Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் இன்ஷூரன்ஸ் எடுக்க எளிய வழிமுறைகள்!

மூன்று வருடத்துக்கு ஒருமுறை ஸ்மார்ட்போனை மாற்றிவிடுகிறோம். நாம் வாங்கும் போனின் விலையும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. போனை மாற்றும்போதெல்லாம், பாதுகாப்புக்காக போனுக்கு ஸ்கிரட்ச் கார்டு, பே கேஸ் என வாங்கிப்போடுகிறோம். இதற்குக் கூடுதலாக ரூ.500 - 1,000 வரை செலவழிக்கிறோம். இது மட்டும் நாம் வாங்கும் போனுக்கான பாதுகாப்பு இல்லை. உண்மையான பாதுகாப்பு என்பது இன்ஷூரன்ஸ்தான். ஆனால், நேரடியாகக் கடைக்குச் சென்று போன் வாங்கும்போது அந்தக் கடையில் இன்ஷூரன்ஸ் கொடுத்தால் அதை வாங்குகிறோம். அடுத்தடுத்த வருடங்களில் அதைப் புதுப்பிப்பது இல்லை. இது ஒருவகையான வாடிக்கையாளர்கள். ஆனால், இன்று பெரும்பாலானவர்கள் செல்போனை ஆன்லைனில் வாங்கிவிடுகிறார்கள். இவர்கள் போனை வாங்கியதோடு சரி. அதற்கான இன்ஷூரன்ஸ் குறித்து யோசிப்பதே இல்லை.
நேரடியாகக் கடைக்குச் சென்று போன் வாங்குவது அல்லது ஆன்லைனில் போன் வாங்கினால் எப்படி இன்ஷூரன்ஸ் வாங்குவது என்பது குறித்துப் பார்ப்போம். எங்கு போன் வாங்கினாலும் அந்த போனுக்கான இன்ஷூரன்ஸ் எளிதாக எடுக்க முடியும் என்கிறார் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த பொதுமேலாளர் சந்திரசேகர்.
என்னென்ன தேவை!
செல்போன் வாங்கியவுடன் அதனுடைய ஐஎம்இ எண், செல்போன் வாங்கியதற்கான பில் ஆகியவற்றைக் கொடுத்து இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும்.
பிரீமியம் எவ்வளவு!
போனில் விலையில் 2.5 - 3 சதவிகிதம் தொகை பிரீமியமாக இருக்கும். போனில் விலையின் அடிப்படையில்தான் பிரீமியம் வசூலிக்கப்படும்.
கவரேஜ் என்ன?
செல்போனுக்கு வாங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியில் போனுடன் சேர்த்து, பணம் மற்றும் பேகேஜுக்கும் கவரேஜ் கிடைக்கும். அதாவது, போனை தவறவிடும் நேரங்களில் அதனுடன் ஏதாவது பணம் அல்லது பொருட்களையும் தவறவிட வாய்ப்புள்ளது. அதனால் இந்த கவரேஜ் வழங்கப்படுகிறது. இந்த கவரேஜ் நிறுவனத்துக்கு நிறுவனம் வித்தியாசப்படும்.
எதற்கு க்ளெய்ம் கிடைக்கும்?
செல்போன் திருடுபோனால், தீ, மின்னல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு செல்போன் ஏதாவது சேதம் அடைந்தால் அதற்கு க்ளெய்ம் செய்ய முடியும்.
எதற்கு க்ளெய்ம் கிடையாது?
வேண்டுமென்றே போனை தொலைத்துவிடும்போது, ஞாபகமறதியாக போனைத் தொலைத்துவிடும்போது அல்லது உங்கள் உறவினர்கள் போனை உடைத்துவிட்டாலும் க்ளெய்ம் கிடைக்காது. க்ளெய்ம் பெற வேண்டும் எனில், உங்கள் நண்பரின் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து எஃப்ஐஆர் போட வேண்டும். தண்ணீரில் விழுந்து செல்போன் சேதம் அடைந்தாலும் க்ளெய்ம் பெற முடியாது.
புதுப்பிக்கும் காலம்!
செல்போன்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அதிகபட்சமாக 3 வருடங்களுக்குத்தான் கிடைக்கிறது.
எப்படி க்ளெய்ம் செய்வது?
செல்போன் தொலைந்து போனதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். அதாவது, புதிதாக சிம் இணைப்புப் பெற்றதற்கான கடிதம் கொடுக்க வேண்டும். பஸ் அல்லது ரயிலில் பணிக்கும்போது உங்களுடைய பேக்கை சேதப்படுத்தி போனைத் திருடியிருந்தால் அதை ஆதாரமாகக் கொடுக்கலாம். பேக் சேதம் அடையாமல் செல்போனை யாராவது திருடியிருந்தால் அந்த நேரத்தில் உடன் பயணித்தவர்களிடம் உங்கள் செல்போன் திருடுபோய்விட்டது என்பதை எழுதிவாங்கி அவர்களைச் சாட்சியாகச் சேர்க்க வேண்டும்.
இதெல்லாம் முடிந்த பிறகு செல்போன் வாங்கிய பில், பாலிசி எண் ஆகியவற்றைக் கொடுத்து க்ளெய்ம் வாங்க முடியும். நீங்கள் செல்போன் வாங்கும்போது போனின் விலை ரூ.10 ஆயிரம். ஆனால், தற்போது அந்த போனின் விலை ரூ.6 ஆயிரம் எனில், இன்ஷூரன்ஸ் நிறுவனமே போனை வாங்கிக் கொடுத்துவிடும்.
ஆயிரம் ரூபாய்க்குள் ஏற்படும் சேதங்களுக்கு க்ளெய்ம் இல்லை என்பது நிறுவனங்களின் கட்டுப்பாடாக உள்ளது. உங்களின் செல்போன் டிஸ்ப்ளே பழுதடைந்துவிட்டது. அதை மாற்ற 1,500 ரூபாய்ச் செலவாகிறது. ஆனால், உங்களுக்கு 500 ரூபாய்தான் க்ளெய்ம் கிடைக்கும்.
எனவே, செல்போன் வாங்கும்போது இன்ஷூரன்ஸ் மிகவும் அவசியம் என்பதைப்போல பாலிசியின் விதிமுறைகளைப் படித்து தெரிந்துகொள்வது அதைவிட முக்கியம்.

இரா.ரூபாவதி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ