Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6. ஆடத் தெரியும்! பாடத் தெரியும்!

சும்மா வருமா வேலை..?

6. ஆடத் தெரியும்! பாடத் தெரியும்!

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

 'எல்லாருக்கும் வர்ற சந்தேகம்தான் எனக்கும். நான் ரொம்ப நல்லா பாடுவேன். இதை..,  என்னுடைய 'பயோடேட்டா'வுல சொல்லலாமா வேண்டாமா..?'

 

'ஊம். சொல்லலாம். தப்பு இல்லை. 'ஓ... பாடுவீங்களா..! வெரி குட்'னு யாராவது சொல்லிக் கேட்கணும்னு  ஆசை இருந்தா, 'பயோடேட்டா'வுல குறிப்பிடலாம். உண்மையிலேயே எத்தனை பேருக்கு இந்த 'கிஃப்ட்' கிடைக்குது..?

 

ஆனா...., இதை வச்சு வேலை குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது..'

 

'அது எனக்கே தெரியும். நான் என்ன.. எனக்குப் பாடத் தெரியும். வேலை குடுன்னா கேட்கறேன்...?

அது ஒரு 'ஹாபி'. அதனால சொல்றேன்..'

அப்படின்னா, சரி. 'தகுதி' என்கிற தலைப்பின் கீழ் வேண்டாம். 'பொழுதுபோக்கு' என்கிற பட்டியலில் தரலாம்.

இதிலே சாதகமான ஒரு சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். சில சமயங்களில் இது ஒரு கூடுதல் தகுதியாகவும்

 

கருதப்பட வாய்ப்பு இருக்கிறது. எப்பொழுது...?

 

ஒரு சிறிய, அல்லது புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கிறோம்...

 

கணிதமோ அறிவியலோ மொழிப் பாடமோ... நம் கல்வித் தகுதிக்கு ஏற்றதைத்தான் கேட்கிறோம். அதே சமயம்,

'நன்றாகப் பாடவும் தெரியும்' என்பது பள்ளி நிர்வாகத்தை ஈர்க்குமா இல்லையா..? நிச்சயமாக அது ஒரு அனுகூலம்தான்.

 

ஏதேனும் ஒரு விளையாட்டில் நல்ல பயிற்சி இருந்தால்..., ஆடல் பாடலில் ஈடுபாடு இருந்தால்..,

என்.சி.சி.யில் கலந்து கொண்டு செயல் புரிந்த அனுபவம் இருந்தால்.., எழுத்து, பேச்சு, கவிதையில் ஈடுபாடு இருந்தால்.. ஆசிரியர் பணிக்கு மிக நல்ல கூடுதல் தகுதிதானே... இல்லையா...? இதுபோன்ற சமயங்களில், பொழுதுபோக்கு என்று இனம் பிரிக்காமல், 'கூடுதல் தகுதி' என்றே தனித்துக் காட்டலாம். தவறு இல்லை.

 

ஆக, என்ன விதிமுறை..?

வெகு எளிது. நம்முடைய கல்வித் தகுதி தவிர்த்து, வேறு ஏதேனும் சிறப்புத் தகுதி நமக்கு இருந்து, அதற்கான சான்றிதழ்  இல்லாவிடினும், கூடுதல் தகுதியாகக் குறிப்பிடலாம்.

 

இரண்டு நிபந்தனைகள்தாம்.

1. இத்தகுதி, ஏதோ ஒரு வகையில், நமக்கு / நிறுவனத்துக்கு, பணியில் உதவிகரமாக இருக்க வேண்டும்.

2. விண்ணப்பிக்கிற வேலைக்கான நேரடித் தகுதியில் எந்தக் குறைபாடும் இருக்கக் கூடாது.

 

சரி.., மேற்சொன்ன இரண்டு நிபந்தனைகளும் 'ஒத்து வராத போது', குறிப்பிடலாமா கூடாதா..? செய்யலாம். எப்பொழுது..?

போட்டித் தேர்வு எழுதி, 'இன்டர்வியூ'வுக்குச் செல்லு முன், ஒரு படிவம் (ஃபார்ம்) கொடுத்து நிரப்பச் சொல்வார்கள்.

அதுசமயம், 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்' மிகுந்த நன்மை பயக்கும்.

 

பொதுவாக, அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வில், 'ஹாபி' பற்றிய வினாக்கள் தவறாது கேட்கப்படுகின்றன.

இவை, தேர்ச்சியை உறுதி செய்யுமா..? சொல்வதற்கு இல்லை. ஆனால், 'இன்டர்வியூ'வின் போது, ஒருவித இறுக்கமான சூழலில் இருந்து மீள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். ஐயமில்லை.

 

கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் இதுதான். 'சொல்றதுக்கு, 'உருப்படியா' எதுவும் இல்லை போல இருக்கு... அதனாலதான் தம்பி...., இதைப் பத்தியெல்லாம் விலாவாரியா சொல்லிக் கிட்டுத் திரியுது...' என்று கருதுகிறாற் போல் இருந்து விடக் கூடாது.

 

அடுத்ததாக நினைவில் கொள்ள வேண்டியது - எத்தனை 'ஆக்டிவிடீஸ்' சொல்கிறோம் என்பது. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பயிற்சி நிறுவனத்தில் 'மாக் இன்டர்வியூ', (மாதிரி நுழைவுத் தேர்வு) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒருவர் தந்த 'ஹாபி' பட்டியல், ஒருவிதத்தில் ஆச்சரியமாக இருந்தது.

 

ஏறத்தாழ முக்கால் பக்கத்துக்கு எழுதி இருந்தார். கோலிகுண்டு, பம்பரம் விளயாடுவது தவிர்த்து, மற்ற எல்லாவற்றையும்  எழுதி விட்டார். புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது.... என்று மேலே மேலே அடுக்கிக் கொண்டே போய் இருந்தார். எந்த நிறுவனம் அவரை வேலைக்கு எடுக்கும்..?

 

அவரைப் பொறுத்த மட்டில் உண்மையைத்தான் சொல்லி இருந்தார்.

 

'ஏன் இத்தனை நீளமான பட்டியல்..?' 

'இது எல்லாமே நான் பண்ணுவேன் சார். காலையிலன்னா வெளையாடுவேன்... சாயந்திரம்னா, வூரு சுத்துவேன்..' என்று விளக்கினார். இது, அறியாமை அல்ல. 'ரொம்ப வெள்ளந்தியான மனசு'. 'வேலைக்கு ஆவாது'.

 

வேறு சிலர் உண்டு. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள்.

 

எந்தத் தேதியில், எந்த இடத்தில், எந்த அமைப்பின் போட்டியில் கலந்து கொண்டேன் என்றெல்லாம் புள்ளி விவரங்களுடன் 'அசத்துவார்கள்'. 'தவழ்ந்த காலத்துல இருந்து', முதல் நாள் மாலை நடைபெற்றது வரை அனைத்தையும் அவ்வப்போது 'அப்டேட்' செய்து, ஒருவித 'பெருமிதத்துடன்' விண்ணப்பத்தை சமர்ப்பிப்பார்கள்.

 

நன்றாக, அடிக்கோடு இட்டு குறித்து வைத்துக் கொள்வோம். குறைந்தது மாவட்ட அளவிலாவது அங்கீகாரம் பெற்ற

அமைப்புகளில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்று இருக்க வேண்டும். இரண்டாம் பரிசு என்றால், இயன்றவரை தவிர்த்தல் நலம். 'பார்ட்டிசிபேடிங் ப்ரைஸ்' அதாவது 'ஆறுதல்' பரிசு, வரைக்கும் சொல்வதெல்லாம்... 'ப்ளீஸ். வேண்டாமே'.

 

'இவ்வளவு நல்லா 'பெர்ஃபார்ம்' பண்ணி இருக்கீங்க....! இதுலயே 'கன்டினியூ' பண்ண வேண்டியதுதானே..?' என்று யாரும் (உண்மையாகவே அக்கறையுடன்) கேட்டால், சரியான விடையைத் தயாராக வைத்து இருக்க வேண்டும்.

'என்ன பண்றது சார்... வேற வழி இல்லை.. அதான்.. என் கெரகம்.. இங்க வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கேன்..' என்கிற தொனியில் நமது பதில் அமைந்து விடக் கூடாது. நேர்மையான நிஜ நிலவரத்தைச் சொல்வதே உத்தமம்.

 

இந்த.., 'எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸ்' என்கிற பகுதி, ஒரு 'பயோடேட்டா'வில் எங்கு வந்தால் சிறப்பாக இருக்கும்...?

கல்வித் தகுதி, பணித் தகுதியை ஒட்டி அடுத்ததாக வரலாம். ஆனால் அதிலே ஒரு 'ரிஸ்க்' இருக்கிறது.

அதன் பிறகு நாம் என்ன சொன்னாலும், அது ஒரு 'தாக்கத்தை' ஏற்படுத்தாது. ஆகவே, நமது கடிதப் போக்குவரத்துக்கான முகவரியைத் தரும் முன்னர், நிறைவாக, இந்த விவரங்களைக் குறிப்பிடுவது, 'பயோடேட்டா'வுக்கு ஒரு 'மரியாதை'யைத் தரும். யோசித்துப் பாருங்கள்.

 

சில சிறிய குறிப்புகளை (minor points) பார்த்து விட்டால், 'பயோடேட்டா' எழுதி விடலாம்.

 

மணமானவரா இல்லையா..? (marital status) என்கிற 'மில்லியன் டாலர்' கேள்வி, இடம்பெறத்தான் வேண்டுமா..?

 

அப்பொழுதுதான் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த 20 வயது இளைஞன், தான் மணமானவன் இல்லை என்பதைத்

தெரியப்படுத்துவது யாருக்காக..? வேலைக்கான 'பயோடேட்டா'வில், கல்யாணத் தகவல் மையம் எதிர்பார்க்கும்

 

தகவல்கள் எதற்காக..?

 

சமுதாயப் பிரிவு தொடர்பான விவரங்கள். தனியார் துறையில் விண்ணப்பிக்கிற போது, இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்டாலும் தவறு இல்லை. இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

 

'உள்ளூர்' நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கிற, அய்யனார் / அங்கயற்கண்ணி (ஒரு உதாரணத்துக்கு மட்டுமே),

தான் எந்த நாட்டைச் சர்ந்தவர் (nationality) என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை.

 

தான் பிறந்த ஊர் அல்லது தன்னுடைய சொந்த ஊர் பற்றி......? யோசியுங்கள்.

(உங்க 'சொந்த' ஊரு, எங்கே இருக்கு..? எப்படிப் போகணும்...?

'தெரியாது சார். போனது இல்லை'!!!)

 

அங்க அடையாளங்கள் (personal marks of identification) எல்லாம், 'பாஸ்போர்ட்'டுக்கு அவசியம் தேவை.

 

வேலைக்கு விண்ணப்பிக்கிற போது வேண்டாம். இரத்த வகை (blood group), உடன் பிறந்தோர் பற்றிய விவரங்கள்,

தாய், தந்தையின் தொழில், வருமானம்.... இவை எதுவுமே, குறைந்தபட்சம் தனியார் துறைக்கு விண்ணப்பிக்கும் போது,

தேவை இல்லை. மீண்டும் சொல்கிறோம். குறிப்பிடுவது தவறு இல்லை. ஆனால் அதனால் யாருக்கும் பெரிய அளவில்

 

பயன் இல்லை. அவ்வளவுதான். ஆகவே இவ்விவரங்களை, 'பயோடேட்டா'வின் பிற்பாதியில் இடம் பெறச் செய்யலாம்.

 

இனி..., ஒரு 'பயோடேட்டா' எப்படி இருக்கலாம்...? மாதிரிக்கு ஒன்றைப் பார்ப்போமா...?

 

 முந்தைய அத்தியாயத்தைப் படிக்க


 

 

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ