃபோலியோ என்ன வித்தியாசம் ?
 
 போர்ட்ஃபோலியோ என்பது அஸெட் அலோகேஷனின் ஒரு பகுதியாகும். நீங்கள் செய்யும் அஸெட் அலோகேஷன் உங்களுடைய போர்ட்ஃபோலியோ எப்படிப்பட்டது என்று தீர்மானிக்கும் ( அக்ரெஸிவ், மாடரேட், கன்ஸர்வேட்டிவ் ).
 
9. கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றேன். எனக்கு மாதம் ரூ.25,000 பென்ஷன் வருகிறது. என் அஸெட் அலோகேஷனை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்?
 
ஓய்வு பெற்றுவிட்டீர்கள் என்பதைக் கருத்தில்கொண்டு கூறுகையில் உங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் பணத்தை ஒதுக்கிய பின் மீதி உள்ள தொகையை பத்திரமான முதலீடுகளான வங்கி டெபாசிட் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் . பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அவ்வளவு உகந்ததல்ல. ஏனென்றால், பத்து வருடங்களாவது அதனுடைய வளர்ச்சிக்குத் தேவைப்படும் .

10. வேலை பார்க்கும் நான் என் அம்மா சொன்னபடி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தங்கத்தில் பணத்தைப் போட்டு வருகிறேன். அது சரியா?
 
நீங்கள் இப்போது செய்து வருவது தவறல்ல. இருப்பினும் உங்களுடைய வயது குறைவு என்று கருத்தில்கொண்டு பார்க்கும்போது, நீங்கள் பொதுவான அளவுகோலாகக் கருதப்படும் 100 மைனஸ் உங்களின் வயதைக் கழித்து வரும் சதவிகிதத்தை அடிப்படையாகக் கொண்டு பங்கு முதலீட்டில் நேரிடையாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாகவோ முதலீடு செய்யலாம். ஏனென்றால், இவை அதிக வளர்ச்சியைத் தருபவை மற்றும் உங்களுக்கு தேவையான கால அவகாசம் உள்ளது. மீதமுள்ள தொகைக்கு நீங்கள் செய்வதையே தொடர்ந்து செய்யலாம்.

11. என் வயது 40. என்னிடம் இருக்கும் ரூ. 5 லட்சத்தில் தலா ரூ. 1 லட்சத்தை நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி, கோல்டு இடிஎஃப், பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம் என இருக்கிறேன். இது சரியா? 
 
உங்களுடைய திட்டம், உங்களுடைய எதிர்கால இலக்குகளைக் கருத்தில் கொண்டு அதற்குத் தேவைப்படும் வளர்ச்சி , பணம் திரும்பப் பெறும் வழிவகைகள் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில்கொண்டு செய்யப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது அவ்வாறாகத் தோன்றவில்லை. எங்களுடைய கிளைகளை அணுகினால் உங்களுக்கு உதவுவார்கள்.
 
12.  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே கொண்டு அஸெட் அலோகேஷனை உருவாக்க முடியும் என என் தோழி சொன்னார். அது சரியா? விளக்கிச் சொல்ல முடியுமா? 
 
 அவர் கூறுவது சரியே. ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்டிலேயே ஈக்விட்டி, கடன் பத்திர ஃபண்ட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு வழிவகைகள் உள்ளன.இவற்றைக் கொண்டு உங்களின் அஸெட் அலோகேஷனைத் திட்டமிடலாம். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் என்பது   சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாகனம் . ஏனென்றால், அது நன்றாக  செபியால் கண்காணிக்கப்பட்டு , திறமையான ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படுகின்ற ஒன்று.
 
 
 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ